name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (25) ஒருத்தி மகனாய் !

தேவகி மகனாகச் சிறையிலே பிறந்தாய் !


ஒருத்தி  மகனாய்ப்  பிறந்து  ஓரிரவில்
.........ஒருத்தி  மகனாய்  ஒளித்து  வளரத்
தரிக்கிலான்  ஆகித்  தான்தீங்கு  நினைந்த
.........கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே ! உன்னை
.........அருத்தித்து  வந்தோம்  பறைதருதி  யாகில்,
திருத்தக்க  செல்வமும்  சேவகமும்  யாம்பாடி,
.........வருத்தமும் தீர்ந்து  மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய் !

---------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
----------------

தேவகி மகனாகச் சிறையிலே பிறந்தாய்; யசோதை மகனாக ஆயர் பாடியில் மறைந்து வளர்ந்தாய்; அது தாளாது, தீங்கு செய்தான் உன் மாமன் கம்சன். அவனுக்கு நெருப்பாக நின்றாய். உனக்கு ஆரத்தி எடுத்து அருச்சித்து வழிபட வந்திருக்கிறோம். எங்கள் நோன்பின் நோக்கம், உன்னைப் பாடிப் பணிவதே ! நீ  எங்களை ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு அருளினால், நாங்கள் செல்வம் பெறுவோம்; சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுவோம்; எங்கள் கவலை எல்லாம் தீரும்; ஏற்றுக் கொள் கண்ணா !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
---------------------------

ஒளித்து வளர = மறைந்து வளர்ந்தாய்; தரிக்கிலான் ஆகி = தாங்கிக் கொள்ள மாட்டாதவனாக ஆகி; தான் தீங்கு நினைந்த கருத்தை = கம்சன் உனக்குத் தீங்கு செய்த செய்கையை; பிழைப்பித்து = குற்றமாகக் கருதி; கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற = கம்சனுக்கு நெருப்பாக நின்ற; நெடுமாலே = மணிவண்ணா; அருத்தித்து = யாசித்து; வந்தோம் = வழிபட  வந்திருக்கிறோம்;  பறை தருதியாகில் = அருள் செய்வாயாகில்; திருத் தக்க செல்வமும் = உன் பேரருளாகிய செல்வமும் (பெறுவோம்); சேவகமும் =  உனக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பையும் (பெறுவோம்); யாம் பாடி வருத்தமும் தீர்ந்து = உன்னைப் பாடி வணங்கி வருத்தம் தீர்ந்து; மகிழ்ந்து ஏல் ஓர் = மகிழ்ச்சி அடைவோம். எம்பாவாய் = பாவையரே வாருங்கள் கண்ணனைப் பாடி வணங்கி மகிழ்வோம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை, 24]
(08-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
     
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------