name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (16) குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் !

பிறந்த  நாண்மீனுக்கு  (STAR)  ஏற்ப, பெயரைத் தேடாதீர்கள் !   ஏன் ?


குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நம் முன்னோர்கள் சில நியதிகளைக் கடைப் பிடித்தனர். தாத்தா, பாட்டி பெயரையோ, கடவுள் பெயரையோ, தமக்குப் பிடித்தவர்கள் பெயரையோ வைப்பது வழக்கத்தில் இருந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்பு தமிழியக்கம் மறுமலர்ச்சி அடைந்த போது, நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டப் பெற்றன !

தொலைக்காட்சி, பருவ இதழ்கள், சமூக வலைத் தளங்கள் ஆகியவை ஆளுமை பெற்றுள்ள தற்காலத்தில் பிறந்த நட்சத்திர அடிப்படையில் பெயர்களைத் தெரிவு செய்து சூட்டும் {தவறான} முறை கையாளப்படுகிறது. இந்த வழக்கம் சரிதானா ? ஆய்வு செய்வோம் ! ஆய்வுக் களத்தினுள் புகுமுன், சற்று விலகி, தொடர்புடைய  வேறொரு  கருத்தினை பார்ப்போம். பின்பு நட்சத்திர அடிப்படையில் பெயர் வைக்கும் முறையைப் பற்றி  ஆய்வு செய்வோம் !

சோதிடவியலின் படி நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27 ஆகும். அசுவதி முதல் ரேவதி வரையிலான இந்த 27 நட்சத்திரங்களின் பெயரும் வடமொழியில் அமைந்தவை. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதம் அல்லது பாகங்களாகப சோதிடவியலில் பிரிக்கப் பட்டுள்ளது !

திருமண வயது எய்திய ஆண்கள், பெண்களுக்குத் திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு, {தவறான முறை என்றாலும்} அவர்களின் பிறந்த நட்சத்திரமே அடிப்படையாகக் கொள்ளப் படுகிறது !

பெண்ணின் பிறந்த நட்சத்திரத்திலிருந்து ஆணின் பிறந்த நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரமாக வருகிறது என்பதை எண்ணி, சோதிடர் பொருத்தம் பார்த்துச் சொல்கிறார். ஏன் இப்படி  நட்சத்திர எண்ணிக்கை அடிப்படையில் பொருத்தம் பார்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை எந்தச் சோதிடராலும் சொல்லவே முடியாது !  [கண்மூடித்தனமாக இது பின்பற்றப்படுகிறது.]

இருவருக்குமே ஜாதகம் இல்லை என்றால், இருவரது பிறந்த நட்சத்திரங்களையும் கண்டுபிடிக்க முடியாது. இப்படிப்பட்ட நேர்வுகளில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? இது போன்ற சந்தர்ப்பங்களில் சோதிடர் பேர் [பெயர்] ராசிக்குப் பொருத்தம் பார்த்துச் சொல்வது வழக்கம். பேர்  ராசி என்றால் என்ன ? பேர் ராசியை வைத்து சோதிடர் எவ்வாறு பொருத்தம் பார்க்கிறார் ? தெரிந்து கொள்வோமே !

பஞ்சாங்கத்தில் நாம நட்சத்திரங்கள் என ஒரு அட்டவணை தரப்பட்டிருக்கும். வாக்கியப் பஞ்சாங்கம் எனப்படும் பாம்புப் பஞ்சாங்கத்தில் பக்கம் 24-ஐப் பாருங்கள். அல்லது திருக்கணிதப் பஞ்சாங்கமான வாசன் பஞ்சாங்கத்தில் பக்கம்  78-ஐப் பாருங்கள். அசுவதி முதல் ரேவதி வரை யிலான 27 நட்சத்திரங்களுக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிரே நான்கு எழுத்துக்கள் தரப்பட்டிருக்கும் !

எடுத்துக் காட்டாக அசுவதிக்கு எதிரே சு” “சே  சோ” “லா ஆகிய நான்கு எழுத்துக்கள் தரப்பட்டிருப்பதைப் பாருங்கள். அசுவதி 1-ஆம் பாதத்திற்குசு வும், 2-ஆம் பாதத்திற்கு சே வும், 3-ஆம் பாதத்திற்குசோவும், 4-ஆம் பாதத்திற்குலாவும் உரியவை.அது  போல் பூராடம் 1-ஆம் பாதத்திற்கு புவும், 2-ஆம் பாதத்திற்குவும், 3-ஆம் பாதத்திற்கு வும், 4-ஆம் பாதத்திற்கு வும் உரியவை. இந்த எழுத்துக்களில் குறில் நெடில் வித்தியாசம் இரண்டு பஞ்சாங்கங்களுக்கு இடையேயும் காணப்படுவதுண்டு !

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதைப் பற்றிச் சொல்ல வந்தவர் அதைப் பற்றிச் சொல்லாமல், திருமணப் பொருத்தம் பற்றிச் சொல்கிறாரே என்று குழப்பமாக இருக்கிறதா ? குழப்பம் அடைய வேண்டாம் ! சற்றுப் பொறுமையாக மேலே படியுங்கள் !

சுந்தரம் என்பவருக்கு ஜாதகம் இல்லை. பிறந்த தேதியும் தெரியாது. அதுபோல் பத்மினி என்பவருக்கும் ஜாதகம் இல்லை. பிறந்த தேதியும் தெரியாது. பத்மினியை  சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்கள். எப்படிப் பொருத்தம் பார்ப்பது ?

சுந்தரத்தின் பெயரில் முதல்எழுத்துசு”. பத்மினியின் பெயரில் முதல் எழுத்து”. பஞ்சாங்கத்தில் உள்ள நாம நட்சத்திரங்கள் அட்டவணைப்படி, “சுமுதல் எழுத்தாக வரும் சுந்தரத்தின் நாம நட்சத்திரம் அசுவதி. “முதல் எழுத்தாக வரும் பத்மினியின் நாம நட்சத்திரம் பூராடம். பூராடம் நட்சத்திரத்துடன் அசுவதி நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதை பஞ்சாங்கத்தில் உள்ள 10 பொருத்தங்கள் என்ற பகுதியைப் பார்த்து சோதிடர் சொல்கிறார். இந்த முறைக்குப் பெயர் தான்பேர் ராசிப் பொருத்தம்பார்த்தல் என்று பெயர் !

நாம நட்சத்திர அட்டவணை என்பது ஜாதகம் இல்லாதவர்களுக்குத் திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக யாரோ சிலரால்  200  ஆண்டு காலத்திற்குள் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.  யாரால் ஏற்படுத்தப் பட்டது என்பது யாருக்குமே தெரியாது !

இதன்படி, இருவரது நாம நட்சத்திரங்களின் அடிப்படையில் எத்தனைப் பொருத்தங்கள் இருக்கின்றன என்பதை சோதிடர் பார்த்துச் சொல்வார்.  ஜாதகம் இருப்பவர்களுக்கு இராசி மற்றும் நவாம்சக் கட்டங்களைப் பார்த்து இருவரையும் திருமணத்தின் மூலம் இணைத்து வைக்கலாமா என்பதை மட்டுமே சோதிடர் கணித்துச் சொல்ல வேண்டும் !

ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது ? நட்சத்திரப் பொருத்தமும் பார்த்து, கட்டங்களையும் பார்த்து திருமணம் முடிவு செய்யப்படுகிறது. இந்த இரட்டை வடிக்கட்டல் மூலம் பல நல்ல திருமண வாய்ப்புகள் தடைபட்டுப்போகின்றன !
                      
 நாம நட்சத்திர அட்டவணையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எதிரில் தரப்பட்டுள்ள  நான்கு எழுத்துக்களும் திருமணத்திற்குப் பேர் ராசிப் பொருத்தம்  பார்ப்பதற்குத் தானே தவிர குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்காக அல்ல. இதை நினைவில் நிறுத்துங்கள் !

ஒரு குழந்தை பூசம் 3-ஆம் பாதத்தில் பிறந்து இருந்தால், நாம நட்சத்திர அட்டவணையைப் பார்த்துஹீ” ‘ஹே’ “ஹோ” “ ஆகியவற்றுள்  3-ஆம் பாதத்திற்குரிய  ஹோஎன்ற எழுத்தில் தொடங்கும் பெயரைத்தான் வைக்க வேண்டும்  தமிழில் ஹோ”.என்ற எழுத்தில் எந்தப் பெயரும் தொடங்குவதில்லை.  ஆனாலும் இணையத்தில் தேடி, ஹோண்டு, ஹோமின், ஹோப்ரா என்று ஏதோவொரு அர்த்தமில்லாத பெயரைக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்கிறார்கள். இதை மூட நம்பிக்கை என்று சொல்வதன்றி வேறு என்ன சொல்ல முடியும் !

வடமொழி ஆதரவாளர்கள் நாம நட்சத்திர அட்டவணையில் உள்ளபடி  தான் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும்  என்று ஆதாரமில்லாத கருத்தைச் சொல்லி, அதற்கான வடமொழிப் பெயர்களையும் அர்த்தமில்லாமல் ஒலிக்கும்  பெயர்களையும் வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். அவர்களைப் பின்பற்றி பலரும் அந்த தவறான செயல்களைத் தொடர்ந்தனர். பருவ இதழ்களும், சோதிடர்களும் இதற்குத் துணை போயினர் !  

நான் சோதிடம் பயின்று பட்டயம் பெற்றிருக்கிறேன். நாம நட்சத்திர அட்டவணையில் உள்ளபடி தான் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று சோதிடத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவே  இல்லை !

எனவே, நண்பர்களே ! உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் நல்ல தமிழ்ப் பெயர்களை  வையுங்கள்.. வலைத் தளங்களைப் பார்த்து, பொருள் புரியாதவெறும் ஒலிக் குறிப்புகளை உடையபெயர்களைச் சூட்டாதீர்கள். தமிழ்ப் பகைவர்களின் பரப்புரைகளுக்குப் பலியாகாதீர்கள். நல்ல தமிழ்ப் பெயர்கள் எனது வலைப்பூ பக்கத்தில் கிடைக்கும்.( வலைப் பூ முகவரி: (thamizppanimanram.blogspot.com)

தமிழ் நாட்டில் வாழும் நாம் நமது குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டாவிட்டால், வேற்று மாநில மக்களா தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவார்கள் ?

தமிழ் நாட்டில், “நரேஷ் குமார்”, “அஸ்வின்”, “ஹர்ஷா”, ”ராம்ஜி” “புவனேஷ்என்று கூசாமல்  பிற மொழிப் பெயர்களை வைக்கிறோமே !” வேற்று மாநில மக்கள் யாராவது மணிவண்ணன்”, “பாண்டியன்”, “கலைச்செல்வன்”, “இளமுருகுதாமரைச்செல்வன்”. என்று தமிழ்ப் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்களா ?

நாம் ஏன் இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறோம் ? தமிழை நாமே புறக்கணித்தால்  மெல்லத் தமிழ் இனிச் சாகும்என்ற கூற்று மெய்யாகி விடாதா ?  சிந்தியுங்கள் !

தமிழா ! நீ சிந்திக்க  மறுத்தால், இனி உன்னைத்  தமிழன் என்று சொல்லாதே ! வீணே, தலை நிமிர்ந்து நில்லாதே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம்,8.]
{22-01-2019)

--------------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------------