name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

நல்வழி (09) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் !

வற்றிவிட்டாலும் கூட  ஆறு,  ஊற்று  நீரை  உலகுக்கு அளிக்கிறது !

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப்   பெருக்கற்    றடிசுடு  மந்நாளு  மவ்வாறு
ஊற்றுப்   பெருக்கால்  உலகூட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்லகுடிப்  பிறந்தார்  நல்கூர்ந்த   ரானாலும்
இல்லையென  மாட்டா    ரிசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்  -  ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:
---------------------

ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய், நடந்து செல்வோரின் பாதங்களை ஆற்று மணல் சுட்டெரிக்கும்  கோடை காலத்திலும் கூட, அந்த ஆறானது, ஊற்று நீரைத் தந்து, மக்களின் தாகத்தைத் தணிக்கிறது. அதுபோல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வமெலாம் இழந்து வறுமை உற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்துஇல்லைஎனச் சொல்ல மாட்டார்கள். (இயன்றதைத் தருவர் எனப் பொருள்)

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:
------------------------------------

பெருக்கு = நீர்ப் பெருக்கு ; அற்று = வறண்டுபோய் ; அடி சுடும் = நடப்போர்  பாதங்களை மணல் சுடுகின்ற ; ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் ; உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ; ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு ; நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் ; நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) ; இசைந்து = மனம் ஒப்பி.

------------------------------------------------------------------------------------------------------------
        
  “தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை

------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.: 2050, மீனம்,05]
{19-03-2019}

------------------------------------------------------------------------------------------------------------