name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (75) இயற்கை வளங்களை அழிக்காதீர் - குறிஞ்சி நிலம் !

திங்கள், ஜூலை 27, 2020

சிந்தனை செய் மனமே (75) இயற்கை வளங்களை அழிக்காதீர் - குறிஞ்சி நிலம் !

மழைப் பொழிவுக்கான பற்றுக்கோடு மலையும் மலைவாழ் நிலைத் திணைகளுமே  ஆகும்.


கடந்த மாதம் (15-06-2020) மணிப்பூர் உயர் அறமன்றம் முகாமையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விலங்குகளிடமிருந்து தான் நோய்மிகள் (VIRUS) பரவுகின்றன என்றும், விலங்குகளை காடுகளிலேயே வாழ விடுங்கள் என்றும், காடுகளை அழிக்காதீர்கள் என்றும் பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உயர் அறமன்றம் தெரிவித்துள்ளது !

இந்த உலகம் நான்கு வகையான நிலப் பரப்புகளைக் கொண்டது. இதைத் தான் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று வகைப்படுத்தினர் !

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி ! காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை ! வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் ! கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் ! குறிஞ்சியும் முல்லையும் தம் நிலையிலிருந்து (வறட்சி முதலியவற்றால்) திரியும் போது பாலை என்று அழைக்கப்பெற்றது !

மலையும் மலை சார்ந்த இடங்களும் மனிதன் வாழ்வதற்காகப்  படைக்கப் பட்டவை அன்று; மழைப் பொழிவுக்கான பற்றுக்கோடு மலையும் மலைவாழ் நிலத்திணைகளுமே (தாவரங்கள்) ஆகும்.

கடல் போன்ற நீர் நிலைகளில் இருந்து கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகும் நீர் கார்முகில்களாகத் திரள்கின்றன. இவை காற்றினால் இடம் பெயர்ந்து உலா வருகையில் மலைகளால் தடுக்கப்படுகிறன்றன. மலையில் வளரும் நிலத் திணைகளால் உருவாகும் நளிர்மை (குளிர்ச்சி), மேகக் கூட்டங்களைக் குளிர்வித்து மழையாகப் பொழியச் செய்கிறது !

இந்த நிலவுலகில் தானே வல்லவன் என்னும் தன்முனைப்பால் (ஆணவத்தால்) மனிதன் மலைகளையும் மலை சார்ந்த இடங்களையும் வலிந்து பற்றிக் கொண்டு, அவற்றின் இயற்கை அமைப்பைச் சீர் குலைத்து வருகிறான் !

சுற்றுலா என்பது மனிதன் தன் மனக் களிப்புக்காக உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு ஏந்து (வசதி). மலையின் உச்சி வரை சென்று, காட்சிகளைக் கண்டு களிப்பதற்காக மலைச் சரிவுகளை உடைத்து சாலை அமைக்கிறான். சாலைகளில் செல்லும் ஊர்திகள் வெளியிடும் நச்சுப் புகையால், மலையில் உலவும் காற்று மாசு பட்டுப் போகிறது  !

ஊர்திகளில் மலை உச்சிக்குச் செல்லும் மனிதன் அங்கே சில நாள்கள் தங்கி வாழ்ந்திட விடுதிகளை (LODGES) அமைக்கிறான். பணம் படைத்த செல்வந்தர்கள் மலையின் இயற்கை வளத்தைச் சீர்குலைத்து ஏராளமான விடுதிகளை அங்கு உருவாக்குகிறார்கள் !

சில மனிதர்கள் அங்கேயே நிலையாக வாழும் பொருட்டு வீடுகளையும் அமைத்துக் கொள்கிறார்கள். மனித இருப்பும் நடமாட்டமும்  மலைகளில் கூடும் போது, உணவகங்கள், கடைகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், உடற் பயிற்சிக் கூடங்கள், ஆடை வெளுப்பகங்கள், முடி திருத்தகங்கள், விற்பனைக் கூடங்கள், அரசு அலுவலகங்கள்  என நிறையக் கட்டடங்கள் அங்கே முளைக்கின்றன !

மலைகளில் நெடிதுயர்ந்து வளர்ந்துள்ள உயிர்மரங்கள் வீழ்த்தப்பட்டு, மர அறுவை ஆலைகளுக்கு (SAW MILLS) அனுப்பப் படுகின்றன. அங்கு அவை சட்டங்களாகவும் பலகைகளாகவும் அறுக்கப்பட்டு மனிதத் தேவைக்குப் பயன்படுத்தப் படுகின்றன !

மலைவளர் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களும், குளம்பி (COFFEE)த் தோட்டங்களும், ஏலக்காய்த் தோட்டங்களும், மலர்த் தோட்டங்களும் உருவாக்கப் படுகின்றன !

சாலைகள் அமைப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும், விளையாட்டுத் திடல் அமைப்பதற்கும், பணப்பயிர்த் தோட்டங்கள் அமைப்பதற்கும் மலைவளர் காடுகள் அழிக்கப்படுகின்றன. அரியவகை மூலிகைகள் பொசுக்கப்படுகின்றன !

புகையும் தூசும், மனிதன் வெளியிடும் வெப்பக் காற்றும், ஊர்திகளில் வெளியாகும் நச்சுக் காற்றும், மலையின் இயற்கைத்  தன்மையையும் தூய காற்று மண்டலத்தையும் பெரிதும் பாழ்படுத்தி வருகின்றன !

மனிதனது தன்முனைப்பால் (ஆணவத்தால்) மலையும் மலை சார்ந்த இடங்களுமான குறிஞ்சி நிலம் தன் நிலை திரிந்து பாலையாக மாறி வருகிறது. குறிஞ்சி நிலம் எல்லா வகையிலும் குறிஞ்சியாக இருந்தால் தான் மழைப் பொழிவு மிகுதியாக இருக்கும் !

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் நீலமலையில் வாழும் மக்கள் தங்களுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்டார்களா ? மலையின் இயற்கைச் சூழ்நிலையை அழித்து விட்டு அங்கு மருத்துவக் கல்லூரியும் அதனுடன் இணைந்த மருத்துவ மனையும் அங்கு உருவாக்குவது அறிவார்ந்த செயலாகுமா ?

இப்படியெல்லாம் வரைமுறை  இல்லாமல் மலை வளத்தை அழித்து, மலைவளர் காடுகளை அழித்து, மலையில் நிலவும் குளிர்மைச் சூழ்நிலையை அழித்து,  கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருந்தால் மழைப் பொழிவு எப்படி இருக்கும் ? தமிழ் நாட்டில் வேளாண்மை எப்படிச் செழிக்கும் ? மலைவளத்தைக் காக்க வேண்டிய அரசே மலை வளத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவது முறைதானா ?

குறிஞ்சியின் இயற்கைத் தன்மையை அழித்து விட்டு, மழை பெய்யவில்லை என்று புலம்புவதில் என்ன பொருள் இருக்கிறது ? மழை பெய்ய  வேண்டி  கோயில்களில் வழிபாடு நடத்தி இறைவனை வேண்டிக் கொள்வதில் என்ன ஞாயம் இருக்கிறது ? மழை பெய்வதற்காக வேள்விகள் நடத்துவதில் என்ன அறிவார்ந்த செயல் அடங்கி இருக்கிறது ?  

மனிதனைநாகரிகம் அடைந்த ஒரு விலங்கு” (CIVILIZED BEAST) என்று கூறினார் மேனாட்டு அறிஞர் ஒருவர். ஆனால் விலங்குகளிடம் உள்ள சில நல்ல குணங்கள் கூட மனிதனிடம் இல்லை. எந்த விலங்கும் இயற்கை வளங்களை அழிப்பதில்லை; இந்தநாகரிகம் அடைந்த விலங்குதான் இயற்கை வளங்களை எல்லாம் அழித்துக்கொண்டு தனக்குத் தானே அழிவையும் தேடிக் கொண்டு வருகிறது !

------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),12]
{27-07-2020}
------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .