name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (55) பதிகை ( CAMERA )

சனி, ஜூலை 25, 2020

புதிய தமிழ்ச் சொல் (55) பதிகை ( CAMERA )

புதுச் சொல் புனைவோம் !

பதிகை = CAMERA  !

----------------------------------------------------------------------------------------------

 

அழகான காட்சிகளைக் கண்டால் நிழற்படங்களாக அவற்றைப் பதிவு செய்து வைக்க விரும்புகிறோம் ! திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நிழற்படங்களாகவும், காணொலிகளாகவும் பதிவு செய்கிறோம். பிறந்த நாள் விழா, காதணி விழா, அறுபதாம் அகவை நிறைவு விழா, எண்பதாம் அகவைத் திருமுழுக்கு போன்ற முகாமையான நிகழ்வுகளைப் படமாக்கித் தொகுத்து வைப்பதில் நமக்கு என்றுமே தனி மகிழ்ச்சி உண்டு !


இவ்வாறு மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ அல்லது காட்சிகளையோ நிழற்படங்களாகப் பதிவு செய்து தருவதற்கு நமக்குப் பயன்படுபவை ”கேமரா” என்னும் கருவி !


கேமரா” என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ? புகைப்படக் கருவிநிழற்படக் கருவிஒளிப்படக் கருவி என்றெல்லாம் பலவாறாக ஒவ்வொருவரும் எழுதியும் பேசியும் வருகிறோம்இவை எல்லாம் நீண்ட வடிவம் கொண்ட சொற்கள்வடிவில் சிறியதாகவும்பொருள் பொதிந்ததாகவும்ஒலி நயம் மிக்கதாகவும்  புதிய சொல்லை உருவாக்குதல் தமிழுக்கு வளம் சேர்க்கும் அல்லவா ?

 

கேமரா” எப்படிச் செயல்படுகிறது ? தன் முன்னால் இருக்கும் உருவத்தைத் தன்னுள் செருகி வைக்கப்பட்டு இருக்கும் நினைவட்டை (MEMORY CARD) அல்லது குறுவட்டில் (MEMORY DISC) நிழல் உருவாகப் பதிவு செய்து வைக்கிறது.  அவற்றைப் பயன்படுத்திக் கணினி மூலம் தேவையான அளவுக்கு நாம் படியாக்கம் (COPYING) செய்து கொள்கிறோம் !

 

”கேமரா”வின் பணி உருவப் “பதிவு” செய்தல். “பதி”, “பதிவு” என்பவைத் தமிழ்ச் சொற்கள் என்பது உங்களுக்குத் தெரியும். “பதி” என்பதற்கு அரசன், இடம், இறைவன், ஊர், ஒளி, குதிரை, குரு, கொழுநன், தலைவன், சிவன், பட்டினம், பூமி, மூத்தோன், வீடு, வேர் ஆகிய பொருள்களுடன் (MEANING) பதிவு, பதித்தல் ஆகிய பொருள்களும் (MEANING) உள !


“கம்” என்னும் தமிழ்ச் சொல்லுக்கு அறிவு, ஆகாயம், ஆட்டுக்கடா, உயிர், கம்மியர், தொழில், காற்று, தலை, நீர். மகிழ்ச்சி, முகில், முதன்மை, வெண்மை ஆகிய பல பொருள்களுடன் (MEANING) ”செய்கை”, “விரைவு” ஆகிய பொருள்களும் உள !


பதி (பதிவு) + கம் (செய்கை) = பதிகம் = பதிவு செய்கை ! தன் முன்னால் இருக்கும் உருவத்தை அல்லது காட்சிகளைப் பதிவு செய்து தரும்  கருவியைப் “பதிகம்” என்று அழைக்கலாம் அன்றோ ?

 

பதிவு செய்தல் என்னும் செயலைப் “பதிகை” என்றும் சொல்வதுண்டு. “கை” என்னும் சொல்லுக்கு 55 வகையான பொருள்களைச் சொல்கிறது தமிழ் அகரமுதலி. அவற்றுள் “செய்கை”, “செயல்” ஆகியவையும் உள !


பதிகம்” என்றாலும் “பதிகை” என்றாலும் பதிவு செய்யும் செயலைத் தான் குறிக்கிறதுஆகையால், “பதிகம்” என்பதை “பதிகை” என்றே சொல்லலாம் !

 

புகைப்படக் கருவி”, என்பது ஒன்பது  எழுத்துச் சொல் ! “நிழற்படக் கருவி” என்பதும் ஒன்பது எழுத்துச் சொல்! “”பதிகம்” என்பது நான்கு எழுத்துச் சொல் ! ”பதிகை” என்பது மூன்று எழுத்துச் சொல் ! இஃது உருவில் சிறியதாகவும்ஒலி நயம் உடையதாகவும்,  பொருட்செறிவு உடையதாகவும் இருப்பதால், எழுதுவதற்கும், அச்சிடலுக்கும், கணினியில் உள்ளீடு செய்வதற்கும் மிக எளிதாக இருக்கும் !


அரிசிக் கடைக்குச் சென்று புழுங்கல் 10 கிலோ கொடுங்கள் என்று கேட்கிறோம்புழுங்குதல் என்னும் தொழிற் பெயர் இங்கு புழுங்கப் பெற்ற அரிசிக்கு ஆகிவந்திருக்கிறதுஅதுபோல் ”பதிகை” என்னும் தொழிற் பெயர் பதிகையைச் செய்யும் கருவிக்கு ஆகி வந்திருப்பதால் ”பதிகை” என்பது தொழிலாகு பெயராக அமைகிறது ! ”பதிகை” என்னும் சொல்  இலக்கணப்படியும் சரியே !

 

தமிழ்கூறும் நல்லுலகு ”பதிகை” என்னும் சொல்லைப் புழக்கத்தில் கொண்டு வந்து தமிழ்ப் பணியில் தன்னை  ஈடுபடுத்திக் கொள்ளுமாக !

 

=============================================================

 

                       CAMERA.............................= பதிகை

                       VIDEO CAMERA.................= காணொலிப் பதிகை

                       DIGITAL CAMERA...............= எண்மப் பதிகை

                       ELECTRONIC CAMERA.....= மின்மப் பதிகை

                       SECRET CAMERA..............= கமுக்கப் பதிகை@

                       MOBILE CAMERA...............= எழினிப் பதிகை

                       C.C.T.V.CAMERA.................= நிகழ் பதிகை@@

 

--------------------------------------------------------------------------------------------

கமுக்கம் = இரகசியம்.

@@ நடக்கும் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து

 வைக்கும் கருவி

-----------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, ஆடவை (ஆனி),31]

{15-07-2020}

------------------------------------------------------------------------------------------------------

      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 

கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------

 



பதிகை






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .