”மோடிஜி” வடவர் பண்பாடு ! “மோடி அவர்கள்” தமிழர் பண்பாடு !
தமிழ்வாணன் : வாங்க அன்பழகன்ஜி ! சௌக்யமா ?
அன்பழகன் : நலம்தான் தமிழ்வாணன் ! இது என்ன புதுப்பழக்கம்,
“ஜி” போட்டுப் பேசுகிறீர்கள் !
தமிழ்வாணன் : “ஜி” என்பது
மரியாதையைக் குறிக்கும் சொல் ! காந்திஜி, நேருஜி, மோடிஜி மாதிரி அன்பழகன் ஜி ! ஏன் ? உங்களுக்குப் பிடிக்கவில்லயா ?
அன்பழகன் : அடுத்து அம்மாஜி, அப்பாஜி, தாத்தாஜி, பாட்டிஜி,
அண்ணாஜி அண்ணிஜி, அக்காஜி, மாமாஜி, மாமிஜி என்றெல்லாம் அழைப்பீர்களோ ?
தமிழ்வாணன்; எல்லோரும் மரியாதைக்கு உரியவர்கள்
தானே ! “ஜி” போட்டு அழைத்தால் என்ன
?
அன்பழகன் ::அம்மா, அப்பா,
தாத்தா, மாமா என்பவை எல்லாம் மரியாதை இல்லாத சொற்கள்
என்று உங்களுக்கு யார் சொன்னது ? அம்மாவை “அம்மாஜி” என்று
”ஜி” போட்டு அழைப்பது தான் மரியாதை என்று எந்த
முட்டாள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் ?
தமிழ்வாணன்: ஏன் கோபப்படுகிறீர்கள் அன்பழகன்
? அப்படி என்ன நான் தவறாகச் சொல்லி விட்டேன் ?
அன்பழகன் :: ”அம்மா ! சென்று வருகிறேன்” என்று சொல்வது பண்புக் குறைவான கூற்று
அன்று ! ”அம்மா !
சென்று வரேண்டி “ என்பது தான் பண்பற்ற பேச்சு ! ”அம்மாஜி ! சென்று வரேண்டி !” என்று
சொல்வது பண்புடைய பேச்சாகுமா ? பெயர்ச் சொல் மற்றும் விளிச் சொல்லுடன்
“ஜி” சேர்ப்பது இந்திக்காரர்கள் வழக்கம்
!
தமிழ்வாணன்: இந்திக்காரர்களின் வழக்கத்தை நாம்
பின்பற்றுவது தவறா ?
அன்பழகன் :: தவறு தான் ! அவர்கள் பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுகிறார்கள்; குல்லா
போட்டுக் கொள்கிறார்கள் ! நீங்களும் அவ்வாறு செய்வது தானே
! அந்தப் பெண்கள் தலையில் முக்காடு போட்டு, மூக்கிலும்,
காதிலும், கை, கால்களிலும்
வளையங்களைத் மாட்டிக் கொள்கிறார்கள்
! உங்கள் தாயாருக்கும், மனைவிக்கும் முக்காடு போட்டுக்
கொள்ளத் துணியும், கை, கால், மூக்கு, காதுகளில் மாட்டிக் கொள்ள வளையங்களும் வாங்கித்
தருவீர்களா ?
தமிழ்வாணன்: என்ன இப்படி தப்புத் தப்பாகப் பேசுகிறீர்கள்
? ”ஜி” என்று அழைத்ததற்காக இவ்வளவு கோபமா
?
அன்பழகன் : : இந்தியில் “எ”, “ஒ” எழுத்துகள் கிடையா ! அவர்களைப் பின்பற்ற விரும்பும் நீங்கள்,
இனிமேல் பெத்தபெருமாளை “பேத்த பேருமாள்!”
என்று சொல்லுங்கள் ! வெங்காயத்தை, “வேங்காயம்” என்று கடையில் கேட்டு வாங்குங்கள் !
புத்தகக் கடைக்குப் போய், ஐயா ! ”தோல்காப்பியம்” இலக்கண நூல் இருக்கிறதா என்று கேளுங்கள்
!
தமிழ்வாணன் : போதும் அன்பழகன் ! என்னைக் குழப்பாதீர்கள் !
அன்பழகன் :: தமிழ்வாணன் ! இந்தியில் “மேசை” என்பது பெண்பால்
! இனி, மேசை சுவர் ஓரத்தில் கிடக்கிறாள், என்று
சொல்லிப் பாருங்கள் !
தமிழ்வாணன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை அன்பழகன்
! குழப்பமாக இருக்கிறது !
அன்பழகன் தமிழ்வாணன் ! ஒவ்வொரு நாட்டினருக்கும், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும்
வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளன ! உணவுப் பழக்கம்,
பேச்சு, நடை, உடை,
ஒப்பனை, பண்பாடு ஒவ்வொன்றிலும் நமக்கும் அவர்களுக்கும்
வேறுபாடுகள் உள்ளன ! அவர்களுடன் நாம் அன்பாகப் பழகலாமே அன்றி,
அவர்களிடமிருந்து எதையும் இரவல் வாங்கக் கூடாது !
தமிழ்வாணன் : அப்படியா ?
அன்பழகன் :: புலியைப் பார்த்து தன் உடலிலும்
வரிகள் இருந்தால் அழகாக இருக்குமே என்று எண்ணி பூனை சூடு போட்டுக் கொள்வது புத்திசாலித்
தனமாகுமா ? இந்திக்காரர் “ஜி” போட்டுப் பேசுகிறார் என்பதற்காக நாமும் “ஜி” போட்டுப் பேச வேண்டுமா ? நாம் எதிரில் வருபவரைப் பார்த்து
“வணக்கம்” என்கிறோம் ! எந்த
இந்திக்காரராவது “வணக்கம்” என்று சொல்கிறாரா
? “நமஸ்கார்” என்றல்லவா சொல்கிறார் !
தமிழ்வாணன்: ஆமாம் !
அன்பழகன் :: வணக்கத்தை அவர் நம்மிடமிருந்து
இரவல் வாங்க மறுக்கிறார்; தேவையின்றி, தொடர்வண்டி
நிலையங்களிலும், அஞ்சலகங்களிலும், அளகைகளிலும்
(BANKS), இந்தியைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். நம் தமிழகப் போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் பற்றுச் சீட்டுகளில் கூட இந்தியைப்
புகுத்திவிட்டனரே. !
தமிழ்வாணன்: நீங்கள் சொல்வது உண்மை தான்
!
அன்பழகன் :: நமது தமிழ், அவர்களுக்கு வேப்பங்
காயாகக் கசக்கிறது ! அவர்களது ”ஜி”
உங்களுக்கு இனிக்கிறதா ? தமிழ்வாணன் என்று பெயர்
வைத்துக் கொண்டு, தமிழையும், தமிழ் உணர்வையும்
மறந்து நீங்கள் செயல்படலாமா
?
தமிழ்வாணன்: நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கிறது
! ஒப்புக் கொள்றேன் !
அன்பழகன் : தமிழ்வாணன் ! உங்கள் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்
! தெரிந்தோ தெரியாமலோ, தங்கள் பெயருடன் அல்லது
பிறர் பெயருடன் “ஜி” இணைத்துக் கொண்டு பேசியும்
எழுதியும் வருகின்ற தமிழ்நாட்டவர் எல்லோரும் திருந்த வேண்டும் ! தமிழுக்கு “அணி” சேர்க்க வேண்டுமேயன்றி “பிணி” சேர்க்கக்
கூடாது !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050:துலை,(ஐப்பசி)26)
{12-11-2019}
---------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற உரையாடல் வடிவக் கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------