name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, ஏப்ரல் 30, 2022

வீரராகவர் பாடல் (06) முன்னாள் இருவர்க்கும் யாக்கை !

பின்னாளில் நம் நிலை எப்படியோ ?

----------------------------------------------------------------------------------------------------

அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன் மனைவியுடன் உரையாடுவது போல் காட்சியை அமைத்து எழுதியது இந்தப் பாடல் !

வாழ்க்கையே நிலையில்லாதது. அதிலும் ஒவ்வொரு பருவமும் நிலையின்றி மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மாறிவரும் வாழ்க்கைப் பருவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் பாடல் !

----------------------------------------------------------------------------------------------------

முன்னா ளிருவர்க்கும் யாக்கை யொன்றாக முயங்கினமால்

பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் பேசலுறும்

இந்நாட் கொழுநன் மனைவி யென்றாயின மின்னமுமோர்

சின்னாளி லெப்படியோ வையநீயின்று செப்புகவே.(4)

------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக முயங்கினம் ஆல்

பின்னாள் பிரியன் பிரியை என்று ஆயினம் பேசல் உறும்

இந்நாள் கொழுநன் மனைவி என்று ஆயினம் இன்னமும் ஓர்

சின்னாளில் எப்படியோ ஐய நீ இன்று செப்புகவே !

-----------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

முன்பு களவொழுக்கம் பூண்டிருந்த காலத்தில் (முன்னாளில்) ஒருவருக்குள் ஒருவராக நம் உடம்பைப் புகுத்திக்கொண்டு ஓருடம்பாய்க் கிடந்தோம். பின்னர்  காதலன் என்றும் காதலி என்றும் ஆனோம். இப்போது கணவன் மனைவி என்று வாழ்கிறோம். சில நாள்களுக்குப் பிறகு (நம்மில் ஒருவர் காலமானால்)  எப்படி இருப்போமோ ?

-----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

முன்னாள் = பிறருக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து பழகிய களவொழுக்கக் காலத்தில் ; இருவர்க்கும் யாக்கை ஒன்றாக = ஓருடல் ஈருயிராக ; முயங்கினமால் = இணைந்து கிடந்தோம் ; பின்னாள் = அதற்குப் பிந்திய காலத்தில் ; பிரியன் பிரியை ன்று ஆயினம் = காதலன் காதலி என்று நம்மை ஊருக்கு வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தோம் ; 

பேசலுறும் இந்நாள் = இப்பொழுது ; கொழுநன் மனைவி ன்றாயினம் = திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் ; இன்னமுமோர் சின்னாளில் = இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு ; எப்படியோ = நம்மில் ஒருவர் மறைந்த பிறகு என்னவாகுமோ ? ; ஐய நீ ன்று செப்புகவே = என் மனைவியே நீ செப்புவாயாக !

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-----------------------------------------------------------------------------------------------------