கொத்து (01) மலர் (37)
------------------------------------------------------------------------------------------------------
குறிஞ்சி மலர் திங்களேடு அறிவித்த “படத்துக்குப் பாடல்”
போட்டிக்காக, அவ்வேட்டில் வெளியிடப்பெற்ற படத்தை வைத்து
எழுதி அனுப்பிய கவிதை !
(ஆண்டு 1970)
(ஆண்டு 1970)
------------------------------------------------------------------------------
என்னருமைக் காதலியே ! ஏந்திழையே ! மாந்தளிரே !
இன்பப் புனலூற்றே ! இன்னமுதே ! பூங்குயிலே !
அன்னமே ! அஞ்சுகமே ! ஆழிவிளை நன்முத்தே !
அன்புப் பாலூட்டும் அழகுதமிழ்ப் பூங்கொடியே !
உன்வதனம் வானகத்தில் ஒளிவீசும் நிலவாமோ ?
ஒற்றைக் கொடிப்புருவம் மன்மதனின் வில்லாமோ ?
கன்னங்கள் தேன்குடமோ ? கருநாவல் நின்விழியோ ?
கற்கண்டுப் படிகந்தான் காரிகையுன் பல்வரியோ ?
கருவுற்ற கொண்டல்தான் கார்குழலோ ? காதுமடல்
கண்கவரும் குறிஞ்சிப்பூ கதைகூறும் காவியமோ ?
அருஞ்சுவைப் பலச்சுளையில் ஆக்கியதோ செவ்விதழ்கள் ?
ஆரணங்கு நின்கழுத்து அழகுமயில் சீதனமோ ?
கரும்புக் கரமிரண்டில் காந்தளேன் பூத்ததடி ?
கடல்நுரையும் சந்தனமும் கலந்ததுவோ மேனியடி ?
வேழத்தின் மருப்பாமோ வேய்ங்குழல் நின்கால்கள் ?
வெண்கதலித் தண்டோ வெள்ளரியோ நின்கரங்கள் ?
காழகமும் நாணுகின்ற கட்டழகி நின்னடிதான் ,
கஞ்சமலர் இதழாமோ ? கவினன்னத் தூவிகளோ ?
தாழம்பூ மடலே ! என் தங்கமணிக் கோபுரமே !
தமிழே ! தமிழ்தந்த தாரகையே ! வாழியவே !
அழகுமிகு அம்புலியே ! ஆயிழையே ! வாழியவே !
அமுதம் நிகர்த்தவளே ! ஆருயிரே ! வாழியவே !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------