name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: வீரராகவர் பாடல் (08) சீராடை யற்ற வைரவன் வாகனம் !

ஞாயிறு, மே 01, 2022

வீரராகவர் பாடல் (08) சீராடை யற்ற வைரவன் வாகனம் !

கட்டுச் சோற்றை நாய் கவ்விக் கொண்டு போயிற்றே !

------------------------------------------------------------------------------------------------------------

அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு பிறப்பிலேயே கண்பார்வை இல்லாமற் போயிற்று. கண்பார்வை இல்லாவிட்டாலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி அனைவரும் விதந்து போற்றும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞர் தொண்டைமண்டலத்தில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். அவரது அரிய பாடல் ஒன்றைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்:

----------------------------------------------------------------------------------------------------------

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே!

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------------

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து,

பார் ஆரும் நான்முகன் வானம் தன்னை முன்பற்றிக் கௌவி

நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------

சீராடை = அணியும் ஆடை ; அற்ற = இல்லாத ; வைரவன் வாகனம் = வைரவனின் வாகனமாகிய நாய் ஒன்று ; சேரவந்து = அருகில் வந்து ; பாராரும் = நிலத்திலிருந்த (அதாவது என் அருகில் தரையில் வைக்கப்பட்டிருந்த) ; நான்முகன் வாகனம் தன்னை = நான்முகக் கடவுளின் வாகனமாகிய அன்னத்தை (அன்னம் = சோறு - அதாவது சோற்றினை – கட்டுச் சோற்று மூட்டையினை) 

முன்பற்றிக் கௌவி = வாயில் கௌவிக் கொண்டு ; நாராயணன் உயர் வாகனம் = கருடன் (அதாவது கருடனைப் போல்) ஆயிற்று = விரைந்து சென்று விட்டது) ; நம்மை முகம் பாரான் = பசியால் வாடியிருக்கும் நம் (என்) முகத்தை பாராமல் - இரக்கமில்லாமல்; மை வாகனன் = (மை எனப்படும்) ஆட்டினை வாகனமாகக் கொண்டிருக்கும் அக்னி பகவான் (அதாவது பசி என்னும் நெருப்பு); வந்தே வயிற்றில் பற்றினனே = வயிற்றில் பற்றிக் கொண்டது.

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

கட்டுச் சோற்று மூட்டையினை என்னருகில் தரையில் வைத்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று சோற்று மூட்டையைக் கவ்விக் கொண்டு கருடன் போல விரைந்து ஓடிவிட்டது. என் வயிற்றில் பசி என்னும் தீ பற்றிக் கொண்டு என்னை வாட்டுகிறது !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர், 

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .