குன்றின் மேல் இட்ட விளக்காகத் திகழுங்கள் !
முகநூலில் நண்பர்கள் எழுதும்
கட்டுரைகள் அல்லது இடுகைகளுக்கு “விழைவு’ (LIKE) தருவதைத் தவிர்த்து, கருத்துரை (COMMENTS) எழுதுதல், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்பதை நேற்று பார்த்தோம்.
மேலும் சில கருத்துகளை இன்று பார்ப்போம் !
சில இடுகைகள், நம் கருத்துடன் ஒத்துப் போவதாக இருக்கும். வேறு சில நம்
கருத்துக்கு முரண்பட்டதாக இருக்கும். இன்னும் சில நல்ல பயனுள்ள
கருத்துகளைச் சொல்வதாக இருக்கும். எல்லா இடுகைகளுக்கும் நேர்மறைக்
கருத்துரை (POSITIVE COMMENTS) தான் எழுத வேண்டுமா அல்லது எதிர்மறைக்
கருத்துரையும் (NEGATIVE COMMENTS) எழுதலாமா என்று சிலருக்கு
ஐயம் தோன்றும் !
எதிர்மறைக் கருத்துகளை
உள்ளடக்கியதாக ஒரு நண்பரின் இடுகை இருந்தால், அதற்குக் கூட
நாம் கருத்துரை (COMMENTS) எழுத வேண்டும். எப்படி ? முதலில்
இடுகையாளரின் எழுத்துத் திறன் பற்றிப் பாராட்டலாம். எழுதவேண்டும்
என்று ஊக்கத்துடன் அவர் முன்வந்திருப்பதைப் பாராட்டி ஓரிரு வரிகள் எழுதலாம்.
இறுதியில், தங்கள் கருத்து எனக்கு உடன்பாடானதாக
இல்லை நண்பரே, தவறாக
எண்ண வேண்டாம், என்று நிறைவு செய்யலாம் !
நேர்மறையாக சில கருத்துகளை
சொல்லி விட்டு, இறுதியில் மென்மையான முறையில் எதிர்மறைக் கருத்துகளைத்
தெரிவிக்க வேண்டும். எழுதுபவர் மனமும் நோகக் கூடாது; நம் கருத்தையும் தெரிவித்திட வேண்டும். இதுவே சிறந்த
நடைமுறை ! எந்தவொரு நேர்விலும் கட்டுரையாளர் அல்லது இடுகையாளர்
மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர ஊக்கமிழந்து எழுதுவதைக்
கைவிடச் செய்வதாக இருத்தலாகாது !
இடுகைகளுக்கு மட்டுமே “விழைவு” (LIKE) தருவதைத் தவிர்க்க வேண்டும்; சில பின்னீடுகள் அருமையாக வடிக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு,
“விழைவு” தருவது ஞாயமே ! இத்தகைய நேர்வுகளில் “விழைவும்” தரலாம்; கருத்துரையும் கட்டாயம் எழுதலாம் !
அருமையான கருத்துகளை உள்ளடக்கிச்
சில கட்டுரைகள் வெளியாகலாம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும்
கட்டுரைகள் வெளியாகலாம்; தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் அல்லது
தமிழுணர்வை ஒளிபெறச் செய்யும் வகையில் சில கட்டுரைகள் வெளியாகலாம் !
இத்தகைய நேர்வுகளில், நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். கட்டுரையை நாம் மட்டும்
படித்துச் சுவைத்தால் போதுமா அல்லது நம் நண்பர்களும் சுவைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்
தரலாமா என்பதை முடிவு செய்து, நண்பர்களுக்கு அல்லது வேறு முகநூற்
குழுக்களுக்கு அவற்றைப் பகிர்ந்திடல் (SHARE) அதிகப் பலன்களை
அளிக்கும். நல்ல கருத்துகளை நாடு முழுதும் பரப்பும் வகையில்
”பகிர்வு” (SHARE) என்னும் வசதியை ஒவ்வொரு நண்பரும்
பயன்படுத்துங்கள் ! இயன்றவரை, ஐந்துக்குக்
குறையாமல் ”பகிர்வு” இருத்தல் நலம் பயக்கும்.
நல்ல கருத்துகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் தூதுவர்களாக நாம்
திகழ்ந்திட “பகிர்வு”
வசதியைப் பயன்படுத்துங்கள் !
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்றனர் நம் முன்னோர். நிரம்ப
வரைந்து பழகினால், சித்திரக் கலை நம் கை விரல்களில் நடனமாடும்;
பேசப் பேசத்தான், சரளமாகப் பேசுகின்ற பேச்சுக்
கலை நம் நாவினைத் தழுவும். அதுபோன்று, எழுத
எழுதத் தான் எழுத்துக் கலையும் நம் வசமாகும் !
நிரம்ப எழுதிப் பழக இரண்டு
வாய்ப்புகளைத் தமிழ்ப் பணிமன்றம் உங்களுக்குத் தந்திருக்கிறது. அவை:- (01) அன்றாடம் ஐந்து வரி அளவில், அல்லது இயன்றால், அதற்கும் அதிகமாக, ஒரு இடுகையைப் பிறமொழிக் கலப்பின்றி உருவாக்கிப் பதிவேற்றம் செய்யலாம்.
(02) வேறு இடுகையாளரின் பதிவுக்கு, இயன்றவரை நெடிய
அளவில், நல்ல தமிழில் பின்னீடு செய்யலாம் !
இவ்விரண்டு நேர்வுகளும்
உங்களது எழுத்தாற்றலை மேம்படுத்தும். நான் என் எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொள்வதால்
பயன் என்ன என்று சிலருக்குத் தோன்றலாம். தமிழ் நமது தாய்மொழி.
தாய்மொழியில் சரளமாகப் பேசுவதும், எழுதுவதும் நமது
தனித் தன்மையை (INDIVIDUALITY) உயர்த்தும். பத்தோடு பதினொன்றாக நாம் இருப்பது நமக்குப் புகழைத் தராது !
புகழ்தான் மக்கள் சமுதாயத்தில்
நம்மை அடையாளம் காட்டும். எடுத்துக் காட்டாக உங்கள் பெயரை யாராவது சொன்னால், யார்
அவர் என்று யாரும் கேட்கக் கூடாது. ”ஓ ! அவரா ? அவரைத் தெரியுமே ! தமிழ்ப்
பணி மன்றத்தில் முத்து முத்தாகக் கருத்தாழம் மிக்க கட்டுரைகள் எழுதுவாரே, அவர் தானே !” என்று சொல்லக் கூடிய நிலைக்கு நீங்கள் உயர
வேண்டும் !
“என்னால் முடியுமா
?” என்று, உங்களுக்கு ஐயமோ தயக்கமோ வரக் கூடாது
! “என்னாலும் முடியும்” என்ற துணிச்சல் உங்களுக்கு
வர வேண்டும். துணிந்து, எழுதத் தொடங்கிவிட்டால்,
வெற்றி உங்களுக்குத் தான் ! “எழுத நேரமில்லையே”
என்று சொல்லக் கூடாது. அன்றாடம், நமக்குக் கிடைக்கும் 24 மணி நேரத்தில், ஒவ்வொருவரும் சில மணி நேரங்களையாவது வீணாக்குகிறோம் என்பதை வெட்கமின்றி
ஒப்புக் கொள்ள வேண்டும் !
உங்கள் திறமை குடதிற்குள்
இட்ட விளக்காகக் குன்றிப் போய்விடக் கூடாது. குன்றின் மேல்
இட்ட விளக்காக எல்லோருக்கும் ”பளிச்” என்று
தெரியும் வகையில் இருக்க வேண்டும் !
உங்கள் நல்லநேரம் இப்பொழுது - இப்பொழுதே தொடங்குகிறது ! உங்களுக்குக் கைகொடுக்கத் தமிழ்ப்
பணி மன்றம் காத்திருக்கிறது ! துணிந்து முயலுங்கள் ! வெற்றி உங்களுக்கே !!
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,19]
{4-8-2019}
---------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------