மாதங்களில் இது மார்கழி ! ஒளி நிறைந்த நன்னாள் !
மார்கழி மாதம் ! வைகறை நேரம் ! உடலில் சில்லென்று
மோதிச் செல்லும் இளங் காற்று ! வெண்பட்டு விரித்தது போன்று எங்கும் பனிப் போர்வை !
நீராடப் போகிறார்கள் இளம் பெண்கள் ! யாரிவர்கள்
?
------------------------------------------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
.........நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் !
.........கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
.........கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
நாரா யணனே நமக்கே பறைதருவான்,
.........பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !
------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
மாதங்களில் இது மார்கழி ! வானிலும் மண்ணிலும் ஒளி நிறைந்த நன்னாள் ! மங்கையரே ! வாருங்கள் ! நீராடச் செல்வோம். சீர் நிறைந்த ஆயர்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமியரே ! கூரிய வேலும், கொடிய தொழிலும் கொண்ட நந்தகோபனுக்குக் குமாரனாக வந்தவன், அழகு வழியும் கருங்கண்ணாள் யசோதையின் இளஞ்சிங்கம், கறுத்த மேனியும், சிவந்த கண்ணும், கதிரவன் போல் முகமும் கொண்டவன் ! அவர் பெயர் நாராயணன் ! அவனே நமக்கு நோன்புப் பரிசு தருவான் ! உலகம் புகழ அவன் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம் ! வாருங்கள் !
--------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------
மதி நிறைந்த நன்னாள் = எங்கும் ஒளி பெருகும் வைகறைப் பொழுது; போதுவீர் = வருவீர்; போதுமினோ = வாருங்கள்; கூர்வேல் கொடுந்தொழிலன் = கூர்வேல் கொண்டு போரிடும் ஆற்றல் பெற்றவன்; ஏரார்ந்த = அழகிய; கண்ணி = கண்களை உடைய; கதிர் மதியம் = கதிரவனின் கதிர்கள்; நாரம் = நீர் (கடல்), அயணன் = செல்பவன்; நாராயணன் = திருப்பாற்கடலில் அலைவழியே பயணிப்பவன்; பறை = அருள்; படிந்து = நீராடி; ஏலோர் = வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற சிறுமியரே.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2049, நளி,29.]
{15-12-2018}
------------------------------------------------------------------------------------------------------------