கோயில்கள் இருப்பது தமிழ் நாட்டில் ! கும்பிடும் தெய்வங்களின் பெயரோ சமற்கிருதத்தில் !
தமிழக மக்களே ! நீங்கள் வணங்கும் தெய்வப் பெயர்களைப் பாருங்கள் ! எடுத்துக் காட்டுக்காக ஒரு சில :-
சுயம்பீஸ்வர சுவாமி – லோகநாயகி...............[ நரசிங்கன் பேட்டை ]
ஜம்புஹேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி........[ திருவானைக்காவல் ]
சிதம்பரேஸ்வரர் – சிவகாமி அம்பாள்...............[ திருவிசைநல்லூர் ]
சித்தேஸ்வரர் – சித்தாம்பிகை...........................[ திருச்சினம்பூண்டி ]
ராஜகோபாலசுவாமி – செங்கமலவல்லித் தாயார்......................[ மன்னார்குடி ]
வீரட்டேஸ்வரர் – ஞானாம்பிகை...............................[
திருக்குறுக்கை ]
கும்பேஸ்வரர் – மங்களாம்பிகை...............................[
கும்பகோணம் ]
சிவானந்தேஸ்வரர் – ஆனந்தவல்லியம்மன்...............................[ திருக்கள்ளம் ]
அமிர்தகடேஸ்வரர் – அபிராமியம்மன்.....................[ திருக்கடையூர் ]
ஸ்ரீதளிநாதர் – சிவகாமியம்மன்....................................[
திருப்பத்தூர் ]
வைத்தீஸ்வரன் – தையல்நாயகி அம்மன்...............[ வைத்தீஸ்வரன்கோயில்]
புஷ்பவனேஸ்வரர் – சௌந்தராம்பிகை...............[திருப்பூந்துருத்தி]
சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன்..........................................[ மதுரை ]
மயூரநாதசுவாமி – அபயாம்பிகை அம்மன்...........[ மயிலாடுதுறை ]
நேத்திரார்ப்பணேஸ்வரர் – சுந்தரகுசாம்பிகை.[ திருவீழிமிழலை ]
பவ ஔஷதீஸ்வரர் – பிரஹந்நாயகி அம்மன்............[ திருத்துறைப்பூண்டி.]
வேதாரண்யேஸ்வரர் – வேதநாயகி அம்மன்......[ திருமறைக்காடு ]
கோகர்ணேஸ்வரர் – பிரஹந்நாயகி அம்மன்...........[ புதுகோட்டை ]
இந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்கள் எல்லாம் எங்கு உள்ளன ? தமிழ்நாட்டில் ! இந்தத் தெய்வங்களை வழிபடும் மக்கள் எந்த நாட்டினர் ? தமிழ் நாட்டினர் !
இந்தத் தெய்வங்களுக்காக விழா எடுப்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தக் கோயில்களை எடுத்துக் கட்டிக் குடமுழுக்கு செய்பவர்கள் யார் ? தமிழர்கள் ! இந்தத் தெய்வப் பெயர்கள் எல்லாம் எந்த மொழியில் உள்ளன ? சமற்கிருத மொழியில் !
இந்தக் கோயில்களில் எந்த மொழியில் பூசனை (அர்ச்சனை) செய்யப்படுகிறது ? சமற்கிருத மொழியில் ! சமற்கிருதத்தில் பூசனை (அர்ச்சனை) செய்தால் தான் இந்தத் தெய்வங்களின் அருள் கிடைக்குமா ? (இந்த வினாவுக்கு எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.)
இந்தத் தெய்வங்களின் பெயர்களைச் சமற்கிருத்ததில் மாற்றியது யார் ? (இந்த வினாவுக்கும் எந்தத் தமிழனும் பதில் சொல்ல மாட்டான்.). தமிழ்நாட்டில் மக்களின் தாய் மொழி தமிழ். அவர்களது பேச்சு மொழி தமிழ். எழுத்து மொழி தமிழ். ஆட்சி மொழி தமிழ். தெய்வப் பெயர்கள் மட்டும் தமிழில் இருக்கக் கூடாதா ? தெய்வத்தின் அருள் வேண்டித் தொழுகின்ற மொழி தமிழில் இருக்கக் கூடாதா ?
தூங்காதே தம்பி தூங்காதே ! என்று பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடியதற்குப் பொருள் புரியவில்லையா தமிழர்களே ! தூங்கித் தூங்கியே பலவற்றை இழந்தீர்கள் ! தமிழையும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள் !
கோயில்களில் தமிழ் இல்லை ! கோயில்களில் குடி கொண்டுள்ள தெய்வப் பெயர்களில் தமிழ் இல்லை ! நீதி மன்றங்களில் தமிழ் இல்லை ! நெடுந்தெரு அங்காடிப் பலகைகளில் தமிழ் இல்லை !
மழலையர் பள்ளிகளில் தமிழ் இல்லை ! இல்லங்களில் நிகழும் உரையாடலில் தமிழ் இல்லை ! தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது ! தமிழையே மறந்து கொண்டிருக்கிறோம் !
தமிழை மதிக்கத் தவறும் தமிழர்களே ! தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற பாட்டினைப் பாடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை !! தமிழன் என்ற உணர்வை இழந்து, உரிமைகளை இழந்து, அடையாளத்தையும் இழந்து, பொட்டுப் பூச்சியாய், புன்மைத் தேரையாய் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழனே !!
இனி நீ தமிழனென்று சொல்லாதே ! தலை நிமிர்ந்து நில்லாதே !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.ஆ:2049, நளி,25.]
(11-12-2018)
---------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------