name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (83) வெறுப்புணர்வு விலகும் காலம் வாராதா ?

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2021

சிந்தனை செய் மனமே (83) வெறுப்புணர்வு விலகும் காலம் வாராதா ?

 

விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்கள் !

அன்பு, அமைதி, அடக்கம், அறிவுடைமை, வெகுளாமை, நல்லொழுக்கம், இன்மொழி ஆகியவை மனிதன் என்னும் சொல்லுக்கு இலக்கணமாக அமையும் பண்புகள் ! இவற்றில் எந்தவொன்று குறைந்தாலும் அவன் முழுமையான மனிதனாக மாட்டான் !


இந்தப் பண்புகளை இளமையிலேயே கற்றுத் தரவேண்டியவை பள்ளிக் கூடங்கள் ! ஆனால் இக்காலக் கல்விக் கொள்கையும் செயல் திட்டங்களும் தன் அடிப்படைத் தடத்திலிருந்து புரண்டு, திசை தவறித் தொலைவாகப் போய்விட்டன. இக்கால மாணவர்கள், தம் வாழ்விடச் சூழலுக்கு ஏற்ப, தாமாகவே சிலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்பவற்றுள் நல்லனவும் உள்ளன; தீயனவும் இருக்கவே செய்கின்றன !


இளமைப் பருவத்தில் இருப்பவர்களைத் தம்பால் ஈர்க்கும் புறவுலகக் காரணிகள் நிரம்பவே இருக்கின்றன. அவற்றுள் பெரும் பங்கு வகிப்பது திரைப்படங்கள் ! இன்றைய திரைப்படங்கள் காதல்என்னும் ஒற்றை அடிக்கல்லின் மீது எழுப்பப் படும் அருவருப்பு மாளிகைகளாகத் திகழ்கின்றன. அடிக்கல்லை உருவிவிட்டால், கட்டடமே சரிந்து வீழ்ந்துவிடும் !


வாழ்வில் காதல் என்பது ஒரு சிறு பகுதி. இதற்கு அப்பாலும் பல நிகழ்வுகள் மனித வாழ்வில் நடை பெறுகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, “காதல்என்னும் மின்மினிப் பூச்சியை மட்டுமே பேசு பொருளாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற திரைப்படங்களின் எண்ணிக்கை இலக்கக் கணக்கில் (இலட்சக் கணக்கில்) பெருகி வருகின்றன !


நடைமுறை வாழ்வில் எந்தவொரு ஆணும் பெண்ணும், ஆற்றங்கரையிலும், அடர்ந்த காடுகளிலும், கடற்கரைகளிலும் மலை முகடுகளிலும் ஆடிப் பாடுவதும், அருவருப்பாகக் கட்டிப் பிடிப்பதும் நாம் காண முடியாத காட்சிகள் ! கட்டிப் பிடி, கட்டிப் பிடிடா, என்னைக் கண்டபடிக் கட்டிப் பிடிடாஎன்று ஓடியம் (OBSCURE) நிறைந்த பாடல் வேறு !


முகைப் பருவம் (TEEN - AGE) என்பது இயற்கையாகவே பாலுணர்வுகள் கிளர்ச்சி அடைகின்ற பருவம். இப்பருவத்தில், விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்களை நம் வீட்டு நடுக்கூடம் வரைக் கொண்டு வந்து சேர்ப்பதில் தான் தொலைக் காட்சி ஊடகங்களுக்குள் எத்துணைப் போட்டி !


பதினைந்து அகவைப் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடப் பாடங்களைச் சொல்லித் தந்தால், பிள்ளைகளின் எதிர்காலமும் வளம்பெறும்; நாடும் நலம் பெறும் ! ஆனால் காசு வெறி பிடித்த கயவர்களின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், காதலைப் பற்றிய காட்சிகளை மட்டுமே காட்சிப் படுத்தும் திரைப்படங்களைக் காட்டி அவர்களைப் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப் போக வைத்து விடுகின்றன !


இரண்டடி நீளக் குச்சியின் முனையில் சுவைக்கும் கோந்தினை (SEWING GUM) பிணித்து வைத்துக் கோயில் உண்டியலில் நுழைத்து பணத்தாள்களை வெளியில் எடுக்கும் திருட்டுக் கலையைச் சொல்லித் தந்தது ஒரு திரைப்படம். அதைப் பார்த்து அப்படியே செய்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகிறான் ஒரு கயவன் ! மாட்டிக் கொண்ட கயவனை மறந்துவிட்ட மக்கள் , சொல்லித் தந்த கயவனை மறவாமல் நினைவில் வைத்துக் கொண்டு , “ஆகா ! ஓகோஎன்று நாள்தோறும் கொண்டாடி மகிழும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ?


எப்படியெல்லாம் களவாணித்தனம் செய்வது என்பதைக் கற்றுக் கொடுக்கும் திரைப்படங்களுக்கு நம் நாட்டில் கட்டுப்பாடே கிடையாது. முத்தக் காட்சிகளைப் படத்தில் திணித்துப் பண்பாட்டுச் சீர்குலைவைப் பத்து அகவைச் சிறுவனுக்கும் கற்றுக் கொடுக்கும் பரமக்குடிப் பாண்டை மனிதர்கள் இப்போது அரசியலிலும் கால்பதித்துப் பகட்டுக் காட்ட முனைந்திருக்கிறார்கள் !


நான் உன்னை லவ் பண்றேன்” ” ஐ லவ் யூடா”, ” இந்த Figure எனக்கு work out ஆகுமாஎன்பன போன்ற கேவலமான சொற்கள் இடம்பெறாமல் எந்தத் திரைப்படமாவது வெளியாகிறதா ? “First Night” என்னும் சொல், உரையாடலில் இல்லாமல் நடிகர்கள் தோன்றும் காட்சி எந்தப் படத்திலாவது இருக்கிறதா ?


ஐந்து அகவை குழந்தை தன் தந்தையிடம் கேட்கிறது ,”அப்பா ! அந்த அங்கிள் First Night என்கிறாரே ! அப்படியென்றால் என்ன? “ இது தான் திரைப்படங்கள் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் நல்லொழுக்கப் பாடம். இத்தகைய படங்களை எடுக்கும் பன்றிக் கூட்டங்களையும் , காசுக்காக அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகையரையும் விளக்குமாற்றால் விளாசும் காலம் தமிழ்நாட்டில் வரவே வராதா ?


திரைப்படத்துறை என்பது இன்று கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது ! ஒழுக்கமுள்ள மனிதர்கள் மழைக்குக் கூட ஒதுங்க முடியாத கறுப்பு உலகமாகக் காட்சி அளிக்கிறது ! பணம் ! பணம் ! பணம் !” என்று பேயாக அலைகின்ற பித்தர்களின் முதலீட்டுத் தொழிலகமாகச் செழித்து வளர்ந்து நிற்கிறது !


130 கோடி மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் , அன்றாடம் உழைத்தால் தான் வயிறு நிரம்பும் என்ற நிலையில் 60 % மக்கள் இருக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்க்கைத் தரம் படைத்த மக்கள் நிரம்பவும் இருக்கின்ற ஒரு நாட்டில் திரைப்படம் என்னும் பொழுதுபோக்குக் கேளிக்கைக் கூத்துகள் தேவைதானா ?


அரசியலின் அடிப்படை நோக்கம் என்னவென்பதை அறியாத தேநீர்க்கடை வணிகர்கள் எல்லாம் நமக்குப் பொருளாதாரம் கற்றுக் கொடுக்க முனைந்து முன்வருகிறார்கள். யார் யார் எந்தப் பதவிக்குத் தகுதி படைத்தவர்கள் என்னும் கோட்பாட்டை பளிச்சென்று பகர்ந்திடாத சட்டங்களும், அவற்றை ஏந்தி நிற்கும் சட்டப் புத்தகங்களும் கயவாளிகளையும், களவாணிகளையும் அரசியல் அரங்கினுள் இழுத்து வந்து நிறுத்தி வைத்திருக்கின்றன !


கொரோனாவின் கொடிய தாண்டவத்தால் எத்தனை அல்லற்பட்டாலும், எத்தனை உறவினர்களையும் நண்பர்களையும் இழந்திருந்தாலும், அறிவை அடகு வைத்துவிட்டு, மீன் சந்தைகளிலும், துணிக் கடைகளிலும், ஐந்து பைசா ஊன்சோறு (பிரியாணி) விற்பனைக் கடைகளிலும் முட்டி மோதி முண்டியடித்து முன்னே செல்ல முயலும் முட்டாள்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை !


மக்களை நெறிப்படுத்தி, ஒழுங்கு தவறாமல் ஆட்சி செய்ய வேண்டிய அரசியல் ஆளிநர் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. பொழுது விடிந்தால், இன்று என்ன நல்ல திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கலாம் என்று சிந்திக்க வேண்டியஅறிஞர்கள்கூட்டம் இன்று எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கலாம்என்று சிந்திக்கிறது ! ஆட்பிடிப்புஅரசியலை நடத்தி, தங்களை அழுக்கு மனிதர்களாகக் காட்சிப் படுத்திக் கொள்ள அஞ்சுவதில்லை !


நாட்டில் நடக்கும் இத்தகைய அவலங்களைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன ! மக்களாட்சிக் கோட்பாடு சிதைக்கப்படுவதை நினைத்தால் வெறுப்புதான் விளைகிறது ! நல்லொழுக்கச் சிந்தையுள்ள எந்த மனிதனும்வெறுப்புஎன்னும் சகதியில் வீழ்ந்துவிடாமல் தாண்டிச் சென்று முன்னேற முடியவில்லை !


புதிய விடியல் நம்மை நாடி வருமா ? தீயன அழியுமா ? நல்லன நடக்குமா ? மனிதன் மனிதனாகமாறும் வரை இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை !

--------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 13]

{29-07-2021}

---------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .