பதினெண் கீழ்க் கணக்கு என்னும் இலக்கிய வகைப்பாட்டின் கீழ் வரும் நூல் நான்மணிக்கடிகை . ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளை எடுத்துரைக்கும் அறநெறி இலக்கியம். இதைப் படைத்தவர் விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர். இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல் எண்:(26)
-------------------------
நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட
தேர்நலம் பாகனாற் பாடெய்தும்; ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும்.
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
--------------
முகமலர்ச்சியும், குளிர்ந்த பார்வையும் தான் நண்பர்களிடையே நட்புணர்வைச் செழித்து வளரச் செய்யும் !
பலதரப்பட்ட மக்கள் குழுமியுள்ள அவையில் நாம் வெளிப்படுத்தும்
அன்பு ஒன்றே நமக்கு நன்மதிப்பை ஈட்டித் தரும் !
தேர்ப்படையால் ஒரு மன்னன் பெறுகின்ற
நன்மை, அதை
இயக்கும் தேரோட்டியின் மதிநலத்தைப் பொறுத்து உயர்ந்து விளங்கும் !
அதுபோல்,
ஊர் மக்கள் பெறும் நன்மை அந்த ஊரை ஆள்கின்ற
அரசனின் திட்டங்களால் தான் செழித்துச் சிறக்கும் !
-------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-------------------------------------
நகை நலம்
= முகமலர்ச்சியின் நன்மை ; நட்டார்கண் = நண்பர்களிடத்தில்
; நந்தும் = சிறக்கும் ; சிறந்த
= மேலான ; அவை நலம் = அவையினால்
பெறும் நன்மை ; அன்பின் விளங்கும் = நமது
அன்பினால் சிறக்கும் ; விசை மாண்ட = விரைவு மிகுந்த
; தேர் நலம் = தேர்ப் படையால் கிடைக்கும் நன்மை
; பாகனால் = தேரோட்டியின் மதி நலத்தால் ; பாடு
எய்தும் = சிறப்படையும் ; ஊர் நலம்
= குடி மக்கள் பெறும் நன்மைகள் ; உள்ளானால்
= அவ்வூரை ஆளும் அரசனால் ; உள்ளப்படும் = மதிக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-------------------------------
முகமலர்ச்சியும் குளிர்ந்த பார்வையும் நட்பை வளர்க்கும் ! அவையில் நாம் பெறும் மதிப்பு நமது அன்பினால் உயர்வடையும் ! தேர்ப்படையின் நன்மை பாகனின் மதி நலத்தால் சிறக்கும் ! குடிமக்கள் பெரும் நன்மை மன்னனின் திட்டங்களால் மேம்பாடு அடையும் !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,ஆடவை(ஆனி),26]
{10-07-2021}
------------------------------------------------------------------------------------------------------------