name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (65) கட்டணக் கொள்ளை !

செவ்வாய், ஜூலை 07, 2020

சிந்தனை செய் மனமே (65) கட்டணக் கொள்ளை !

சுரண்டப்படும் அடித்தட்டு, இடைத்தட்டு மக்கள் !


அரசு என்னும் அமைப்பை இந்திய அரசியல் சட்டம் உருவாக்கித் தந்திருக்கிறது. மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசும், நாடு முழுமைக்குமான ஒரு நடுவணரசும் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன !

மாநில மக்களின் நலன்களைக் காப்பதற்காக மாநில அரசுகள் இயங்குகின்றன. பிறநாடுகளின்  வலிப்பற்றிலிருந்து (ஆக்கிரமிப்பு) முதன்மையாக நாட்டையும் மக்களையும்  காப்பதற்காக நடுவணரசு இயங்கி வருகிறது !

இவ்விரு அரசுகளும் தங்களுக்குள் கடமைப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு ஆட்சி புரிந்து வருகின்றன. இந்திய அளவில் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர், அதிகார ஆசைகளுக்கு ஆட்பட்டு, மாநிலங்களுக்கு ஒதுக்கப் பெற்றக் கடமைப் பொறுப்புகளையும் மெல்ல மெல்லக் கைப்பற்றித் தமதாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காண்கிறோம் !

அரசு என்பதற்கு இலக்கணம் கூறும் திருவள்ளுவர், ஏழை எளியோர்க்கும் வறியோர்க்கும் உதவி செய்கின்ற கொடைத் தன்மையும், அனைத்து மக்களிடமும் பரிவு காட்டும் இரக்க உணர்வும், நீதி தவறாது ஆள்கின்ற செங்கோன்மையும், குடிமக்களுக்கு ஆதரவு அளித்துப் பாதுகாக்கும் உயரிய நெறியும் கொண்ட அரசனே, அனைத்து அரசர்களுக்கும் வழிகாட்டும் விளக்குப் போன்றவன் என்கிறார் !

கொடையளி செங்கோல், குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி !  (குறள் ;390)

வள்ளுவர் காலத்தில் முடியாட்சி முறை இருந்தது. மன்னர்கள் தமக்குரிய குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தார்கள் ! மன்னராட்சி முறை ஒழிந்து குடியாட்சி முறை நிலவுகின்ற காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் !

மக்களுக்காக, மக்களின் படியாளர்களை (பிரதிநிதிகளை)க் கொண்டு தேர்வு செய்யப்படும் அமைச்சரவை, மாநிலங்களிலும், இந்திய அளவிலும் இயங்கி வருகின்றன !

மக்களின் சேவகர்களாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும்  அமைச்சர்கள், பண்டைக் காலத்திய முடியாட்சியை விட எல்லா வகையிலும் மேம்பட்ட நல்லாட்சியைத் தரவேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கம் !

நடுவணசும், மாநில அரசுகளும் அரசியல் சட்ட நெறிமுறைகளின் படிச் செயல் படுகின்றனவா ? சற்று அலசிப் பார்க்கலாம் !

சீட்டு விளையாடுதல், குதிரைப் பந்தயம், சேவற் கட்டு, பரிசுச் சீட்டு போன்றவை மக்களின் மதியை மயக்கி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன என்று சொல்லி, அவை பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டு இருக்கின்றன ! இச்செயல் வள்ளுவ நெறியை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடையவை என்பதில் ஐயமில்லை !

இதே நோக்கு, பிற எல்லா நிகழ்வுகளிலும் அரசுகளால் கடைப்பிடிக்கப் படுகின்றனவா, என்பதை ஆய்வு செய்வோம் !

ஒவ்வொருவரும் ஆண்டும் மடலாட்ட வீரர்கள் (CRICKET PLAYERS) ”+”. ””. ”பி” ”சிஎன்று நான்கு வகையாகத் தரம் பிரிக்கப் பட்டு, அவர்களின் ஆண்டு ஊதியம் வரையறை செய்யப்படுகிறது. “+” வீரர்களின் சென்ற ஆண்டு ஊதியம்உருபா 7 கோடி. அடுத்தடுத்தப் பிரிவினரின் ஆண்டு ஊதியம் உருபா 5 கோடி, 3 கோடி, 1 கோடி என்று இந்திய மடலாட்ட வாரியத்தால் (INDIAN CRICKET CONTROL BOARD) வரையறை செய்யப்பட்டிருகிறது !

இதில்+” வகையில் விராத் கோலி, உரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் வருகின்றனர். ஆண்டு ஊதியம் மட்டுமல்லாது, அவர்கள் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் ஒரு பெருந் தொகை வழங்கப்படுகிறது. இப்படிச் செலவிடப் பட்ட பணத்தை மீள எடுப்பதற்கு (வசூல் செய்ய), மடலாட்டப் போட்டியைக் காண்பதற்கு வரும் சுவைஞர்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக உருபா ஐந்தாயிரம் வரை பெறப்படுகிறது !

மடலாட்டப் போட்டியைக் காண வருவோர் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல ! மேல் தட்டு மக்களுடன் நடுத்தர வகுப்பினரும் வருகின்றனர். ஒரு நாள் போட்டியைக் காண உருபா ஐந்தாயிரம் நுழைவுக் கட்டணம் என்பது பணக் கொள்ளை அல்லவா ?

நடுவணரசு இதைத் தடுக்க வேண்டாவா ? இளைஞர்களை மடலாட்டம் என்னும் மதுவை அருந்த வைத்து, அவர்களது பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்திய மடலாட்ட வாரியத்தின் (INDIAN CRICKET CONTROL BOARD) செயலைக் கண்டிக்க வேண்டாவா ? தடுத்து நிறுத்த வேண்டாவா ? இந்திய அரசு கண் மூடி உறங்குதல் ஞாயம் தானா ?

இரண்டாவதாக, திரைத் துறையினரின் பணக் கொள்ளை ! தீபாவளி, பொங்கல் போன்ற முகாமையான பெருநாள்களில் வெளியிடப்படும் படங்களுக்கு முதல் ஏழு நாள்களுக்கு, திரை அரங்கத்தினர், அவர்கள் விருப்பம் போல் நுழைவுக் கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தித் தண்டல் செய்து கொள்ளலாம் என  மாநில அரசு உரிமை அளித்திருப்பது எந்த வகையில் ஞாயம் ? மக்களைக் காக்க வேண்டிய மாநில அரசு, பணக் கொள்ளைக்கு இசைவு அளித்திருப்பது கொள்ளைக் காரர்களுக்குத் துணை போகும் செயல் அல்லவா ?

மூன்றாவதாக, தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளை ! அரசுப் பள்ளிகளில் இலவயமாகவே படிப்புச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் நகர்ப்புறங்களில் ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு உருபா இரண்டு இலக்கம் (2,00,000) வரை பெற்றோர் செலுத்த வேண்டியிருக்கிறது. அரசை ஏமாற்றுவதற்காக இந்த இரண்டு இலக்கமும் பல்வேறு தலைப்புகளில் பிரித்துக் காட்டப்படுகிறது !

மனிதனின் பொதுவான இயல்பு, உயர்வான பொருளாக இருந்தாலும் இலவயமாகக் கொடுத்தால் அதை அவன் மதிக்க மாட்டான்; மட்டமான பொருளாக இருந்தாலும், அதற்கு ஒரு விலை வைத்து விற்பனை செய்தால், அதை உயர்வானதாகக் கருதி மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வான் !

கல்வியும் அப்படித்தான் ! மாணவர்களிடம் பள்ளிகள் பெறும் கட்டணம் உயர உயர, பெற்றோர்களின் மனதில் அதிகக் கட்டணம் பெறும் பள்ளிகள் மீது மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது ! கற்றறிந்த பெற்றோர்களிடமும் கூட இந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கை நிலவுவது தான் வியப்பாக இருக்கிறது !

கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, கண்களை இறுக மூடிக் கொண்டு இருக்கிறது. காரணம், இத்தகைய பள்ளிகளில் பெரும்பாலானவை முக்காடு போட்டுக் கொண்டு முகத்தைக் காட்டாத ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் அல்லவோ நடத்தப்படுகின்றன !

நான்காவதாக, தனியார் பேருந்துக் கட்டணக் கொள்ளை ! ஒப்பந்தப் பேருந்து (OMNIBUS) என்னும் பெயரில் இயக்கப்படும் இந்தப் பேருந்துகளில் அவர்கள் சொல்வது தான் கட்டணம் ! தீபாவளி, பொங்கல் போன்ற பயண நெரிசல் காலங்களில் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி விடுகின்றனர். எப்படியாவது ஊருக்குச் சென்றாக வேண்டும் என்னும் கட்டாயத்தில் இருக்கும் மக்கள், இதனால் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இந்தப் பகற் கொள்ளையைத் தடுக்க வேண்டிய அரசு, கடுமையாக எச்சரிக்கை விடுவதோடு அடங்கிப் போகிறது !

ஐந்தாவதாக, இருப்பூர்திகளில் தீபாவளி பொங்கல் போன்ற நேரங்களில் முந்துறு முன்பதிவு (THATKAL RESERVATION) செய்வதற்கு, பின்பற்றப்படும் நடைமுறை ! காலையில் ஒருமணி நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கு இயல்பான முன்பதிவுக் கட்டணம் உருபா 800 என்றால், வரிசையில் நிற்பவர்களில் முன்னதாக வருபவரிடம் கூடுதல் கட்டணமும் அடுத்தடுத்து வருபவர்களிடம்  சற்றுக் குறைவான கட்டணமும் தண்டல் செய்யப்படுகிறது. அனைவருக்கும் ஒரேவிதமான கட்டணம் என்பது இங்கு இல்லை ! இருப்பூர்தித் துறையின் இந்தக் கட்டணக் கொள்ளையை நடுவணரசு தடுக்கக் கூடாதா ?

ஆறாவதாக, தனியார் மருத்துவ மனைகளின் மருத்துவக் கட்டணக் கொள்ளை ! தலைவலி என்று ஒரு ஆள் உள்ளே போய்விட்டால், போதும் ! அவரிடம் குருதி ஆய்வு (BLOOD TEST), நெஞ்சகத் துடிப்புப் பட வரைவு (E.C.G), கதிர்ப் படம் (X-RAY) எடுத்தல் என்று என்னென்னவோ ஆய்வுகளுக்கு அவரை உட்படுத்தி, பெருந் தொகையை அவரிடமிருந்துக் கறந்து விடுகின்றனர். பலநூறு ஆண்டுகளாக உலகம் முழுதும் மருத்துவம் என்பது சேவையாக (SERVICE) இருந்த நிலையில், இப்போது 100% வணிகம் (COMMERCIAL) என்று ஆகிவிட்டது !

இன்னும் எத்தனையோ கொள்ளைகள் அரசுக்குத் தெரிந்தே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஏழை எளிய மக்களையும், நடுத்தர வகுப்பினரையும் தனியார் குழுக்களின் / அரசுத் துறைகளின் சுரண்டலினின்று காப்பாற்ற வேண்டிய மாநில அரசும், நடுவணரசும், மக்களைக் கைவிட்டு விட்டு, வெற்று வேட்டு வீர உரைகளை முழங்கிக் கொண்டு இருக்கின்றன ! இது தான் மக்களாட்சியின் மாண்பு  போலும் !

சிந்தனை செய் மனமே ! சிந்தனை செய் ! சிந்தித்தால் தான் உன் செயல்களில் தெளிவு ஏற்படும் ! புதிய விடியலை உன் பூட்கையாகக் (AIM)  கொண்டால் புத்துலகம் பூக்காமலா போய்விடும் ! சிந்தனை செய் !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),22]
{06-07-2020}
--------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .