name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக்கடிகை (30) கற்பக் கழிமடம் அஃகும் !

வியாழன், அக்டோபர் 14, 2021

நான்மணிக்கடிகை (30) கற்பக் கழிமடம் அஃகும் !

 

சங்க கால இலக்கியமான நான்மணிக்கடிகை  முழுவதும் வெண்பாக்களால் ஆனது. ஒன்னொரு பாடலிலும்  நந்நான்கு  கருத்துகள் சொல்லப்படுகின்றன !  மதி மன்னு மாயவன்  வாள்முகம் ஒக்கும்என்னும்  கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இந்நூலாசிரியர் திருமால் வழிபாட்டினர் என்பது புலனாகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !

--------------------------------------------------------------------------------------------------------

 பாடல் எண்: (30)

---------------------------

 

கற்பக்    கழிமடம்    அஃகும்  மடம்அஃகப்

புற்கந்தீர்ந்  திவ்வுலகின்  கோளுணருங்  கோளுணர்ந்தால்

தத்துவ  மான  நெறிபடரும்  அந்நெறி

இப்பா  லுலகின்  இசைநிறீஇ  -  உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.

 

(ஐந்து அடிகள் கொண்ட வெண்பாவாதலால், இதைப்   பஃறொடை  வெண்பா என்பர்)

-------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

----------------

 

அறிவார்ந்த  நூல்களைக்  கற்கக்  கற்க, மனிதனிடம் குடிகொண்டுள்ள  அறியாமை  மெல்லெ மெல்லக் குறைகிறது !

 

அறியாமை  குறையக்  குறைய  அவனிடம்  நிறைந்திருக்கும் புல்லறிவு (முட்டாள்தனம்) நீங்கி  , இவ்வுலகத்தைப்  புரிந்து  கொள்கிறான் !

 

உலக இயல்பைப் புரிந்து கொண்ட பின் , உண்மையான அருள் நெறியில்  நடைபயிலத்  தொடங்குகிறான் !

 

அருள்நெறியில் ஒழுகத் தொடங்குவதால் , இம்மையில் புகழை ஈட்டுவதுடன்,  மறுமையில் வீடுபேறும் எய்துகிறான் !

--------------------------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

-------------------------------------

கற்ப = ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால் ; கழிமடம் = மிக்க அறியாமை ; அஃகும் = குறையப் பெறுவான் ; மடம் அஃக = அறியாமை குறைய ; புற்கம் தீர்ந்து = புல்லறிவு நீங்கி ; இவ்வுலகின் = இவ்வுலகத்தின் ; கோள் உணரும் = இயற்கையைப்  புரிந்து கொள்வான் ;  (கோள் = இயல்பு, இயற்கை) கோள் உணர்ந்தால் = அவ்வியற்கையை அறிந்து கொண்டால் ; தத்துவமான = உண்மையான ; நெறி படரும் = அருள் நெறியில் செல்வான் ; அந் நெறி = அந் நெறியினால் ; இப்பால் உலகின் = இவ்வுலகின்கண் ; இசைநிறீஇ = புகழ் நிறுத்தி ; உப்பால் = மறுமையில் ; உயர்ந்த உலகம் புகும் = உயர்ந்த வீடு பேறு அடைவான்.

 

------------------------------------------------------------------------------------------------------

 பின்குறிப்பு:-

----------------------

 

இப்பாடல் நான்மணிக் கடிகைக்கு உரிய  பாடலாகத் தெரியவில்லை; இடைச்செருகல் போல் தோன்றுகிறது.  தத்துவம்என்ற தமிழல்லாச் சொல் இடம்பெற்றிருப்பதும்,  இம்மை, மறுமை போன்ற கருத்துகள் புகுத்தப் பெற்றிருப்பதும் இடைச்செருகல் என்பதை  உணர்த்துகிறது !

-----------------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை;


வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),31]

{17-09-2019}

-----------------------------------------------------------------------------------------------

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .