இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக !
பாடலின்
பின்னணி:
---------------------------------
ஒருஅரசனின் ஆநிரைகளை (பசுக் கூட்டத்தினை)
மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்து சென்றனர். ஆநிரைகளை இழந்த அரசன்
அவற்றை மீட்பதற்காகக் கரந்தை மலர் சூடிப் போர் நடத்த விரும்பினான். அவன் தன் நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு
அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப்
போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச்
செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும்
கலந்துகொண்டார்.
வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின்
குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின்
குடத்தில் ஆரக்கால்கள் போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.” என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு. பாடல்.290.
------------------------------------------------------------------------------------------------------------
இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை, இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

உரை:
----------
”அரசே, முதலில்
கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன்
செய்யும் போரையும், யானைகளையும், நன்கு
செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே ! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக்
கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில்
செருகப்பட்ட ஆரக்கால்கள் போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து
புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை
அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத்
தாங்கி உன்னைக் காப்பான்.”
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
இவற்கு =
இவனுக்கு; ஈத்து = கொடுத்து; மதி – அசைச்சொல்.;
இனம் = கூட்டம்; இயற்றல் = புதிதாகச் செய்தல்;
குருசில் = குரிசில் = தலைவன், அரசன்; நுந்தை = உன் தந்தை ; ஞாட்பு = போர், போர்க்களம் ; குறடு = வண்டிச் சக்கரத்தின் குடம்
(நடுப்பகுதி.) ; மறம் =
வீரம்; மைந்து = வலிமை.; உறை = மழை;
உறைப்புழி = மழை பெய்யும்பொழுது; ஓலை =
ஓலைக்குடை.
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ: 2050, மீனம், 08]
{22-03-2019)
------------------------------------------------------------------------------------------------------------