கொத்து (01) மலர் (048)
------------------------------------------------------------------------------------------------------------------------------
நாகையிலிருந்து உளுந்தூர்ப்பேட்டைக்கு அலுவலக
மேலாளராகப் பதவி உயர்வில் செல்லும்
நண்பர் திரு. சு.சந்தானம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட
தேனீர் விருந்தின் போது
நான் ஆற்றிய உரை
(நாள் 8 / 1975)
----------------------------------------------------------------------------------------------------------
அன்புடன் அருள்தவழும் அவைத்தலைவர் அவர்கட்கும்,
அமைதியுடன் எனதுரையைச் செவிமடுக்கும் நண்பர்க்கும்,
இன்றுடன் இந்நிலையம் துறந்துசெலும் தோழர்க்கும்,
இனிமையுடன் சுவையுண்டி ஈங்குதந்த பேரவைக்கும்,
தலைவணங்கிக் கரம்குவித்துத் தருகின்றேன் வணக்கம் !
தகைமையுடன் ஏற்றிடுக ! தமிழ்த்தாயே வாழ்த்து !
******************************************
பன்னிரு ஆண்டுகள் உதவி
யாளர் பணிக்கடன் நீராற்றி - இன்று
பதவி உயர்ந்து மேலாள
ராகப் பணிபெறச் செல்கின்றீர் !
அன்பின் முறையால் இவ்விடம்
போந்து அடியேன் பேசுகிறேன் - உரையில்
அணுத்துக ளேனும் குற்ற
மிருப்பின் அருளுடன் பொறுப்பீரே !
இரண்டு புரவிகள் பந்தயத்
திடலில் இணைந்து ஓடினவே
- இடையில்
இன்னொரு புரவி முந்திடு
மோவென இரண்டும் பயந்தனவே !
திரண்ட வாய்ப்பு ஒற்றைப்
புரவியைத் தேர்ந்து எடுத்ததுவே ! – முடிவில்
தேரிய புரவி நம்மிடம்
ஈங்குத் தெரியல் அடைந்ததுவே !
இன்றைய தோல்வி நாளைய
வெற்றியின் இறுதிப் படிமேடை ! – இதனை
எண்ணித் தேறுக ! என்று
உரைப்பேன் இன்னொரு புரவியிடம் !
சென்று வருக ! என்று
விடைதரும் காலம் நின்றுவரும் ! – நாங்கள்
சிந்தை மகிழ்ந்திட வென்று
வருகென அன்று குரல்தருவோம் !
[ பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அன்பருக்கு ஒரு சொல் ! ]
மேலாளர் என்றவோர் பட்டத்தைப் பெறுவதால்
மேலாளர் ஆவதில்லை ! – சிலர்
காலாளர் என்றவோர் கைக்குண்டை எறிந்தாலும்
காலாளர் ஆவதில்லை !
வேளாளர் என்றவோர் பட்டத்தைப் பெறுவதால்
வேளாளர் ஆவதில்லை ! – பெரும்
சீராளர் என்றவோர் சிரங்கவ்வி அடைந்தாலும்
சீராளர் ஆவதில்லை !
தாளாண்மை உள்ளவரும் ஆளாண்மை உள்ளவரும்
மேலாண்மை எய்தலுறுதி ! – நல்ல
கேளாண்மை உள்ளவரும் நூலாண்மை உள்ளவரும்
வேளாண்மை செய்தலுறுதி !
கோளாண்மை உள்ளவரும் குணம்நாடிக் கதிரவனைக்
கூப்பிடும் உயிர்களெல்லாம் ! – நல்ல
வேளாண்மை செய்கின்ற விதம்நாடி மாந்தரினம்
விதந்தேத்தும் நாள்களெல்லாம் !
தாளாண்மை மீதூரும் தரம்நாடிப் பெரியோர்கள்
தலம்பற்றி உதவிசெய்வார் ! – அவர்
மேலாண்மை புரிகின்ற மனம்நாடி அலுவலர்கள்
மேன்மையாய்த் தாங்கிநிற்பார் !
******************************
ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதமென்றால்
ஒப்பாதார் யாருமில்லை !
கருகாத மலருக்கு மணமுண்டு என்றாலக்
கருத்தினில் தவறுஇல்லை !
சிறுபருவம் பழகியதால் நண்பரவர் நற்குணனைச்
செப்புவதில் பொய்மையில்லை !
சீருயர்ந்து செல்பவரை சிக்கெனவே காக்கைகொளச்
சிந்தைதனில் எண்ணமில்லை !
சிந்தைதனில் எண்ணமில்லை !
[ குறிப்பாக அவரது சில குணநலன்கள் ! ]
அரவணைத்துச் செல்லுகின்ற அருந்திறலால் தனிவேந்தன் !
அமைதியுடன் நலமளிக்கும் ஆற்றலினால் இனத்தலைவன் !
உரிமையுடன் நெறிப்படுத்தும் உறவதனால் பேராசான் !
உவகையுடன் கைகொடுத்து உதவுவதால் நன்னண்பன் !
ஏற்றவழி எடுத்துரைக்கும் இயல்பதனால் உறுதங்கை !
இனிமையுடன் அன்புசெயும் இங்கிதத்தால் பெருந்தவத்தாய் !
பற்றுமிகக் கொண்டுடனே பயில்வதனால் நற்றமக்கை !
பாசமுடன் உறவுகொளும் பாங்கதனால் எமதண்ணா !
அன்னைத் தமிழுக்கு அணிசெய்யும் அழகுமகன் !
அலுவலகப் பயன்பாட்டில் தமிழ்வளர்க்கும் எளியவுளன் !
என்னைச் சிலவரிகள் எடுத்தெழுதி ஈங்குரைக்க,
இயல்பூக்கம் பெறச்செய்த ஏலமலைக் கோலத்தேன் !
[ மேலாளராகப் புதிய பணி ஏற்பவருக்குப் பொருத்தமான சில நல்லுரைகள் ]
வாலாய மாகவரும் வம்புகளை நெருங்காதீர் !
வாய்மையுடன் நும்பணியை வளம்பெருகச் செய்திடுவீர் !
கோலாக யார்வரினும் குறுநகையால் வென்றிடுவீர் !
கூப்புகின்ற கரத்துள்ளும் கொடுவாளைத் தேடிடுவீர் !
வேலாக வந்தவரை நூலால் விலங்கிடுக !
வேய்ங்குழலாய் நீர்மாறிக் காய்ங்குரலை ஆண்டிடுக !
ஆலாக நிழல்தந்து அனைவரையும் நடத்திடுக !
வெள்ளைச் சிறகடித்து விண்ணுலகில் வட்டமிடும்
வீட்டுப்பு றாவொன்று விதிபிறழ்ந்து காக்கையுடன்,
உள்ளத்து மயல்கொண்டு உறவாடப் புகுந்தக்கால்,
ஒண்சிறகு நிறம்மாறா ! உள்ளந்தான் மாறிவிடும் !
வெள்ளிப்ப ணம்தனது விழிதிறந்து நோக்குங்கால்
விசும்பனைய நீதியெலாம் வெண்மணலாய் ஆகிவிடும் !
கள்ளமனம் உடையோர்பால் காசுதான் மந்திரக்கோல் !
காசினியின் நியதியிது ! கவனமுடன் வாழ்ந்திடுக !
[ நற்றமிழ் அன்பருக்கு நாம் எடுக்கும் இவ்விழாவில் நந்தமிழ்]
தனித்தமிழ்த் தந்தை துறவி,
மறைமலை படிமை கண்ட,
திருநாகை நீங்கி ஏகும்,
தேன்றமிழ் நண்பர் சந்தம்,
இனியநல் விழாவின் போழ்து,
இற்றைநாள் தமிழின் நிலையை,
ஈரிரு கூற்றாய்ச் சொல்வேன்,
இயல்பலேல் பொறுப்பீர் நண்பீர் !
****************************************
கன்னித் தமிழகத்தின் கான்முளையாய்த் தோன்றியநாம்
கனியிருக்கக் காய்தேடிக் கால்கடுக்க ஓடுகிறோம் !
அன்னை மொழிவிடுத்து அயல்மொழியை நாடுகிறோம் !
அறிவிழந்து நம்விழியை அம்புகளால் பெயர்க்கின்றோம் !
ஆங்கிலம் ஓரரத்தி ! அருந்தமிழ்மற் றோரரத்தி !
ஆங்கிலம் ஓரரத்தி ! அருந்தமிழ்மற் றோரரத்தி !
ஆர்வமுடன் நீசுவைக்க அணுகுவது எவ்வரத்தி ?
தேங்காமல் ஒன்றினைநீ தெரிவுசெய்க என்றுரைத்தால்,
திண்மையுடன் ஆங்கிலத்தைத் தேடுபவன் தமிழ்மகனா ?
குளம்பி எனச்சொன்னாள் குதர்க்கமொழி பேசுகிறோம் !
COFFEE எனப்புகன்று குதுகுதுப்பு எய்துகிறோம் !
அலம்புத் தட்டமென அழைப்பதனால் புரியாதா ?
ஆங்கிலத்தில் WASH
BASIN எனவுரைத்தல் நலந்தானா ?
தங்கநகை செய்துவந்து தமிழுக்கு நானளித்தால்.
மங்கனகை என்றுரைக்கும் மாண்புடையோர் ஞாலமிதில்
சிங்கநடை போடுகின்ற செந்தமிழா சிலிர்த்துஎழு,
வங்கமடை திறந்தாற்போல் வாரிவிடு பைந்தமிழை !
ஈன்றெடுத்த அன்னைக்கும் ஏற்புடைய நல்லறிவை,
ஊன்றிவிட்ட தமிழுக்கும் உரமளிக்கும் நாட்டிற்கும்,
நன்றியிலா மாந்தரினை நண்ணாதே ! நகர்ந்துவிடு !
என்றுரைத்துத் தெம்பூட்டும் இனியநண்பர் குழுவினிலே,
இவர்ஒருவர் என்பதனால் இறும்பூது எய்துகிறேன் !
செல்கின்ற இடமதிலும் சிறப்புடனேப் பணியாற்றி,
சீர்மையுறு நண்பர்களை உளக்குடிலில் குடியேற்றி,
வல்லமையும் நல்வளமும் வாய்ப்புகளும் பெருகிவர,
வல்லாங்கு வாழ்துமென வாழ்த்துகிறோம் ! வாழியவே !
**************************************
ஊரெதில் உறைந்தா லும்நீர் ஊறினை
எண்ணல் வேண்டா !
கூறிடல் வேண்டும், வாய்மை கொள்கையும்
வேண்டும், வாழ்வில்
பொங்கிடும் ஆவின் பாலாய்ப் புதுப்புனல்
அருவியின் நீராய்,
தங்கமாய் விளங்கி, வாழ்க்கைத் தடந்தனில்
உயர்ந்து செல்க !
அஞ்சுகம் அன்னைச் செல்வம் ஆரூர்தம்
கருணாநிதி போல்
பைந்தமிழ்ச் சிங்கம் புதுவைப் பாவேந்தர்
நாவலர் போல,
காஞ்சியின் நிழலில் தோன்றிக் காசினி
வியக்க வாழ்ந்த,
பூந்தமிழ்ப் பயிரின் நாற்று, புரவலர் அண்ணா போல,
வெண்தாடி வேந்தர் போல, விருதையின்
புதல்வர் போல,
மன்பதை போற்றும் துறவி மறைமலை,
திரு.வி.க போல,
சந்தமாய் மணந்து வாழ்வில் சிறப்புடன்
வாழ்க ! வாழ்க !
வாழ்க ! வாழ்க !
திங்களைப் புரைய காய்ந்து, தேன்றமிழ் நிகர்ப்ப வாழ்க !!
*********************************
பட்டறிவிற் சிறியவிந்தப் பையலவன் சொல்லுரையில்
கொட்டிய ளப்பதற்குக் கூலமில்லை ! சாலுமில்லை !
பொட்டிட்டுச் சிலகோலம் போடவந்தேன் ! போட்டுவிட்டேன் !
கட்டுகிறேன் கடைதன்னைக் கவின்மலரே ! என்நன்றி !
[ இதே தேனீர் விருந்தில் பேட்டைக்கு இடமாற்றலாகிச் செல்லும் மின் பணி மேற்பார்வையாளர் செல்வ இசக்கியை பாராட்டி நான் ஆற்றிய உரை !
பொன்விலங்கு பூணுதற்குப் போகவுள்ள பூமானே !
பூவிலங்கு அணிவித்துப் போய்வரவே வாழ்த்துகிறோம்,
நல்விலங்கு வாழ்வினிலே நங்கையும்நற் சேய்களுமே !
நலம்பலவும் நீர்பெற்று நானிலத்தில் வாழியவே !
ஒருநூற்று இருபதுநாள் உம்முடனே என்பழக்கம்,
உறவினிலே குறைவின்றி உரிமையுடன் பழகிவந்தீர் !
குறுநாற்றுப் போல்நமது கொண்டலன்பு வளரட்டும் !
குவலயத்தில் இனிமையெலாம் கொண்டிலங்கி வாழியவே !
உடலிங்கு இருந்தாலும் உள்ளமது ஈங்கில்லை !
உம்மனையாள் குடில்நாடி உறவாடச் சென்றதுவோ ?
மடமஞ்ஞை நினைவாலே மயக்கந்தான் வருகிறதோ ?
மறைத்துநீர் FLU என்றால் மனம்நம்ப மறுக்கிறதே !
திருமகளின் பெயர்தாங்கும் நின்மனையாள் உண்மையிலே,
திருமகள்தான் இலையென்றால் தென்பகுதி கிடைத்திடுமா ?
விரும்பியவூர் மதுரைதான் ! விரைகுவதோ பேட்டைக்கு !
வெற்றி உமக்கில்லை வென்றுவிட்டார் நும்மனைவி !
போகும் இடந்தனிலே பொலிவுடனே வாழ்ந்திடுக !
பொங்கிவரும் பரவையெனச் செல்வமெலாம் பெற்றிடுக !
நாகிளமைக் கன்னிவரும் நன்னேரம் வாழ்வினிலே,
நலம்பலவும் பெற்றிலங்கி நற்றமிழாய் வாழியவே !
[ இதே தேனீர் விருந்தில் திருச்சிக்கு இடமாற்றலாகிச் செல்லும்
பணிமனை உதவியாளர் குரேஷியைப் பாராட்டி
நான் ஆற்றிய உரை ! ]
எண்ணக் கடலில் விளையாடி
இளைப்பும் களைப்பும் மேலுற்று
வண்ணச் சிப்பி உள்ளுறங்கும்
வளமுடை முத்தம் எடுத்தீரோ ?
திருச்சி என்னும் அம்முத்தைத்
தேர்ந்து எடுத்தக் காரணத்தை,
உரித்துப் பார்க்க வரவில்லை !
உள்ளம் பொலிவுற வாழியவே !
செல்லும் இடத்தில் நும்பணிகள்
சிறப்பாய் ஆற்றி நற்பெயரை
அள்ளி எடுக்க முனைவீரே !
அமைதி வாழ்வைப் பெறுவீரே !
எல்லா வளமும் நீர்பெற்று
இனிய வாழ்வைத் தொடங்கிவிட
அல்லா உமக்கு அருள்செய்தால்
அதுவே போதும் மகிழ்வோமே !
முல்லா கதைகள் படிக்காமல்,
முயன்று வாழ்வில் முன்னேற,
அல்லும் பகலும் உழைப்பீரே !
அழகாய் வாழி
! வாழியவே !!
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
{ -08-1975}