தம்பிக்கு எதிராக கைகளில் வில்லை
ஏந்திடலாமா ?
-----------------------------------------------------------------------------------------------------
சீர்காழிப் பகுதியை ஆண்ட
சிற்றரசன் அபிராமன். அவனுடைய தம்பி அபிராமனுக்கு
எதிராகச் செயல்பட்டதால், அவனுடன் போரிட்டு அடக்க முடிவு செய்து, கைகளில் வில்லுடன்
போர்க்களம் புக முற்பட்டான் அபிராமன் !
இதைக் கேள்விப்பட்ட
வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை. அபிராமன்
தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை அபிராமனின்
போர் முடிவைக் கைவிடச் செய்தது !
சிற்றரசன் அபிராமனை
இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:
-----------------------------------------------------------------------------------------------------
வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !
ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி
அலையடைத்த செங்கை யபிராமா வின்று
சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.
-----------------------------------------------------------------------------------------------------
-------------------------
(அபி) ராமா ! நீ
இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை
அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா
மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை; உன் பெயர்
அபிராமன். சீர்காழி நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக, தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக் காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக உன் கைகளில் சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !
------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-----------------------
வாழும்
இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நீ இராவணனுமில்லை ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும்
இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த
= கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ
(இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்) ; செங்கை அபிராமா = சிவந்த கைகளையுடைய அபிராமா ;
இன்று = இத்தகைய மாண்புடைய நீ இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக உன்
கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக !
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[திருவள்ளுவராண்டு:
2053, மேழம் (சித்திரை) 17]
{30-04-2022}
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .