name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல் (11) வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் !

செவ்வாய், மே 03, 2022

வீரராகவர் பாடல் (11) வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் !

உனக்குத் திருமணம் செய்விக்கப் பெண் கிடைப்பதில்லையே !

------------------------------------------------------------------------------------------------------------

கண்பார்வையை இழந்திருந்தாலும் தமிழ்க் கல்வியைக் கசடறக் கற்று ஊர் புகழும் கவிஞராகத் திகழ்ந்தவர் ”அந்தகக் கவி வீரராகவ முதலியார்”. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் என்பதாகும் !

பல அரிய பாடல்களைப் பாடியுள்ள இவர் பத்துக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை இயற்றியுள்ளார். அவர்து பாடல் தொகுதியிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக :--

-----------------------------------------------------------------------------------------------------------

வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்

ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்

ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்

பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே. 

----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

--------------------------------------------------

வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் வேண்டும் என்றால்

ஆரும் கொடார் ! உங்கள் அப்பன் கபாலி ! அம்மான் திருடன் !

ஊரும் செங்காடு ! நின் தன் முகம் யானை ! உனக்கு இளையோன்

பேரும் கடம்பன் ! நின் தாய் நீலி ! நிற்கும் பெரு வயிறே !

------------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

வீரச் செயல்கள் பல புரிகின்ற பிள்ளையே ! உனக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றால் யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லையே ! காரணம் என்ன தெரியுமா ? உன் தந்தையோ கையில் மண்டையோட்டை ஏந்திக் கொண்டிருக்கும் கபாலியாக இருக்கிறான் ! அவன் குடியிருக்கும் இடமோ  (செங்காடு) சுடுகாடு ! உன் அம்மானோ (மாமன்) வீடு வீடாகச் சென்று வெண்ணெய் திருடித் தின்று வருபவன்  ! உன் தம்பி பெயரோ  (கடம்பன்) முரடன் ! உன் தாய் (நீலி) கருப்பி ! உனக்குப் பானை வயிறு !  யானைமுகம் !  யாரப்பா உனக்குப் பெண் தருவார்கள் ?

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

--------------------------------------

ஆரும் = யாரும் ; கொடார் = கொடுக்கமாட்டார் ; கபாலி = கையில் மண்டையோடு வைத்திருப்பவன் ; அம்மான் = மாமன் ;  செங்காடு =  சுடுகாடு ; கடம்பன் = முரடன் ; நீலி = கறுப்பு நிறத்தவள் ; நிற்கும் = நினக்கும் ;

-----------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

--------------------

பிள்ளையாரை இகழ்வது போல் புகழும் பாடல். இது வஞ்சப் புகழ்ச்சி எனப்படும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப்பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 20]

{03-05-2022}

-----------------------------------------------------------------------------------------------------------

பிள்ளையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .