தங்கமும் கன்னெய்யும் ஒன்றே - விலைவாசியை விண் முட்ட எடுத்துச் செல்வதில் !
நாட்டின் பொருளாதாரமாக
இருந்தாலும் சரி, தனி மனிதனின் பொருளாதார வளமாக இருந்தாலும் சரி, அவற்றில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கன்னெய்க்கு (PETROL) உண்டு
! நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையில் (ECONOMICAL
STABILITY) தாக்கம் ஏற்படுத்துபவை தங்கத்தின் விலையும், கன்னெய் விலையும் !
தங்கத்தின் விலை ஏறுகையில், பிற பொருள்களின் விலைவாசியும் ஏறுகிறது. விலைவாசி ஏறுகையில்
ஊழியர்களின் ஊதியத்திற்கு உள்ள கொள்வினை ஆற்றல் (PURCHASING POWER) குறைந்து போகிறது. இதை ஈடு செய்ய, ஊதியத்தை ஏற்ற வேண்டி இருக்கிறது !
ஊதியத்தை ஏற்றும்போது மீண்டும்
ஒருமுறை விலைவாசி உயர்கிறது ! இத்தகைய தொடர் நிகழ்வு (CHAIN
REACTION) நாட்டின் பொருதார நிலைப்புத் தன்மையை வலுக்குன்றச் செய்துவிடுகிறது
!
தங்கத்திற்கு உள்ள இதே
ஆற்றல் கன்னெய்க்கும் (PETROL) இருக்கிறது ! அதனால் தான் இதை நீர்மத் தங்கம் (LIQUID GOLD) என்று
குறிப்பிடுகிறோம் ! கன்னெய் (PETROL) , தீசல் (DIESEL) இரண்டுமே சுருக்கம் கருதி இக்கட்டுரையில் இனி கன்னெய் (PETROL) என்றே குறிப்பிடப்படும்
!
தனி மனிதப் போக்கு வரத்து
(INDIVIDUAL
TRANSPORT) முதல், பொதுப் போக்குவரத்து
(PUBLIC TRANSPORT ), சரக்குப் போக்கு வரத்து (GOODS
TRANSPORT) வரை அனைத்தும் இக்காலத்தில் கன்னெய்யைச் சார்ந்தே இருக்கிறது
!
தனி மனிதர்கள், வாழ்விடம் (RESIDENCE) ஒன்றாகவும், பணியிடம் (WORK PLACE) வேறொன்றாகவும் இருப்பது இக்காலத்தில் இயல்பாகிவிட்டது. மக்கள் தொகைப் பெருக்கம், குடியிருப்பு இல்லங்கள் பற்றாக்குறை,
தரமான பள்ளிகள் அருகில் இல்லாமை போன்ற காரணங்களால், மக்களால் இதைத் தவிர்க்க முடியவில்லை !
வாழ்விடம் ஒன்றும், பணியிடம் வேறொன்றுமாக இருக்கையில், மனிதன் தனது இடப்
பெயர்வுக்கு (MOVEMENT)க் கன்னெய்யில் இயங்கும் ஊர்திகளான பேடுருளி
(MOPED), துள்ளுந்து (SCOOTER), பாவையூர்தி
(SCOOTY), உந்தூர்தி (MOTOR BIKE), சீருந்து
(MOTOR CAR) போன்ற ஊர்திகளைச்
சார்ந்து இருக்கிறான். கன்னெய்யின் விலை ஏறுகையில், அவன் தனது வருவாயில் கணிசமான
பகுதியை கன்னெய்க்காக ஒதுக்க வேண்டி இருக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் இடையில் பற்றாக்குறை
எற்பட்டு அவன் திண்டாடிப்போகிறான்
!
பொதுப்போக்குவரத்து ஊர்திகளை
(PUBLIC TRANSPORT VEHICLES)ப் பயன்படுத்தும் அடித்தட்டு மக்களான அற்றைக் கூலித் தொழிலாளர்களும்,
சிறு வணிகம் செய்து வாழ்வோரும், ஏழை எளியோரும்,
பேருந்து, இருப்பூர்தி (TRAIN) கட்டண உயர்வால் தாக்குண்டு நிலகுலைந்து போகிறார்கள் !
சரக்குப் போக்கு வரத்து
ஊர்திகளான சுமையுந்து (LORRY), வானூர்தி
(CARGO) போன்றவை கட்டணத்தை உயர்த்துவதால், பொருள்களின்
அடக்க விலையில் உயர்வு ஏற்படுகிறது. இதனால், விற்பனை விலை உயர்ந்து, பொருள்களின் விலைவாசியை உயர்த்தி
விடுகிறது !
இத்தகைய பெரும் விளைவுகளை
ஏற்படுத்தக் கூடிய கன்னெய் (PETROL) விலையை வரையறை செய்துகொள்ளும்
உரிமையை நடுவணரசு எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்து விட்டுப் புறங்காட்டி
(முகத்தைத் திருப்பிக் கொண்டு) நிற்கிறது !
எண்ணெய் நிறுவனங்களோ கன்னெய்
விலையை அன்றாடம் (DAILY)
உயர்த்தி வருகின்றன.
கன்னெய் விலையில் பெரும்பகுதி சுங்க வரி, விற்பனை வரியாக நடுவணரசுக்குப் போய்ச் சேர்வதால், நடுவணரசு
எண்ணெய் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முன்வராமல் வாளாவிருக்கிறது !
கன்னெய் விலையில் ஒரு பகுதி
மாநில அரசுக்கும் வரிவருவாயாகப் போய்ச் சேருவதால், மாநில
அரசும் கன்னெய் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இல்லை !
2014 ஆம் ஆண்டு
கன்னெய் (PETROL) மீது நடுவணரசு 247% சுங்கவரி
உயர்வை அறிவித்தது. அதே போல் தீசல் (DIESEL) மீது 794% சுங்க
வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் இரண்டொரு முறை சுங்கவரியை நடுவணரசு
உயர்த்தி இருக்கிறது !
மாநில அரசு தன் பங்குக்கு
மதிப்புக் கூட்டு வரியை இவ்வாண்டு மே மாதம் முதல் கன்னெய்க்கு (PETROL) இலிட்டருக்கு உருபா 2-97 உயர்த்தியது. தீசலுக்கு (DIESEL) இலிட்டருக்கு உருபா 2-31 உயர்த்தியது. மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி இப்போது கன்னெய்க்கு
34% ஆகவும், தீசலுக்கு 25% ஆகவும் இருக்கிறது !
நாட்டின் பொருளாதாரத்தை
மிகவும் பாதிக்கும் கன்னெய் (PETROL) விலையை, வரையறை செய்து கொள்ளும் உரிமையை
எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்துவிட்ட நடுவணரசின் செயல் மிகத்
தவறானது !
கன்னெய் மீதான மதிப்புக்
கூட்டு வரியை உயர்த்திவரும் மாநில அரசின் செயலும் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை !
மாநில அரசும், நடுவணரசும் சேர்ந்து கொண்டு
கன்னெய் மீதான வரிகளைத் தாறு மாறாக உயர்த்தி மக்களின் வருவாயில்
பெரும்பகுதியை விழுங்கி ஏப்பம் விட்டு வருகின்றன ! இதில் உள்ள
விரகு (தந்திரம்) என்னவென்றால்,
கன்னெய் விலை உயர்வுக்கு இரு அரசுகளும் காரணமில்லை என்பது போலும்,
எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என்பது போலும் மக்கள் முன் ஒரு காட்சியை அரங்கேற்றி வருவதுதான் !
“வான் நோக்கி வாழும்
உலகெல்லாம் மன்னவன், கோல் நோக்கி வாழும் குடி” என்கிறார் வள்ளுவர். அதாவது அனைத்து உயிர்களும் வான்
மழையை நோக்கி வாழ்வது போல், குடிமக்கள் எல்லாம் அரசின் செங்கோலை
நோக்கி வாழ்கின்றன என்று பொருள் ! இங்கே மாநில அரசு, நடுவணரசு இரண்டின் செங்கோலும் வளைந்தல்லவா கிடைக்கின்றன !
கன்னெய் விலை, விண்முட்ட உயர்ந்து, அதன் விளைவாக விலைவாசிகளும் தாறுமாறாக உயர்ந்து மக்களை வாட்டி எடுக்கையில்,
மக்கள் ஆதரவு தம்பக்கம்
இருக்கிறது என்று இரு அரசுகளும் கருதுமாயின் அஃது அவர்களுக்குப்
பகற் கனவாகவே முடியும் !
”குடி தழீஇக் கோலோச்சும் மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு”
என்பது குறள் ! மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு
ஆட்சியில் இருப்போர் செயல்படுவாராயின், மக்கள் ஆதரவு அவர்கள்
பக்கமே இருக்கும் என்பது குறள் கூறும் பொன்னுரை ! இன்றைய அரசுகளின்
நிலை அப்படியா இருக்கிறது ?
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),19]
{03-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .