name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (10) நோற்றுச் சுவர்க்கம் !

அழகிய பெண்ணே ! எழுந்து வா ! 


நோற்றுச்  சுவர்க்கம்  புகுகின்ற  அம்மனாய்
.........மாற்றமும்  தாராரோ  வாசல்  திறவாதார்,
நாற்றத்  துழாய்முடி  நாராயணன்  நம்மால்
.........போற்றப் பறைதரும்  புண்ணியனால்  பண்டுஒருநாள்,
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,
.........தோற்றும்  உனக்கே  பெருந்துயில்தான்  தந்தானோ !
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே !
.........தேற்றமாய் வந்து திற! ஏல்ஒர்  எம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
--------------

என்ன தூக்கமடி இது ? இப்படித் தூங்கித்தானே முன்பு கும்பகர்ணன் எமன் வாயில் வீழ்ந்தான். போரில் இராமனிடம் தோற்ற பின்பு , தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உன்னிடம் தந்துவிட்டானா ? மணம் பரப்பும் திருத் துழாய் மாலையை (துளசி மாலையை) மணிமுடியில் அணிந்திருக்கும் நாராயணன் நமது வெறும் பாடலை வாங்கிக் கொண்டு பரிசு தரும் புண்ணியன் அல்லவா ? அவனை எண்ணி நோன்பு நோற்றுச் சொர்க்கம் புக வேண்டும்.  இடைவிடாமல்  தூங்கும் ! அழகிய பெண்ணே ! தூக்கக் கலக்கம் நீங்கி மெல்ல வந்து கதவைத் திற !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
-------------------------

நோற்று = நோன்பு இருந்து; சுவர்க்கம் புகுகின்ற = சொர்க்கலோகம் செல்கின்ற  நல்வாய்ப்பைப் பெறவிருக்கும்; அம்மனாய் = பெண்ணே; மாற்றமும் = மறுமொழியும் ; தாராரோ = தருவாயோ; வாசல் திறவாதார் = வாசல் கதவைத் திறப்ப்பாயோ; நாற்றத் துழாய் = மணமுள்ள துளசி மாலை; முடி = அணிந்திருக்கின்ற; நம்மால் போற்றப் பறை தரும் = நமது வெறும் பாடலை வாங்கிக்கொண்டு  பரிசு தரும்;  புண்ணியனால் = புண்ணிய மூர்த்தியாகிய கண்ணனால்; பண்டொரு நாள் = முன்பொரு காலத்தில் ; கூற்றத்தின் வாய் வீழ்ந்த = மடிந்து போன; கும்பகரணனும் = இராவணன் தம்பியாகிய கும்பகரணனும்; தோற்றும் = இராமனுடனான போரில் தோற்ற பின்பு; உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ = அவனிடமிருந்த பேருறக்கம் என்னும் பழக்கத்தை உனக்குத் தந்து விட்டானா; ஆற்ற அனந்தல் உடையாய் = உறக்கக் கலக்கத்தில் இருப்பவளே; அருங்கலமே = அழகிய பெண்ணே; தேற்றமாய் வந்து = தூக்கம் தெளிந்து வந்து; திறவேலோர் = கதவைத் திறவாய்; எம்பாவாய் = எமது பதுமை போன்ற பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,09.]
{24-12-2018}
-----------------------------------------------------------------------------------------------------------
         “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------