பரதனையும் இராமனையும் பார் !
-----------------------------------------------------------------------------------------------------
சீகை எனப்படும் சீர்காழியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் இராமன்; இவரது முழுப்பெயர்
அபிராமன். இவருடைய தம்பி இவருக்கு எதிராகச் செயல்பட்டதால்
தம்பி மீது போர் தொடுக்க எண்ணிக் கிளர்ந்தெழுந்தார் அபிராமன் !
இதைக் கேள்விப்பட்ட வீரராகவர் அபிராமனிடம் சென்று, வில் வீரர்களான கன்னன் (சூரியனின் மகன்), இராவணன், அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு
வில்லைக் கையில் எடுக்காதே !
பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும், இராமன் பாதுகையை அரியணை ஏற்றி
வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனையும் எண்ணிப்பார். தம்பி மீது போர் தொடுக்கும்
எண்ணத்தைக் கைவிடுவாயாக என்று அபிராமனிடம் எடுத்துச் சொன்னார் !
மனம் தெளிவடைந்த அபிராமன் தம்பி மீது போர் தொடுக்கும் திட்டத்தைக்
கைவிட்டார் ! வீர்ராகவர் தனது கருத்தை ஒரு வெண்பா மூலம் அபிராமனுக்குத் தெரிவித்தார்.
இதோ அந்த வெண்பா !
------------------------------------------------------------------------------------------------------
செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்
பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே – விஞ்சு
விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட
பரதனையும் ராமனையும் பார்.
------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------------
செஞ்சுடரின் மைந்தனையும்
தென் இலங்கை வேந்தனையும்
பஞ்சவரில் பார்த்தனையும்
பாராதே – விஞ்சு
விரதமே பூண்டு இந்த
மேதினியை ஆண்ட
பரதனையும் இராமனையும்
பார் !
-----------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------------------
அபிராமா ! சிறந்த வில் வீரர்களான சூரியதேவனின் மைந்தனாகிய கர்ணனாகவும், இலங்கை மன்னனாகிய இராவணனாகவும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனாகவும் உன்னை எண்ணிக்கொண்டு
உன் தம்பிக்கு எதிராகப் போர் புரிய வில்லினை எடுக்காதே !
நாடாளும் உரிமையைப் பரதனுக்கு விட்டுக் கொடுத்த இராமனையும், அண்ணன் இருக்கையில் தான் அரியணையில்
அமர்வதா என்று கூறி அண்ணனின் மிதியடிகளை
அரசனின் இருக்கையில் வைத்து, அண்ணன் சார்பாக ஆட்சியைக் கவனித்த பரதனையும் எண்ணிப்பார் !
பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் தான் ஒரு அரசனின் மாட்சிமை உலகிற்கு
வெளிப்படும். எனவே உன் தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக !
-----------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------------------
செஞ்சுடர் = சூரியன்; மைந்தன் = மகன்; தென்னிலங்கை = தெற்கில் உள்ள இலங்கை நாடு; வேந்தனையும்= இராவணனையும்; பஞ்சவரில் = பஞ்ச பாண்டவரில் ; பார்த்தனையும் = அருச்சுனனையும் ; பாராதே = உன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதே; விரதமே பூண்டு = மனத்தில் உறுதி ஏற்று ; மேதினி = நாட்டை ;
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]
{30-04-2022}
------------------------------------------------------------------------------------------------------
கன்னன் |