கொத்து (01)
மலர் (043)
--------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை அலுவலகத்தில் சிறிது காலம்
பணியாற்றிவிட்டு, பணியிலிருந்து நீக்கம் பெற்று விலகிச்
சென்ற எனது உதவியாளர் பெ.இராசகோபாலனுக்கு
அளிக்கப்பெற்ற
தேனீர் விருந்தில் நான் ஆற்றிய உரை !
(ஆண்டு.1971)
(ஆண்டு.1971)
----------------------------------------------------------
ஆறாத அன்புநிறை அவைத்தலைவ ! செயல்பறவ !
சீறாத உணர்வலைகள் சிந்தையுள ஊழியர்காள் !
மாறாத நன்னினைவை மனதிருத்திப் பிரிந்தேகும்
ஏறாத மலைமுடியீர் ! இயம்புவநான் நல்வணக்கம் !
வானுயரப் பறக்கின்ற பருந்தைப் போல
வல்லாண்மைப் புகழ்கொண்ட வல்லோர் ஊடே ,
கானுறையும் கௌதாரிப் பறவை அன்ன
கற்றோரின் நடுவினிலே நிற்கின்றேன் யான் !
கோனுயரப் பாடுகின்ற புலவர் போல ,
குழுமியுள்ள ஊழியர்காள் பொறுமை கொள்க !
நானுயர வழிதேடி வந்தேன் இல்லை ,
நவின்றிடுவேன் நல்வணக்கம் ஏற்றுக் கொள்க !
சிலதிங்கள் இம்மனையில் பணிகள் ஆற்றி ,
சிந்திவிழும் தேன்துளிபோல் சிதறிச் செல்லும்
மலரனையோய் தங்களது அறிவின் மாட்சி
மாளாது ! மறையாது ! மடிவும் ஏது ?
பணிபுரிந்த காலமதைக் கைவிரலில் எண்ணிடலாம் !
பழகிவந்த நல்முறையைச் சிலவரியில் கூறிடலாம் !
அணிமிகுந்த ஒப்புரவைக் கவிதைகளில் பாடிடலாம் !
அழியாத நினைவூற்றை அடைத்திடுதல் இயலாது
ஊக்கம் மிகவுண்டு ; ஒப்புரவு அறிகின்றீர் ,
உறுவலியைக் கைக்கொண்டு வினைபலவே ஆற்றவலீர் !
ஆக்கம் பெறுதற்கு ஆள்வலிமை உண்டாகின் ,
ஏற்றம் அடைவதுடன் இசையுடனே வாழ்ந்திடலாம் !
காலத்தின் கோலமிது வருந்தல் வேண்டா !
கற்பூரம் என்றைக்கும் மணமே போகா !
ஞாலத்தில் தங்கட்கும் ஏற்றம் உண்டு !
நலமுடனே வாழ்ந்திடுவீர் ! புகழ்ச்சி இல்லை !
அன்னைத் தமிழ்த்தாயின் அருளென்றும் நுமக்குண்டு !
ஆதவனாம் அண்ணாவின் நல்லாசி மிகவுண்டு !
மன்றத்துள் கூடியுள மனங்களெலாம் வாழ்த்துதுவே !!
மங்காத ஒளிவிளக்கே ! வாழியநீர் ! வாழியவே !
அறிவிற்கும் செயலுக்கும் அழிவே இல்லை !
அடைந்திடுவீர் வெகுவிரைவில் உயர்வை நீரே !
முறிந்துவிட்ட தளிரேநீர் முயன்றால் வாழ்வில் ,
மூதறிஞர் அண்ணாபோல் வாழ்வீர் ! வாழி !!
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------------------------