name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: பல்வகை (23) முகமூடி எதற்கு ? முகநூலில் முழு விவரமும் தாருங்கள் !

வெள்ளி, ஜனவரி 24, 2020

பல்வகை (23) முகமூடி எதற்கு ? முகநூலில் முழு விவரமும் தாருங்கள் !

அச்சப்படுபவர்கள்  முகநூல் போன்ற பொது வெளிக்கு ஏன் வரவேண்டும் ?


தமிழ்ப் பணி மன்றத்தில் உறுப்பினராக இருப்பவர்களைப் பற்றிய தரவல்களை  (தகவல்களை) அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு நண்பர் சிறப்பாக வடிவமைக்கப்பெற்ற ஒரு இடுகையைச் செய்திருந்தால், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பு தானே !

அருமையான கருத்தை ஒரு நண்பர் பதிவிட்டிருப்பதைப்  பார்த்தால் எனக்கு அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல் எழும் ! சில நண்பர்களது பின்னூட்டங்கள், நமது அறிவுக்கு அறைகூவல் விடுப்பதைப் போல் அமைந்து இருக்கும் ! திறமை எங்கிருந்தாலும் மதிக்கப்பட வேண்டியது நமக்கிருக்க வேண்டிய நற்பண்புகளில் ஒன்றல்லவா ?

தமிழ்ப் பணி மன்றத்தைத் தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறேன். பல்வேறுபட்ட ஆற்றல் உள்ள மனிதர்களை அடையாளம் காண இது எனக்கு உதவி இருக்கிறது ! குறிப்பிடத்தக்க ஒரு துய்ப்பு (அனுபவம்) ஏற்படுகையில், அதற்குக் காரணமாக இருக்கும் நண்பரைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் முயல்வேன் !

இவ்வாறு, நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நேர்விலும் எனக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஒரு நண்பரைப் பற்றிய தரவல்களை (தகவல்களை) எவ்வாறு அறிந்து கொள்வது ? நேரில் சந்திக்கும் நிகழ்வு ஏற்படுகையில் கேட்டறியலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் அரிது ! மற்றொரு வழி, அந்த நண்பர்களின் முக நூற் பக்கத்தைத்  திறந்து பார்த்து அறிவது !

ஒரு நண்பரின் முகநூற் பக்கத்தில், அவரது பெயர், பிறந்த நாள், அகவை, படிப்பு, பாலினம், வாழ்விடம், ஏற்றிருந்த பணிகள், இப்போதைய பணி, திருமண நிலை, மின்னஞ்சல் முகவரி, எழினி (MOBILE) எண் மற்றும் இன்ன பிற தரவல்களும் (தகவல்கள்) தரப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ஒரேயொரு தரவலை (தகவல்) மட்டுமே தந்து - அதாவது அவர் பிறந்த நாள் சூன் 10 – என்னும் தரவலை மட்டுமே தந்து, முகநூலில் கணக்கு தொடங்கி இருக்கும் விந்தையை நான் முதன் முதல் பார்க்கையில், மிகவும் திகைத்துப் போனேன் !

இந்தக் குறிப்பிட்ட கணக்குக்கு உரியவர் , ஆனா ? பெண்ணா ? – தெரியாது. பிறந்த  ஆண்டுதெரியாது ! வாழும் ஊர்தெரியாது ! படித்தவரா ? படிக்காதவரா ? – தெரியாது ? அகவை ? – தெரியாது ! என்ன பணி செய்கிறார் ? – தெரியாது ! திருமணம் ஆனவரா ? – தெரியாது ! எந்தத் தரவலையும் (தகவலை) சொல்ல விரும்பாதவருக்கு முகநூற் கணக்கு எதற்கு ?

முக்காடு போட்டுக் கொண்டு ஒரு ஆள் ஊரில் உலவுகிறார் என்றால் என்ன பொருள் ? அவர் ஏதோ தப்புச் செய்திருக்கிறார்அதனால் தான் மற்றவர்களைக் கண்டு அவர் அஞ்சுகிறார்என்று தானே யாரும் சொல்வார்கள் ?

இப்படி அச்சப்படுபவர்கள்  முகநூல் போன்ற பொது வெளிக்கு ஏன் வரவேண்டும் ? அச்சப்படுபவர்கள், வீட்டிற்குள்ளேயே அடக்கமாக இருப்பது தான் நல்லது ! பிறந்த நாள் சூன். 10 என்ற ஒரு செய்தியை மட்டும் குறிப்பிட்டு, முகநூல் கணக்கு தொடங்கி இருப்பவர், அவரது அகவை என்ன என்று சொல்வதில் என்ன தவறு ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிவிப்பதில் அவருக்கு என்ன இடையூறு ஏற்பட்டு விடும் ? அவர் படிப்பு, பணி போன்ற செய்திகளைத் தெரிவிப்பதால் அவருக்கு என்ன இன்னல் ஏற்பட்டுவிடும் ?

தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்களில்  ஆசிரியர்கள் எண்ணிக்கை எத்துனை ? தமிழாசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு ? பேராசிரியர்கள் எண்ணிக்கை எத்துணை ? பாவலர்கள் எண்ணிக்கை  என்ன ? அரசுப் பணிகளில் இருப்போர் எத்துணை ? பட்டதாரிகள் எண்ணிக்கை எத்துணை ? என்பன போன்ற விவரங்களைத் திரட்டுவதற்காக, ஒவ்வொரு நண்பரின் முகநூற் கணக்கையும் நான் திறந்து பார்க்கையில் தான், எனக்குப் புரிந்தது, 90 % நண்பர்கள்இருப்பூர்தி நட்புகள்” (இரயில் சிநேகிதர்கள்) என்று !

இருப்பூர்தியில் (இரயிலில்)  செல்கையில், எதிரெதிர் இருக்கையினர் மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டு வருவார்கள்; அவரவர்  இறங்கும் நிலையம் வந்தவுடன், ஒருவர்க்கொருவர் மதிப்பியல் நிமித்தம்சென்று வருகிறேன்என்று கூடச் சொல்லிக்  கொள்ளாமல் போய்க் கொண்டே இருப்பார்கள். தமிழ்ப் பணி மன்ற உறவும் இப்படிப்பட்டது தானோ ?

இருப்பூர்தி நண்பர்களைப் போல் அல்லாமல் நாம் ஏன் உண்மை நண்பர்களாக இருக்கக் கூடாது ? தருமபுரி செல்கையில் நல்லம்பள்ளி சென்று நண்பர் அழகேசனை என்னால் சந்திக்க முடியும் ! பெரியகுளம் செல்ல நேர்ந்தால், எண்டப்புளி சென்று நண்பர் பாலு இராமச்சந்திரனைச் சந்திக்க முடியும். புதுக்கோட்டை சென்றால், நண்பர் கார்மேகம் வீரையாவைச் சந்திக்க முடியும் ! இதுபோல் ஒருவர்க்கொருவர் சந்திக்க வேண்டுமானால், நண்பர்களின் இருப்பிட முகவரியோ, எழினி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியோ கண்டிப்பாகத் தேவை !

இந்த இடுகையைப் படிக்கும் ஒவ்வொரு நண்பரும், வீட்டு முகவரி போன்ற ஓரிரு செய்திகளை மட்டும் மறைத்து விட்டு, இருப்பிடம், பிறந்த நாள், அகவை, படிப்பு, பணி, போன்ற பிற செய்திகள் அனைத்தையும் கட்டாயம் உங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யுங்கள் ! இத்தரவல்களைத் தருவதால் நமக்கு எந்த இன்னலும் ஏற்படாது ! நாம் தவறு ஏதும் செய்வதில்லை ! நமக்கு எதற்கு முக்காடு ?

என்னுடைய  எழினி எண்ணை முன்பு பதிவு செய்திருந்தேன்.  இதனால், நேரம் காலம் இல்லாமல், யாராரோ என்னை அழைக்கத் தொடங்கினார்கள். பின்பு அதை பிறர் காணாத வகையில் மறைத்துவிட்டேன் ! அதனால் தான் என் எழினி எண்ணை இப்போது யாருக்கும் தருவதில்லை. நான்கு பேருக்குத் தெரிந்த ஆள் என்றால் இத்தகைய இன்னல்கள் வரும் போலும் ! எனது  மின்னஞ்சல் முகவரியை நான் தந்திருப்பதால், நண்பர்கள் அதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளத் தடையில்லை ! ஏனைய தரவல்கள் அனைத்தையும் நான் என் முகநூல் பக்கத்தில் தந்திருக்கிறேன் !

தமிழறிஞர்கள் பேரவைஅல்லதுதமிழார்வலர்கள் பேரவைஅமைப்பு தொடர்பாகக் கூடுதல் செய்திகள் தேவைப்படுகின்றன. பணியிலிருக்கும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், தமிழார்வம் மிக்க நண்பர்கள், பாவலர்கள் போன்றோர் உடனடியாகத் தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரிவியுங்கள் !

செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்என்றார் வள்ளுவர்.

நாம் தமிழுக்குக் கட்டாயம் ஒரு அரண் அமைத்தாக வேண்டும். தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பாதுகாப்பு, தமிழினப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக ஒரு அமைப்பு வழியாக அரசுக்குக்  கோரிக்கை வைக்கப்பட்டால் அது நிறைவேற்றப் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இன்றைய நிலையில் அமைப்பு ஏதும் இல்லாததால், தமிழுக்குப் பாதுகாப்பே இல்லை ! “செயத் தக்க செய்யாது போவதும்தவறு என்பதை உணர்ந்து செயல்படுவோம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)10]
{24-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .