name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: சிந்தனை செய் மனமே (21) தமிழன் என்பது நம் அடையாளம் !

செவ்வாய், அக்டோபர் 01, 2019

சிந்தனை செய் மனமே (21) தமிழன் என்பது நம் அடையாளம் !

அடையாளத்தை இழந்து விட்டால் அழிந்து போகும் தமிழினம் !



இப்பூவுலகில் கோடிக் கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்று.  ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக வேறுபடுத்திக் காட்டுவது முகமே. முகத்தை மறைத்து விட்டுப் பார்த்தால் எந்த மனிதனையும் நாம் அடையாளம்  காண முடியாது. மனிதனுக்குப் புறநிலை அடையாளத்தை அளிப்பது முகமன்றி வேறொன்றும் இல்லை !
     
புறநிலை அடையாளம் முகம். அதுபோல் அகநிலை அடையாளங்கள் பல உள்ளன. முகத்தால் வேறுபட்ட இரு மனிதர்களை மேலும் அடையாளப் படுத்துவது பெயர். இவர் இன்னார் என்று நம்மிடம் டையாளப் படுத்துவது அவரது பெயரே !

இவர் இன்னார் என்று அவரது பெயரை வைத்துப் புரிந்து கொள்கிறோம். அடுத்து அவர் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பதை அவர் பேசும் மொழியை வைத்துத் தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இனம் என்பது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு கேடயம். தனித்து வாழும் ஒரு மனிதனுக்கு இந்தப் பூமியில்  பாதுகாப்பு அறவே இருக்காது. பாதுகாப்பான வாழ்க்கைக்கு இனம் என்ற கேடயம் நிச்சயம் தேவை !

பாதுகாப்பான  உயிர் வாழ்க்கை  என்பது  குழுவாக  இருக்கும்போது தான் மனிதனுக்குக் கிடைக்கிறது. இந்தக் குழு எப்படி அமைகிறது ?  அவனது நிறத்தாலா ? அவனது தொழிலாலா ? அவனது வாழ்க்கை முறையாலா ? இல்லை !  இல்லை ! அவன் பேசும் மொழியால் தான் இவன் இந்தக் குழுவைச் சேர்ந்தவன்  என்ற அடையாளம் அவனுக்குக் கிடைக்கிறது. தமிழ் பேசும் மனிதனுக்குதமிழன்என்பது இன அடையாளம். இந்தியாவில் வாழும் மனிதனுக்குஇந்தியன்என்பது நாடு சார்ந்த அடையாளம் !

தமிழைச் சார்ந்து இருக்கின்ற வரை தான் தமிழன்என்ற அடையாளம் அவனுக்கு நிலைக்கும். தமிழை விடுத்து வேற்று மொழிகளில் பேசுதல், எழுதுதல், சிந்தித்தல், ஆய்வு செய்தல் என்று அவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்தமிழன்என்ற அடையாளத்தை அவன் இழந்து விடுகிறான். இன அடையாளத்தை இழந்து விட்டால் பாதுகாப்பையும் அவன் இழந்து விடுகிறான். “ தமிழன்என்ற அடையாளத்தைத் துறந்தவன் வேறு அடையாளம் எதையும் அடைய முடியாமல் திரிசங்கு நிலையில் பாதுகாப்பு இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகிறான் !

தமிழன்என்ற இன அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி ?  பிற மொழிகளைக் கற்றுக் கொள்வோம். தவறே இல்லை. பிற மொழிகளில் புலமை பெறுவோம் தவறே இல்லை.  ஆனால் பிற மொழிகள் நம்வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டு, நம் வீட்டில் ஆட்சி செலுத்தும்  நமது மொழியான தமிழை வெளியே துரத்தி விட நாம் இடம் கொடுக்கக் கூடாது !

நம் வீட்டிற்குள்  எந்த அளவிற்கு நாம் பிற மொழிகளை அனுமதித்து இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.  நம் பெயரில் வடமொழி  ஆதிக்கம் தானே தலை தூக்கி நிற்கிறது. வேதரெத்தினம் தமிழ்ப் பெயரா ? இல்லையே ! இதுவரை வைக்கப்பெற்ற பெயர்கள் இருந்து விட்டுப் போகட்டும். இனிமேல் வைக்கப் பெறும் பெயர்களாவது தமிழ்ப் பெயர்களாக அமையட்டுமே ! பிறந்த நட்சத்திர அடிப்படையில் பெயர் வைக்கும் வழக்கம் தலை தூக்கி வருகிறது. வைக்கப் பெறும் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அனைத்தும் வடமொழிப் பெயர்களாக அல்லவா இருக்கின்றன !

ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள் வீட்டில்அம்மா”“அப்பாஇருவரையும் காணோம். “மம்மி” “டாடிதான் ஆட்சி செலுத்துகிறார்கள். வீட்டில் இக்குழந்தைகள் ஓரளவுக்குத் தமிழில் பேசுகிறர்கள். ஆனால் தமிழில் எழுதவும் தெரியவில்லை; தமிழில் இருப்பதைப் படிக்கவும் தெரியவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் குழந்தைகளைப் புலமை பெறச் செய்யும் பள்ளிகள் மறைந்து போய் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை மட்டும் சொல்லிக் கொடுத்துப் பணம் பறிக்கும் பள்ளிகள் தான் காணப் படுகின்றன.  இதே நிலை நீடித்தால், தமிழில் எழுதத் தெரியாத, தமிழில் பேசவே தெரியாத ஒரு புதிய சமுதாயம் உருவாகும். அந்த சமுதாயத்திற்குதமிழன் என்ற அடையாளமும் இருக்காது. “தமிழன்என்ற இனக் கேடயம் தரும் பாதுகாப்பும் இருக்காது !

ஆழ்ந்து சிந்திக்காதவர்களுக்கு, நாம் பாதுகாப்பாகத் தானே இருக்கிறோம் என்று தோன்றும். ஆபத்து வரும்போது தான், ஒரு மனிதனுக்கு, தான் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்பது புரிய வரும். “தமிழன்என்ற இனப் பாதுகாப்பின் அருமை அப்போதுதான் அவனுக்குப் புரியும் !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{12-01-2019}
-------------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------


         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .