name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், மே 05, 2021

இலக்கணம் (21) பொதுச்சொல், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் !

          பொதுச்சொல், அடுக்குத் தொடர், இரட்டைக்                கிளவி!

                                                      

 (3) பொது.

 

01.  வெளிப்படை (பக் 79) :- ஒரு சொற்றொடரில் வரும் ஒரு சொல் வெளிப்படையாக ஒரு பொருளைக் குறித்தால் அதை வெளிப்படை என்று குறிப்பிடுவர் (பக்.79) (எ-டு) தமிழ்நாட்டிலேயே ஓசூர்தான் மலர் விளைச்சலில் தலை சிறந்து விளங்குகிறது. இத் தொடரில் வரும் ஓசூர் என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறிப்பிடுவதால் இதை வெளிப்படை என்று கூறுவர்.

 

02.  குறிப்பு (பக் 79) :- பூப்பந்து விளையாட்டில் தஞ்சாவூர் முதலிடம் பெற்றது. இதில் வரும் தஞ்சாவூர் என்பது ஆகுபெயராய் தஞ்சாவூர் விளையாட்டு வீர்ர்களைக் குறிக்கிறது. இதில் வரும் தஞ்சாவூர் என்னும் சொல்லுக்கு முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் தஞ்சாவூர் விளையாட்டு வீரர்களைக் குறிப்பதால் இதைக் குறிப்பு என்று சொல்லுவர்.

 

04. ஒன்றொழி பொதுச் சொல் (பக்.79):- ( உயர் திணையில் )ஒரு தொடரில் வரும் ஒரு சொல் முன்னும் பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை (Gender) நீக்கி மற்றொரு பாலை (Gender) உணர்த்தி நிற்கும். இத்தகைய சொல்லுக்கு ஒன்றொழி பொதுச் சொல் என்று பெயர். (எ-டு) (1) வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர், இதில் வரும் ஐவர் என்னும் சொல், அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்களின் குறிப்பால் ஐந்து பெண்கள் என்று உணர்த்துகிறது. (2) போர்க் களத்திற்கு ஐவர் சென்றனர். இதில் வரும் ஐவர் என்னும் சொல், அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்களின் குறிப்பால் ஐந்து ஆண்கள் என்று உணர்த்துகிறது. முன்னதில் வரும் ஐவர் பெண்பாலைக் குறிக்கிறது. பின்னதில் வரும் ஐவர் ஆண்பாலைக் குறிக்கிறது.(பக் 79)

 

05. ஒன்றொழி பொதுச் சொல் (பக் 80) :- (அஃறிணையில்) (1) இம்மாடு வயலில் உழுகிறது (2) இம்மாடு பால் கறக்கிறது. முன்னதில் மாடு என்னும் பொதுச் சொல் உழுகிறது என்னும் வினைக் குறிப்பால் காளை மாட்டையும் பின்னதில் கறக்கிறது என்னும் வினைக் குறிப்பால் பசு மாட்டையும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு ஒரு பொதுச்சொல் முன் பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ, பெண்பாலையோ உணர்த்தி வருவது ஒன்றொழி பொதுச் சொல் ஆகும்.

 

06. உயர்திணை, அஃறினை இரண்டிலும் இத்தகைய ஒன்றொழி பொதுச் சொற்கள் வரும். (பக் 79)

 

07. இனங் குறித்தல் (பக் .80):- ஒரு சொல், தன் பொருளையும் குறித்து, தனக்கு இனமான மற்ற பொருளையும் / பொருள்களையும் குறிப்பிட்டு நின்றால் அதற்கு இனங்குறித்தல் என்று பெயர். (எ-டு) இனியன் வெற்றிலை தின்றான். இத் தொடரானது இனியன் வெற்றிலையை மட்டும் தின்னவில்லை, வெற்றிலையோடு அதன் இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்துத் தின்றான் என்பதைக் குறிக்கிறது. இப்படி ஒரு சொல் அமைவதற்கு இனங்குறித்தல் என்று பெயர்.

 

08. அடுக்குத் தொடர் (பக் 80) :- அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்ய வேண்டியுள்ள இடத்திலும் ஒரு சொல்லானது இரண்டு, மூன்று, நான்கு எனச் சிலமுறை அடுக்கி வரும். இதற்கு அடுக்குத் தொடர் என்று பெயர். (எ-டு):- (01) அன்றே அன்றே (அசை நிலை) (செய்யுளில் மட்டும் வரும்.) (02) போ போ (விரைவு வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (03) எறி எற (சினத்தை வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (04) வருக வருக (மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடங்களில்) (05) தீ தீ தீ (அச்சம் வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (06) நொந்தேன் நொந்தேன் (துன்பம் வெளிப்படுத்தும் இடங்களில் வரும்) (07) கோடி கோடி கோடியே (செய்யுளில் இசை நிறைக்கும் இடங்களில்)

 

09. அடுக்குத் தொடர் (பக் 80) :_ அடுக்குத் தொடரில் இரட்டித்து அல்லது மூன்று, நான்காக வரும் சொற்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்தாலும் அச்சொல் பொருள் கொடுப்பதாக அமையும்.

 

10. இரட்டைக் கிளவி (பக் 81.):- இரட்டித்து நின்று ஒரு பொருளை உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும். பிரித்தால் பொருள் தராது. இத்தகைய சொற்களை இரட்டைக் கிளவி என்று சொல்வர். (கிளவி என்பதற்கு சொல் என்று பொருள்.) (எ-டு)

 

(01) குறிஞ்சி பட படவெனப் பேசினாள்.

(02) அவள் கல கலவெனச் சிரித்தாள்.

(03) தண்ணீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கிறது.

(04) எறும்புகள் சாரை சாரையாய் செல்கின்றன.

(05) கற்கள் சட சடவென உருண்டன.

(06) இராமு குறு குறுவெனப் பார்க்கிறான்.

(07) கலியன் மள மளவென மரத்தில் ஏறினான்.

(08) குழந்தை குடு குடுவென ஓடி வந்தது.

(09) தலைமுடி கரு கருவென வளர்கிறது.

 

11. அடுக்குத் தொடரில் சொற்கள் தனித் தனியே நிற்கும். (பார் பார்)

இரட்டைக் கிளவியில் சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (சலசல)

அடுக்குத் தொடரில் சொற்களைப் பிரித்தாலும் பொருள் தரும். (தீ தீ ) 

இரட்டைக் கிளவியில் சொற்களைப்பிரித்தால் பொருள் தராது (சலசல)

அடுக்குத்தொடரில் சொற்கள் 2, 3அல்லது 4 முறைஅடுக்கி வரும்.(தீ தீ தீ)

இரட்டைக் கிளவியில் சொற்கள் இரட்டித்தே வரும் (படபட) 

அடுக்குத் தொடரில் சொற்கள் விரைவு, அச்சம், வெகுளி (சினம்), மகிழ்ச்சி முதலிய பொருள்களில் வரும்.

இரட்டைக் கிளவி யில் சொற்கள் இசை, குறிப்பு, பண்பு பற்றியதாக வரும்.

 

                 ------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[28-12-2018]

  ----------------------------------------------------------------------------------------------
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
                       வெளியிடப் பெற்ற                       
 கட்டுரை !
            
                -----------------------------------------------------------------------------------------------