name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், ஜூலை 08, 2020

சிந்தனை செய் மனமே (67) தனியார் மயம் !

எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி விட்டால்,  அரசு என்று ஒன்று எதற்கு ?


ஒரு நாடு அயலார் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுகிறது; அல்லது முடியாட்சி முறையிலிருந்து குடியாட்சி முறைக்கு மாறுகிறது; அல்லது கூட்டாட்சி முறையிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக அறிவித்துக் கொண்டு புதிய ஆட்சி அமைக்கிறது !

இவ்வாறு விடுதலை பெறுவதும், பிறரது கட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதும், ஒரேயொரு அடிப்படை நோக்கத்திற்காக !  மக்கள் அனைத்து வசதிகளையும் பெற்று நலமுடன் வாழவேண்டும்இந்த நோக்கமன்றி வேறுதுவும் இல்லை !

நம் நாடு 1947 –ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. மக்களை மக்களே ஆள்கின்ற குடியரசு ஆட்சிமுறை 1950 -ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது !

நேரு தலைமையிலான நடுவணரசும் மாநில அரசுகளும் மக்களின் படிப்பறிவை மேம்படுத்தும் பொருட்டு,  நாடெங்கும் பல்லாயிரக் கணக்கான கல்விக் கூடங்களைத் திறந்தன ! தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஊரகத்திலும் ஒரு தொடக்கப் பள்ளி என்ற கணக்கில் காமராசர் பள்ளிகளைத் திறந்தார் !

உயர்கல்வி வாய்ப்புகளை  உருவாக்கும் பொருட்டு, கலைக் கல்லூரிகளும், பொறியியற் கல்லூரிகளும் மாநில அரசுகளால்  பரவலாகத் திறக்கப்பட்டன ! மருத்துவ மனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் பல்கிப்  பெருகின !

தொழிற் சார்புக் கல்வி நிலையங்களான பல்தொழிற் பயிலகம் (POLYTECHNIC), தொழிற் பயிற்சி நிலையங்கள் (INDUSTRIAL TRAINING INSTITUTES) ஆகியவை அரசினால் நாடெங்கும் திறக்கப்பட்டன !

அஞ்சல் மற்றும்  தொலைவரித் துறை வலுப்படுத்தப் பட்டு, நாடெங்கும் அஞ்சலகக் கிளைகளும், தொலைவரி அலுவலகங்களும் திறக்கப்பட்டன !  பாரத மிகு மின் தொழிலகம்  (BHEL),  படைக்கலத் தொழிலகம் (ORDNANCE FACTORY), இரும்பு உருக்காலைகள், பாரத மின்மத் தொழிலகம் (BEL), கோட்டைப் பொறித் தொழிலகம் (TANK FACTORY), இணைப்புப் பெட்டித் தொழிலகம் ( INTEGRAL COACH FACTORY)  இந்திய எந்திரக் கருவிகள் தொழிலகம் (H.M.T), இன்னும் எத்துணையோ தொழிற்சாலைகளைத் திறந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கினர் !

நடுவணரசின் சார்பில் இந்திய எண்ணெய் நிறுவனம் (INDIAN OIL CORPORATION), பாரத கல்லெண்ணெய் நிறுவனம் (BHARAT PETROLEUM CORPORATION) இந்திய உருக்கு ஆணையம் (STEEL AND IRON CORPORATION) இந்திய உணவுக் கழகம் (F.C.I) போன்ற பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன !

பக்ராநங்கல் அணை போன்ற பல அணைக்கட்டுகள் உருவாக்கப்பட்டன. நேரு தலைமையிலான அன்றைய ஆட்சிக்கு இவற்றுக்கெல்லாம் பணம் இருந்தது. மக்கள் நலம், வேலை வாய்ப்புப் பெருக்கம், தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, என நல்ல கொள்கைகளின் அடிப்படையில் அன்றைய ஆட்சி நடந்து வந்தது !

தமிழ்நாட்டில் 1967 –ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் பேருந்துகளை எல்லாம் அரசுடைமை ஆக்கினார் முதலமைச்சர் கா..அண்ணாதுரை ! இந்திய அரசின் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி தனியார் உடைமைகளாக இருந்த அளகைகளை (BANKS) எல்லாம் நாட்டுடைமை ஆக்கினார் !

அரசின் சார்பில்ஏர் இந்தியா”, “இந்தியன் ஏர்லைன்ஸ்  என்னும் வானூர்திக் குழுமங்கள் இயங்கி வந்தன !

நடுவணரசு மற்றும் மாநில அரசுகளின் இத்தகைய தொலைநோக்குத் திட்டங்களால், நடவடிக்கைகளால், வேலை வாய்ப்புகள் பெருகின ! படித்த இளைஞர்களுக்கு உறுதியாக  வேலைகள் கிடைத்தன ! உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தது ! இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பணிப் பாதுகாப்பு (JOB SECURITY) இருந்தது !

நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்த பின்பு, பணம் படைத்தவர்களுக்கு ஆதரவான போக்குப் பின்பற்றப்பட்டது. உலகமயமாக்கல் என்னும் பெயரில் அயலகப் பணமுதலைகள் நம் நாட்டிற்குள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டனர். அவர்கள் முதலீட்டில் பற்பல தொழில்களும் தொடங்க இசைவளிக்கப்பட்டது ! இன்று இந்தியாவில் இருக்கும் ஆயிரக் ஆணக்கான பெரு நிறுவனங்கள் எல்லாம் அயல்நாட்டாரின் உடைமைகளே !

தமிழ் நாட்டில் ம.கோ.இரா .(M.G.R) ஆட்சிக்கு வந்த பிறகு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், பல்தொழில் நுட்பப் பயிலகங்களும், பொறியியற் கல்லூரிகளும் தொடங்க தனியாருக்கு இசைவு அளிக்கப்பட்டது ! இவை புற்றீசல்களாகத்  தமிழ் நாடெங்கும் தோன்றிக் கல்வியின் தரத்தைத் தாழ்த்தியது மட்டுமன்றி  விலைகொடுத்து வாங்கும்  பொருளாகவும் (COMODITY)  கல்வியை மாற்றிவிட்டது !

கல்வித் துறையில் தனியாரின் மேலாண்மை தலையெடுக்கத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரிகள் பல தொடங்கவும் இசைவு அளிக்கப்பட்டது ! தனியார் பேருந்துகளை இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது ! ஒப்பந்தப் பேருந்துகள் (OMNIBUS) என்ற பெயரில் தொலைப்புலப்  பேருந்துகள் (LONG ROUTE BUSSES) அரசுப் பேருந்துத் தடங்களில் இயக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகங்களை நலிவடையச் செய்தன.   செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு ஒரேயொரு கல்லூரி வைத்து நடத்தியவர்கள் எல்லாம் குழுமம் (GROUP) தொடங்கி பல்வேறு கல்லூரிகளை, பல்வேறு ஊர்களில் தொடங்கிட இசைவளிக்கப்பட்டது !

அஞ்சல் போக்குவரத்து முழுக்க முழுக்க நடுவணரசின் கட்டுப் பாட்டில் இருந்து வந்த நிலை மாறி, நாடெங்கும்கூரியர்நிறுவனங்கள் தோன்றவும், கடிதப் போக்குவரவுகளை அவர்கள் நடத்தவும் ஒப்பளிக்கப்பட்டது ! இதனால் அஞ்சல் துறை நொடித்துப் போய்க் கொண்டிருக்கிறது; கூரியர் நிறுவனங்கள் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கின்றன !

வானொலி நிலயங்களை பண்பலை (F.M.RADIO) என்ற பெயரில் தனியார் நடத்திட வாய்ப்பளிக்கப்பட்டது. அரசே தொலைக்காட்சிகளை நடத்தி வந்த நிலை மாறி, தனியார் பலர், பல பெயர்களில் தொலைக்காட்சி நிலையங்களை நடத்திட  இசைவளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொலைக்காட்சிச் சேவையின் தரம் படுவீழ்ச்சி அடைந்துவிட்டது.  திரைப்படங்களின் மீதான ஈர்ப்பை 24 மணி நேரமும் இவை புகட்டிக் கொண்டிருக்கின்றன !

தொடர் நாடகம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க காட்சிகளை இவை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்குத் தணிக்கை முறையும் கிடையாது. தனியார் கைகளுக்குப் போகும் தொழில்களும் சேவைகளும், மக்களுக்கு எந்த அளவுக்குத் தீங்கு செய்ய முடியும் என்பதற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களே எடுத்துக்காட்டு !

காப்பீட்டுத் தொழிலில் (INSUREANCE SECTOR) தனியார் நுழைய வாய்ப்பளிக்கப்பட்டது. பஜாஜ், அதானி, அம்பானி, சிரீராம், போன்ற பணத் திமிங்கிலங்களின் கைகளுக்குள் காப்பீட்டுத் துறை  அடைக்கலமாகி விட்டது !  

பாரதிய சனதாக் கட்சி அரசு பதவிக்கு வந்த பின்பு, அரசுத் துறை  நிறுவனங்களின் பங்குகளில் பெரும்பான்மைப் பகுதி  தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றது. எண்ணெய் நிறுவனங்கள், நெய்வேலி, பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனம் போன்றவற்றின் பங்குகளில் 51% தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன !

இருப்பூர்தி நிலையங்கள் சில இடங்களில் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இருப்பூர்திப் பாதைகள் சிலவும் இப்போது தனியார் வயம் சென்றிருக்கின்றன. நாட்டில் மின் வழங்கல் பணியைத் தனியாரிடம் ஒப்பட்டைக்க நடுவணரசு முடிவு செய்திருக்கிறது. பாதுகாப்புத் துறைக்குத் தேவையான படைக்கலன்கள் தயாரிப்புப் பணிகளை தனியாரிடம் விடுவதற்கு  நடுவணரசு முனைப்பாக இருந்து வருகிறது !

இப்படி ஒட்டு மொத்தமாக அரசு சார்பில் இயங்கி வரும் நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்க நடுவணரசு சொல்லும் காரணம்அவற்றைத் தொடர்ந்து நடத்தி வர அரசிடம் பணமில்லை” ! நேரு காலத்தில் அரசிடம் பணம் இருந்தது, பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார்கள். இந்திரா காந்தி காலத்தில் பணமிருந்தது. பல திட்டங்களை நிறைவேற்றினார்கள்.  இப்போது உங்களிடம் பணமில்லை, அதனால் தொழிற்சாலைகளை விற்கிறோம் என்று சொன்னால், அரசின் வருவாய் எல்லாம் எங்கே போகிறது ?

அரசின் கைகளில் இருக்கும் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், நீங்கள் மட்டும் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்? ஆட்சியையும் ஏலம் போட்டுத் தனியாரிடம் விற்றுவிடுவது தானே ? 

இந்த இடத்தில், இதைப் படிக்கும்  மக்களுக்கு ஒரு விளக்கம் ! தனியாரிடம்  செல்லும் தொழிற்சாலைகளும், சேவைகளும் மிகச் சிறப்பாக  நடப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோமே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கருத்து சிலரிடம் காணப்படுகிறது !

உண்மை தான் ! தனியார் துறையினால் நடத்தப் படும் தொழிற்  சாலைகளும், நிறுவனங்களும்  சிறப்பாக இயங்கி வருவது உண்மை தான் ! ஆனால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம், அவர்களின் குடும்பச் செலவுகளுக்குப் போதுமானதா இருக்கிறதா ? சேமிக்க முடிகிறதா ? அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இருக்கிறதா ? எட்டு மணி நேர வேலை என்னும் தொழிலாளர் நலச் சட்டம் எல்லாத் தொழிலகங்களிலும் பின்பற்றப்படுகிறதா ?

குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு குடும்பத்தை நடத்த என்ன செய்வார்கள் ? உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதாயத்தில் பங்கு கொடுப்பதில்லையே ! கொடுத்தாலும், கண்துடைப்பாகச் சிறு தொகைதானே தரப்படுகிறது !

இந்தத் துன்ப நிலைகளைக் காணவா நாட்டுக்கு விடுதலை வாங்கினோம் ? இங்கு ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிறார்கள்; பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தைக் குவிக்கிறார்கள். அரசின் உடைமைகளை எல்லாம், தனியாரிடம் விலைவைத்து விற்பதற்காகவா  நாட்டுக்கு விடுதலை வாங்கினோம் ? எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி விட்டால், அரசு என்று ஒன்று எதற்கு ?

சிந்தனை செய் மனமே ! சிந்தனை செய் ! சிந்தித்தால் தான் தெளிவு பிறக்கும் ! புதிய விடியலும் பூக்கும் !

-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),24]
{08-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------