பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக் கடிகை, பெரும்புலவர் விளம்பி நாகனார் என்பவர் படைத்தது. சங்க கால இலக்கியமான இந்நூல் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கிறது ! கடவுள் வாழ்த்து உள்பட இந்நூலில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன ! இதிலிருந்து ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------------------
----------------------
குழித்துழி நிற்பது நீர்;தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; – அழித்துச்
செறிவழி நிற்பது காமம்; தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு.
-----------------------------------------------------------------------------------------------------------
--------------
பள்ளம் எங்கிருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று தேங்கி நிற்பது தான் தண்ணீரின் இயல்பு !
சான்றோர் பழிக்கும் செயல்களைப் புரிகின்ற கீழ்மக்களிடத்தில் தீவினைகள் குடிகொண்டிருப்பதும் இயல்பு
!
தவநெறியில் ஒழுகும் தூய வாழ்வு இல்லாத மக்களிடத்தில் காம உணர்வு மேலோங்கி நிற்பதும் இயல்பு !
அதுபோல், ஒருவனுக்கு இடர் வரும்போது அவனுக்குத் துணையாக அவனது அறிவு நிற்பதும் இயல்பு !
----------------------------------------------------------------------------------------------------------
------------------------------
நீர் குழித்துழி நிற்பது
= தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில்
நிற்கும் இயல்பு உடையது
; பல்லோர் = சான்றோர்
பலரும் ; தன்னைப் பழித்துழி = பழிக்கும் செயல்களைப் புரிகின்ற கீழ்மக்களிடத்தில் ; பாவம் = தீவினை
என்பது ; நிற்பது
= சூழ்ந்து நிற்கும் இயல்புடையது ; அழித்து = தவ
நெறியைக் கெடுத்து ; செறிவுழி
= தீய நெறியில் வயப்பட்டால் ; காமம் = காம உணர்வு ; நிற்பது = மேலோங்கி
நிற்பது இயல்பு ; தனக்கு = அறிஞன்
ஒருவனுக்கு ; ஒன்று
உறுவுழி = ஓர் இடர் உண்டான காலத்தில் ; அறிவு = அவனது
கல்வியறிவு ; நிற்பது
= துணையாய் நிற்கும் இயல்பு உடையது.
------------------------------------------------------------------------------------------------------------
--------------------------
பள்ளம் உள்ள இடத்தில் நீர் நிற்கும்; பலரும் பழிக்கும் தீயோரிடத்தில் பாவம் நிற்கும் ; தவ
ஒழுக்கம் இல்லாதவன் பால்,
காமம் நிற்கும் ; இடர்வந்த
போழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,மடங்கல்(ஆவணி),31]
{17-09-2019}
---------------------------------------------------------------------------------------------------------