எப்படி நாம் உச்சரிக்கிறோமோ, அப்படியே எழுத வேண்டும் !
தமிழில் எழுதும்போது, சந்திப் பிழை
சந்தியில் விட்டுவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இந்த அச்சம்,
தமிழ் மொழியின் இயற்கைக்கு மாறில்லாத பாங்கினை அறிந்து கொள்ளாததால் விளைவது.
எப்படி நாம் உச்சரிக்கிறோமோ, அப்படியே எழுதுவதைத்தான் தமிழ் இலக்கணம் எடுத்து இயம்புகிறது.
ஆங்கிலத்தில் இருப்பதைப் போல, எழுதுவது ஒரு வகையாகவும்,
உச்சரிப்பது வேறு வகையாகவும் இருக்கும் பொருத்தமற்ற மரபு, தமிழில்
இல்லை. B-U-T ஐ
“பட்” என்போம். P-U-T ஐ
“புட்” என்போம். தமிழில் “பயன்”
“நயன்” போன்றவை ஒரே வகையான உச்சரிப்பு உடையன என்பதை
அறிவோம். ”ப-ய-ன்
” என்பதை “பயுன்” என்றும்,
”ந-ய-ன்” என்பதை “நயுன்” என்றும் சொல்வதில்லை
!
“அவனை + கண்டேன்”
என்று இரு சொற்களைச் சேர்த்து உச்சரிக்கும் போது “அவனைக் கண்டேன்” என்றே உச்சரிப்போம். ”அவனை – கண்டேன்” என்று இடைவிட்டு
மொழிவதில்லை. இந்த இயற்கை நிகழ்ச்சியை, இலக்கணத்தில், ”இரண்டாம் வேற்றுமை உருபாகிய “ஐ”, ஒரு சொல்லின் ஈற்றில் (அவனை
= அவன் + ஐ) வந்து அடுத்து வரும் மொழிக்கு (கண்டேன்) முதலாக (க) ஒரு
வல்லெழுத்து (க,ச,த,ப) வருமானால், இடையில் அவ்வல்லெழுத்து மிகும் (புதிதாக ஒரு ”க்” தோன்றும்) என்று எழுதி வைத்திருக்கின்றனர் !
அப்படியே
“அவனுக்கு – கொடுத்தேன்” என்னும் இரு சொற்கள் இணையும் போது ”அவனுக்குக் கொடுத்தேன்”
என்போம். உச்சரிக்கும் போது இயற்கையாக இடையில்
“க்” வருகின்றது. “க்” ஐ விட்டுவிட்டு
உச்சரிப்பதில்லை. இந்த
உண்மையை, “நான்காம் வேற்றுமை உருபான “கு”
ஒரு சொல்லுக்கு இறுதியில் வரும்போது (அவனுக்கு
= அவன் + கு), வருமொழி முதலில்
உள்ள வல்லெழுத்து (கொடுத்தேன் என்பதிலுள்ள ”க்” (க் + ஒ = கொ) மிகும்” என்று இலக்கண விதியாக
எழுதி இருக்கின்றனர். இப்படியே பிறவும் !
இயற்கைக்கு மாறாக நாம் உச்சரிப்பதில்லை. ஆனால் எழுதும்போது
மட்டும், இயற்கை ஓசைக்கு மாறாக வல்லெழுத்து மிகாமல் எழுதிவிடுகிறோம்.
இலக்கணம் பகுத்துவிட்டுத்தான் வல்லெழுத்தை இடையில் இட்டு எழுத வேண்டும்
என்னும் அறிவை நாம் பெறவேண்டும் என்பதில்லை. நாம் எப்படி ஒலிக்கின்றோமோ,
அதையே விதியாக்கி, இலக்கணமாக எழுதி வைத்திருக்கின்றனர்
என்பதை உணர வேண்டும். சந்தி இலக்கணம் நமக்கு இடர் விளைவிப்பதன்று. நாம் உச்சரிப்பதுதான் இலக்கணம் என்பதே
உண்மை !
“அவனை – உயர்த்தி”
என்னும் இரு சொற்களைச் சேர்த்து ஒலிக்கும்போது ”அவனையுயர்த்தி” என்போம். வருமொழி முதலில் (உயர்த்தியில்) உள்ள “உ”
என்னும் எழுத்து “யு” என்று
ஆகிவிட்டிருக்கிறது. இதுவும் இயல்பாக நிகழ்வதே.
இரு சொற்களையும் சேர்த்து உச்சரிக்கும்போது “அவனை” என்னும்
சொல்லைத் தனியேயும், “உயர்த்தி” என்னும்
சொல்லைத் தனியேயும் இடைவிட்டு “அவனை – உயர்த்தி”
என்று மொழிவதில்லை. இயற்கையாக “அவனையுயர்த்தி” என்றே ஒலிக்கிறோம். நிலைமொழி இறுதியில் ஓர் உயிர் எழுத்து
[ஐ] வந்து, வருமொழி
முதலிலும் ஓர் உயிரெழுத்து [உ] வரும்போது,
இரண்டு உயிர் எழுத்தும் இயைவதால், வருமொழி முதலில்
உள்ள உயிர் “ய்” அல்லது “வ” ஆக மாறிவிடும் !
“அது அரிது” என்னும்
சொற்களுக்கு இடையில் “வ” தோன்றி
”அதுவரிது” என்றாகும். இவற்றை
நாமாக வலிந்து சொல்வதன்று. இயல்பாக நிகழ்வது. இதனை இலக்கணப் படுத்தி இருக்கின்றனர், அவ்வளவே
!
இவ்வாறாகத் தமிழில் எழுதும்போது ஏற்படும் சந்தி மாற்றங்கள் யாவும்,
இயல்பாக நாம் உச்சரிப்பதை ஒட்டியே ஏற்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எழுதும் போது அவ்வுச்சரிப்புக்கு ஏற்றபடி எழுத்துகளை இட்டு எழுத வேண்டும். இவ்வாறு செய்தால் சந்திப் பிழை நேராது.
சந்திமுறை, நம்மைச் சந்தியில் விடுவதற்கும் இல்லை
!
---------------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
--------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,24]
{09-08-2019}
--------------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .