கொத்து (01) மலர் (024)
---------------------------------------------------------------------------------------------------------
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வது என்பதேது ?
(ஆண்டு 1984)
(ஆண்டு 1984)
----------------------------------------------------------------------
கதிரவன் ஒளியில் காரிருள் மறையும்
கருமுகில் மறையாது
!
-- முகிலின்
கருமையும் விலகாது !
மதியுமிழ் நிலவில் மல்லிகை மலரும்
மரையிதழ் மலராது
!
-- இதழில்
மதுமணம் கமழாது !
உதிரும் பனிமழை ஒருமடு நிறையும் !
ஊருணி நிறையாது !
-- பயன்மிகு
நீர்நிலை ஆகாது !
மகிழ்ச்சியும் பெருகாது ! –
வளமுறு
வாழ்க்கையும் அமையாது !
குழலின் இனிமையில் கோநிரை மயங்கும் !
கொடும்புலி மயங்காது
! -- புலியின்
குணங்களும் உறங்காது !
அழலின் சுடரில் அடவியும் கருகும் !
அறிவொளி கருகாது
! -- அறிவின்
ஆற்றலும் உருகாது !
கழனியில் செந்நெல் கதிர்மணி சொரியும் !
காழகம் சொரியாது
! -- நீலக்
கற்களும் விளையாது !
பழகிட நெஞ்சம்,
மஞ்சம் கிடைக்கும் !
பாசம் கிடைக்காது
! -- அன்புப்
பரிவும் இருக்காது !
அறுசுவை உணவு நலம்பெற உதவும் !
அறிவுற உதவாது
! -- உலகியல்
அறிந்திட இயலாது !
குறுமணல் வயலில் கரும்புகள் வளரும் !
குடைவரை வளராது
! -- கொண்டல்
கொஞ்சிட வாராது !
சிறுகயம் பெருகும் புனல்மிக இனிக்கும் !
செந்நீர் இனிக்காது
! -- வழியும்
கண்ணீர் சுவைக்காது !
நறுமண மதுவும் நங்கையர் உறவும் !
நல்கிடும் இன்பம்மிகும்
! -- வாழ்வும்
நலிந்திடத் துன்பமுறும் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
அருமை, அருமை, நயம் மிகுந்த சொற்களும், கருத்தாழமும் கொண்ட இனிய கவிதை. நீண்ட நாட்கள் கழித்து நல்ல கவிதையை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை ! இப்போதெல்லாம் கவிதை எழுத நேரம் கிடைப்பதில்லை ! கவிதையைச் சுவைத்து மகிழ்வது ஒரு கலை ! அந்தக் கலையுள்ளம் தங்களுக்கு இருக்கிறது ! இத்தகைய கலையுள்ளம் உடையவர்கள் கவிஞர்களாகத்தான் இருப்பார்கள் ! தாங்களும் ஒரு கவிஞர் என்பதை அடையாளம் காட்டுகிறது தங்கள் கருத்துரை ! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் !
நீக்கு