நன்றி சொல்லத் தெரிந்தவன் நல்ல நண்பர்களைப் பெறுவான் !
மனிதன் என்ற உயிரினத்திற்கு
இலக்கணம் சொல் என்று பத்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்டார்; பிற உயிரினங்களிடம் இல்லாத ‘இரண்டு கரங்களை’ப் பெற்றிருக்கும் உயிரினம் குரங்கைத் தவிர, ”மனிதன்”
மட்டுமே என்றான் தூயமணி !
சிரிக்கத் தெரிந்த ஒரே
உயிரினம்,
இப்பூவுலகில், “மனிதன்”தான்
என்றாள் மகிழ்மதி. பிற உயிரினங்களுக்குச் சிந்திக்கத் தெரியாது;
மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கத் தெரியும் என்றான் நாவலர்நம்பி.
பேசத்தெரிந்த உயிரினம் “மனிதன்” மட்டுமே என்றாள் கனித்தமிழ் !
அனைத்தும் சரியான விடைகள்
தான்;
எனினும் இன்னும் ஒரு சிறப்பு மனிதனிடம் இருக்கிறது; மனிதனுக்கு மட்டுமே தன் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லாலும் செயலாலும் வெளிப்
படுத்தத் தெரியும். பிற உயிரினங்களிடம் இல்லாத இச்சிறப்பு மனித
இனத்திற்கே உரியது என்று விளக்கம் தந்தார் ஆசிரியர் நலங்கிள்ளி !
இத்தகைய சிறப்பு வாய்ந்த
உயர்ந்த பிறவியைப் பெற்றிருக்கும் மனிதர்கள், தங்கள் சிறப்பை
முறையாக வெளிப்படுத்துகிறார்களா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !
பிறர் நமக்கு உதவி செய்யும்
போது,
அவர்களுக்கு உள்ளன்புடன் நன்றி சொல்வது நயத்தக்க நாகரிகம்; நற்பண்பு ! உதவிகளைப்
பெற்றுப் பயனடையும் மாந்தர்களில் எத்துணை பேர் நன்றி சொல்கிறார்கள்? செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள், எளியவர்கள் செய்யும்
உதவிக்கு நன்றி சொல்வதில்லை. மெத்தப் படித்த அறிவாளிகள் அறிவுச்
செருக்கால், பிறர் செய்யும் உதவிக்கு நன்றி சொல்ல முன்வருவது
இல்லை !
அதிகாரத்தில் உயர்ந்தவர்கள், சார்நிலை அலுவலர்களிடம் உதவி பெறுவார்கள்; ஆனால் நன்றி
சொல்ல மனம் ஒப்புவதில்லை. அரசியல் சாயத்தில் தோய்ந்த அழுக்குமன
மாமணிகள் “நன்றி” என்னும் சொல் இருப்பதையே
மறந்து போனவர்கள் ! சமுதாயத்தில்
கீழ்நிலையில் உள்ள எளிய மனிதர்களுக்கு நன்றி சொல்லத் தெரிவது இல்லை ! நன்றி சொல்வது நல்லதொரு பண்பாடு என்னும் எண்ணம் இல்லாத எவரும் நன்றி சொல்வது
இல்லை !
நன்றி சொல்லத் தெரிந்தவன்
நல்ல நண்பர்களைப் பெறுவான்; உள்ளன்போடு நன்றி சொல்பவன் உயர்ந்த மனிதர்களின் உதவியைப் பெறுவான்.
அடிக்கடி நன்றி சொல்பவன் அவனது சொந்த வாழ்க்கையில் என்றும் ஏறுமுகத்தையே எய்துவான் !
”நன்றி”
என்று நாக்கூசாது சொல்லத் தெரிந்தவனிடம், தாழ்வு
மனப்பான்மை இருந்தால் அது தகர்ந்து போகும் ! உயர்வு மனப்பான்மை
இருந்தால் அது உடைந்து நொறுங்கும் ! ஆணவம் அவனிடம் அண்டி வளராது
! கோபம் அவனிடம் குடிகொள்ள இயலாது ! ”மனிதம்”
அவனிடம் மலர்ந்து மணம் பரப்பும் !
நண்பர்களே ! உங்கள் குழந்தைகளுக்கு நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள் ! அவர்கள் வாழ்க்கையில் உயர்நிலையை அடைவார்கள் ! நல்ல கல்வி,
நல்ல நட்பு, நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள் அவர்களை வந்து அடையும் ! நிறைவாக ஒன்று
– முடிந்தால் நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் – இதுவரை இப்பழக்கம் உங்களிடம் இல்லாதிருந்தால் !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.ஆ:2050:கடகம்,10]
{26-07-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்
குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------