name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, ஜனவரி 23, 2021

புறநானூறு (204) ஈ என இரத்தல் இழிந்தன்று !

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று !

                                        ********


புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார். வள்ளலாகிய அவன் ஏனோ உடனே வழங்கவில்லை. அதனால் புலவர் தான் வந்த வேளை சரியில்லை என்று நொந்துகொண்டு வேறு உத்தியைக்  கையாளுகிறார். அவன் கொடையைப் பாராட்டுகிறார் !

------------------------------------------------------------------------------------------------------------

 

ஐயா ! தருமம் செய்யுங்கள்என்று கேட்டு  இரத்தல் இழிவான செயல். அப்படி இரப்பவனுக்கு இல்லைஎன்று சொல்லி ஏதும் கொடுக்காமல் விரட்டியடிப்பது  இரப்பதைக் காட்டிலும்  மிகவும் பண்பாடற்ற  இழிவான செயல்  !

 

இதனைப் பெற்றுக்கொள்என்று ஒருவனுக்கு வழங்குவது உயர்ந்த செயல். அவ்வாறு வழங்குவதை எனக்கு வேண்டாம், என்னை மன்னித்து விடுங்கள்’”என்று ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது  கொடுப்பதைக் காட்டிலும் மிகவும் மேலான செயல் !

 

கடலில் செல்வோர், நீர் வேட்கை எற்படும்போது,   தெளிந்த நீராயினும் கூட அந்த உவர் நீரை  அருந்த  மாட்டார்கள்.  ஆடுமாடுகளும், காட்டு விலங்குகளும் சென்று உண்பதால் அவற்றின் கால்கள் பட்டுக் குளத்து நீர் கலங்கி இருந்தாலும்  தம் தாகம் தீர்த்துக்கொள்ள அந்தக் கலங்கிய  நீரையே   மக்கள் நாடிச்  செல்வர் !

 

வல்வில் ஓரியே !  மன்னவா ! கரியமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் அல்லவோ நீ ! உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால் தான் புறப்பட்டு வந்த  நேரம்  சரியில்லை என்றுதான் நாடி வந்தவர்கள்  நொந்து கொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை !


அதனால் உன்னை நான் வெறுக்க மாட்டேன்; நொந்துகொள்ளவும்  மாட்டேன். நீ நீடூழி  வாழ்க ! என்று சொல்லி ஒரு பாடல் மூலம் தன் எண்ணத்தைப் பதிவு செய்கிறார் இதோ அந்தப் பாடல் !

-------------------------------------------------------------------------------------------------------------

புறநானூறுபாடல்  எண் (204)

--------------------------------------------------

என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன்என்றல் அதனினும் இழிந்தன்று !

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்

கொள்ளேன் என்றல்அதனினும் உயர்ந்தன்று !

தெண்ணீர்ப் பரப்பின்  இமிழ்திரைப்  பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே !

ஆவும்  மாவும் சென்றுண்  கலங்கி

சேற்றொடு பட்ட சிறுமைத்  தாயினும்

உண்ணீர்  மருங்கின்  அதர்பல  வாகும் !

புள்ளும்  பொழுதும்  பழித்தல்  அல்லதை

உள்ளிச் சென்றோர்  பழியலர்; அதனால்

புலவேன்  வாழியர்,  ஓரி !  விசும்பில்

கருவி  வானம் போல

வரையாது சுரக்கும்  வள்ளியோய்  நீயே !

 

-------------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

--------------------------------------

 

ஈ என = தருக என;  இரத்தல் = யாசித்தல்; இழிந்தன்று = இழிந்தது;  ஈயேன் என்றல் = (அப்படிக் கேட்டவருக்குத் )தருவதற்கு இயலாது  என்று சொல்வது ; அதனினும் = இரப்பதைக் காட்டிலும்; இழிந்தன்று = மிகவும் கேவலமான செயல்; கொள் எனக் கொடுத்தல் = பெற்றுக் கொள் எனக் கொடுத்தல் ; உயர்ந்தன்று = உயர்ந்த செயல் ; கொள்ளேன்  என்றல் = கொடுப்பதை வேண்டாம் என்று மறுப்பது;  தெண்ணீர் = தெளிந்த நீர்; இமிழ் திரை = ஒலியெழுப்பும்  அலை; உண்ணார் ஆகுப = அருந்தமாட்டார்கள்;  நீர் வேட்டோரே = நீர் வேட்கையால்  அருந்த விரும்புவோர் ;

 

ஆவும்  மாவும் = ஆடுமாடுகளும் காட்டு விலங்குகளும்சென்று உண் = சென்று நீரை அருந்துவதால்; சேற்றொடு பட்ட = சேறு கலந்த ; சிறுமைத்து  ஆயினும் = சிறுமை உடையது என்றாலும்உண்ணீர் மருங்கின் = உண்ணும் நீர் தரும் குளத்தருகே; அதர் பல ஆகும் = செல்கின்ற வழிகள் பல உளவாகும்; புள்ளும் = புறப்பட்டு வருகையில் கானப்பட்ட புள் நிமித்தமும்; பொழுதும் = நேரத்தையும்பழித்தல் அல்லதை = குறை சொல்வார்களேயன்றி ; உள்ளிச் சென்றோர் = நாடிச் சென்றோர்பழியலர் = வள்ளல்களைக் குறை சொல்ல மாட்டார்கள்; புலவேன் = வெறுக்க மாட்டேன் ; வாழியர் ஓரி = ஓரி ! நீ நீடு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.; கருவி வானம் = கரிய மேகம்வரையாது சுரக்கும் = அளவின்றிக் கொடுக்கும்; வள்ளியோய் = வள்ளலே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 10]

(23-01-2021)

-------------------------------------------------------------------------------------------------------------

ஈ என இரத்தல் !