name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நாலடியார் (22) வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் !

ஞாயிறு, ஜனவரி 24, 2021

நாலடியார் (22) வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் !

வாழ்நாள் எனும் நாட்காட்டிச் சீட்டு  கதிரவனால் அன்றாடம் கிழிக்கப்படுகிறது !

சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட நாலடியார், நானூறு வெண்பாக்களைக் கொண்ட ஒர் அறநூல்.  கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாகக்  கருதப்படும் இந்நூல் பதினெண் கீழ்க் கணக்கு என்னும் வகைப்பாட்டின் கீழ் வருகிறது. திருக்குறளைப் போல அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது.  இதிலிருந்து ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (22)

--------------------------

வாழ்நாட்  கலகா  வயங்கொளி  மண்டிலம்

வீழ்நாள்  படாஅ   தெழுதலால்  வாழ்நாள்

உலவாமுன்  ஒப்புர  வாற்றுமின்  யாரும்

நிலவார்  நிலமிசை  மேல்.

------------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------

வாழ்நாட்கு  அலகா  வயங்கு  ஒளி  மண்டிலம்,

வீழ்நாள்  படாஅது  எழுதலால்,  வாழ்நாள்

உலவா முன்  ஒப்புரவு  ஆற்றுமின் ! யாரும்

நிலவார்  நிலமிசை  மேல்.

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------

மனிதன்  வாழும் நாள்களைக் கணிக்கும்   அளவு கோல்  போலஒளி மண்டிலமாகிய  சூரியன் அன்றாடம் எழுந்து, மறைந்து  அவனது வாழும் நாள்களைக்  கழித்துக் கொண்டிருக்கிறது !

ஆகையால், உங்கள் வாழ்நாள்  குறைந்து போவதற்கு முன், உங்களிடமுள்ள  செல்வத்தைப் பிறருக்கும் பகிர்ந்தளித்துக் கூடி வாழும் ஒப்புரவு வாழ்க்கையைக் கடைப்பிடியுங்கள் !

கூடி வாழாமல்  தனித்து,  இவ்வுலகில் யாரும் நிலையாக வாழ்ந்தது இல்லை  என்ற உண்மையை உணருங்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

வாழ்நாட்கு = மனிதன் உயிரோடிருக்கும்  காலத்தினை  ; அலகு ஆய் = கணிக்கும் அளவு கோல் போல; வயங்கு ஒளி மண்டிலம் = விளங்குகிற ஒளி மிக்க சூரியன்;  வீழ்நாள் படாது =  பயனில்லாத காலம் என எதையும் கழிக்காமல்;  எழுதலால் = அன்றாடம்  கிழக்கே எழுந்து மேற்கே மறைவதால் ;  வாழ்நாள் உலவா முன் – உங்கள் வாணாள்   முடிவதற்கு முன்; ஒப்புரவு ஆற்றுமின் =  அறச் செயல்களைச் செய்து  ஒற்றுமையாகக் கூடி வாழுங்கள் யாரும் = (ஏனெனில்) எப்படிப்பட்டவரும்;  நிலமிசைமேல் = இந்தப்  பூமியின் மேல்;  நிலவார் = நிலையாக வாழ்வது கிடையாது !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 11]

(24-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .