மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !
முனைவர். தமிழண்ணல் !
தோற்றம்:
முனைவர் தமிழண்ணல் அவர்களின் இயற்பெயர்
இராம.பெரியகருப்பன். சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில்
உள்ள நெற்குப்பை என்னும் ஊரில் இராமசாமிச் செட்டியார் – கல்யாணி ஆச்சி இணையருக்கு மகனாக
இவர் 1928 -ஆம் ஆண்டு, ஆகத்து
12 ஆம் நாள் பிறந்தார் !
கல்வி:
தொடக்கக் கல்வியை உள்ளூரிலும், உயர் பள்ளிக் கல்வியை, பள்ளத்தூர் ஏ.ஆர்.சி உயர்நிலைப் பள்ளியிலும் பெற்ற இராம கருப்பன்,
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று 1948 ஆம் ஆண்டு
தமிழில் வித்துவான் பட்டம்
பெற்றார். பிறகு தனிப் பயிற்சி வாயிலாக, சென்னைப் பல்கலைக்
கழகத்தில் பொருளியலில் கலையியல் வாலை (B.A) பட்டம் பெற்றார்.
1961 –ஆம் ஆண்டு தமிழில் கலையியல் மேதை (M.A) பட்டம்
பெற்றார். மதுரை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகையில்,
“சங்க இலக்கிய: மரபுகள்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் (Ph.D) பட்டத்தையும்
பெற்றார் !
திருமணம்:
தமிழண்ணலுக்கு
1954 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் நாள் திருமணம்
நடைபெற்றது. இவரது மனைவி பெயர் தெய்வானை ஆச்சி. இவ்விணையருக்கு சோலையப்பன்,
கண்ணன், மணிவண்ணன் என்னும் 3 ஆண் மக்களும் கண்ணம்மை, அன்புச் செல்வி, முத்துமீனாள் என்னும் 3 பெண் மக்களும் பிறந்தனர்
!
ஆசிரியப்பணி:
தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி
மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.
ஏறத் தாழ 13 ஆண்டுகள் இப்பள்ளியில் தமிழாசிரியராகப்
பணி புரிந்தார். இவரது கடின உழைப்பையும், சங்க இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் பாராட்டி, மதுரை,
தியாகராயர் கல்லூரித் தாளாளர் கருமுத்து தியாகராயன் செட்டியார் இவரை
தனது கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தினார். இங்கு
தமிழண்ணல் சற்றேறக் குறைய 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த முனைவர்,
மு.வ. அவர்கள் 1971
ஆம் ஆண்டு தமிழண்ணலுக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இடம் கிடைக்கச்
செய்தார். ஈராண்டுகளில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்றார்.
பின்னர் அஞ்சல் வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்
துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி எனப் பல நிலைகளில்
பணிபுரிந்துள்ளார். இறுதியாக, தமிழ்த் துறைத்
தலைவராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றார். 1981-82 ஆம் கல்வியாண்டில் நிதி நல்கைக் குழுவின் தேசியப் பேராசிரியராகவும் அறிவிக்கப்
பெற்றுப் பெருமைப் படுத்தப்பட்டார். மேலும் ஈராண்டுகள் இங்கு
சிறப்புப் பேராசிரியராகவும் பணியில் இருந்திருக்கிறார் !
பிற பொறுப்புகள்:
மதுரை, காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
வெங்கடேசுவரா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்
கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன்
பல்கலைக் கழகம், கோழிக் கோடு பல்கலைக் கழகம் உளிட்ட பல பல்கலைக் கழகங்களில்
பாடத் திட்டக் குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். சாகித்திய
அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தமிழக அரசால் அமர்வு செய்யப்பட்டார்.
1985 –ஆம் ஆண்டு முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி
வந்தார். தமிழக அரசின் சங்க இலக்கியக் குறள் பீடத்தின் துணைத்
தலைவராகவும் பணி புரிந்தார் !
சிறப்புகள்:
தமிழண்ணல் அவர்கள் முனைவர் பட்ட
ஆய்வை மேற்கொண்டிருந்த போது, இவருக்கு நெறியாளராக இருந்தவர்கள்
முனைவர் சி. இலக்குவனாரும் முனைவர் அ.சிதம்பரநாதனும்
ஆவர். இவரது மாணவர்களே முனைவர் கா.காளிமுத்துவும்,
முனைவர் மு. தமிழ்க்குடிமகனும். இவ்விருவருக்கும் முனைவர் பட்ட ஆய்வின் போது வழிகாட்டியாக விளங்கியவர் தமிழண்ணல்.
இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு நெறியாளராக இருந்திருக்கிறார்
!
படைப்புகள்:
தமிழ் இலக்கணம் குறித்து ஐம்பதுக்கும்
மேற்பட்டக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ”வாழ்வரசி”,
“நச்சு வளையம்”, “தாலாட்டு”, “காதல் வாழ்வு”, “பிறை தொழும் பெண்கள்”, “சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கியக் கொள்கைகள்”,
“சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கிய வகைகள்”,
“தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்”, “புதிய
நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு”, ”தமிழியல் ஆய்வு”, “ஆய்வியல் அறிமுகம்”, “ ஒப்பிலக்கிய அறிமுகம்:,
“ குறிஞ்சிப் பாட்டு – இலக்கியத் திறனாய்வு விளக்கம்”, “தொகாப்பியம் உரை”, “நன்னூல் உரை”, “ புறப்பொருள் வெண்பா மாலை உரை”, “யாப்பருங்கலக் காரிகை
உரை”, “தண்டியலங்காரம் உரை”, “சொல் புதிது
! சுவை புதிது !”, “தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும்
திருத்தமும்”, “தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா ?”, “ பேசுவது போல் எழுதலாமா ?”, “உரை விளக்கு”, “ உயிருள்ள மொழி” உள்பட எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழண்ணல் எழுதியுள்ளார் ! தினமணி இதழில் ”வளர் தமிழ்”ப் பகுதியில் ”உங்கள்
தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் எழுதியவற்றைத்
தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் !
விருதுகள்:
தமிழக
அரசின் திரு.வி.க. விருது 1989 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மையைப் பற்றி இவர் படைத்த கவிதை நூலுக்கு தமிழக அரசின்
முதற் பரிசு கிடைத்தது. 1995 -ஆம் ஆண்டு “தமிழ்ச் செம்மல்” விருதினை மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
இவருக்கு அளித்துப் பெருமைப் படுத்தியது. இவை தவிர நடுவணரசின்
தமிழறிஞர்களுக்கான ”செம்மொழி விருது”, தமிழக
அரசின் “கலைமாமணி விருது”, எசு.ஆர்.எம் பல்லைக் கழகத் தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது ஆகியவையும் இவருக்கு வழங்கப்பெற்றன !
மறைவு:
மாபெரும்
தமிழறிஞரான முனைவர் தமிழண்ணல் அவர்கள் 2015 –ஆம் ஆண்டு,
திசம்பர் மாதம், 29 ஆம் நாள் தமது 88 ஆம் அகவையில் தமது பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !
முடிவுரை:
தமிழார்வலர்கள்
இடையே தமிழண்ணல் அவர்களுக்கு மிக்க மதிப்பு இருந்தது. தமிழ் வளர்ச்சிகாகப் பல்லாற்றானும் பாடுபட்ட பேராசான் தமிழண்ணல் அவர்களுடைய
புகழ் என்றும் நிலைத்து நிற்கும் !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),08]
{20-02-2020}
-------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பேரறிஞர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் வாழ்க்கை வரலாறு தமிழ் இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் என்பது திண்ணம் !
பதிலளிநீக்குமனைவி பெயர் சரியா?... சிந்தாமணி என்று பிற பதில் இருக்கிறது ஐயா...
பதிலளிநீக்கு