name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (01) உயிரீற்றுப் புணரியல் - புணர்ச்சி, அல்வழி, வேற்றுமை, இயல்பு, விகாரம் (நூற்பா.151,152, 153, 154)

 

                         உயிரீற்றுப் புணரியல்

 

                                     புணர்ச்சி

 

நூற்பா:151; (புணர்ச்சி இன்னதென்பது)

 

மெய், உயிர் முதல் ஈறாம் இரு பதங்களும்

தன்னொடும் பிறிதொடும் அல்வழி, வேற்றுமைப்

பொருளில் பொருந்துழி நிலை வரு மொழிகள்

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே ! (நூற்பா.151)

 

மெய்ம்முதல் மெய்யீறு (மரம்), உயிர் முதல் உயிரீறு (அணி), மெய்ம்முதல் உயிரீறு (மணி), உயிர் முதல் மெய்யீறு (அணில்) என அமையும் சொற்கள் பகுபதம் பகாப்பதம் என இருவகைப்படும். இப்பதங்கள் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய்  சேரும்  புணர்ச்சி நால்வகைப்படும். அப்புணர்ச்சி வேற்றுமைவழி, அல்வழி இரண்டிலும் நிகழும். சொற்களின் புணர்ச்சி இயல்பாகவோ, விகாரமாகமோ அமையும். (பக்.115)

 

                         உயிரீற்றுப் புணரியல்

 

நூற்பா.152: (அல்வழியும் வேற்றுமையும்) (பக்.115)

 

வேற்றுமைம்முதல் ஆறாம், அல்வழி

தொழில், பண்பு, உவமை, உம்மை, அன்மொழி

எழுவாய், விளி, ஈரெச்சம், முற்று, இடை, உரி

தழுவு தொடர், அடுக்கு என ஈரேழே !  (நூற்பா.152)

 

’, ’ஆல்’, ’கு’, ’இன்’, ’அது’, ’கண் எனும் ஆறு வேற்றுமை உருபுகளும் மறைந்தோ (வேற்றுமைத் தொகை), வெளிப்பட்டோ (வேற்றுமை விரி)  வந்து இரு சொற்கள் புணருவது வேற்றுமைப் புணர்ச்சி.  (நூற்பா.152)

 

வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த் தொடர், விளித்தொடர், பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, இடைச்சொற்றொடர், உரித்தொடர், அடுக்குத் தொடர் என சொற்கள் புணரும் தொடர்ச்சி மொத்தம் 14 ஆகும். (நூற்பா.152))

 

எடுத்துக்காட்டு:

வேற்றுமைத் தொகை-----உருபு-----வேற்றுமை விரி (பக்.116) (நூற்பா.152))

---------------------------------------------------------------------------

நிலம் கடந்தான்.........................................நிலத்தைக் கடந்தான்

கல்லெறிந்தான்..........................ஆல்.........கல்லாலெறிந்தான்.

கொற்றன் மகன்........................கு..............கொற்றனுக்கு மகன்

மலைவீழருவி...............................இன்.......மலையின் வீழருவி

சாத்தன் கை..................................அது........சாத்தனது கை

குன்றக் கூகை..............................கண்.......குன்றத்தின்கண் கூகை

.

அல்வழி (பக்.116,117) (நூற்பா.152))

 

ஒடிகிளை...........................வினைத்தொகை

கருங்குவளை.................பண்புத்தொகை

மதிமுகம்............................உவமைத்தொகை

இராப்பகல்.......................உம்மைத் தொகை

தேன்மொழி....................அன்மொழித் தொகை

 

இவை ஐந்தும் வினை முதலிய தொகைநிலைத் தொடர்கள்(பக்.117) (நூற்பா.152))

 

வேலன் வந்தான்..........எழுவாய்த்தொடர்

வேலா வா ! ......................விளித்தொடர்

வந்த வேலன்...................பெயரெச்சத் தொடர்

வந்து போனான்...........வினையெச்சத் தொடர்

வந்தான் வேலன்...........தெரிநிலை வினைமுற்றுத் தொடர்

பெரியன் வேலன்........குறிப்பு வினைமுற்றுத் தொடர்

மற்றொன்று....................இடைச் சொற்றொடர்.

நனிபேதை.......................உரிச்சொற்றொடர்

பாம்பு பாம்பு..................அடுக்குத் தொடர்.

 

இவை ஒன்பதும் தொகாநிலைத் தொடர்.(பக்.117) (நூற்பா.152))

 

பொதுப்பெயர் ஒன்றும் சிறப்புப் பெயர் ஒன்றுமாக இருபெயர்கள் இணைந்து  வருபவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்,.  (-டு) பனைமரம்.(ஆகிய என்னும் பண்பு தொக்கி நிற்கிறது) (பக்.117.நன்னூல்.)

 

                         உயிரீற்றுப் புணரியல்

 

நூற்பா.153. (இயல்புப் புணர்ச்சி) (பக்.118)

 

விகாரம் அனைத்தும்  மேவலது இயல்பே  (நூற்பா.153)

 

அடுத்துச் சொல்லப்படும் விகாரங்கள் எதுவும் அடையாமல், இயல்பாகப் புணர்வது இயல்புப் புணர்ச்சி ஆகும். (-டு) பொன்மாலை, ஒளிமணி

 

மலர்க்கணை = மலராகிய கணை = பண்புத்தொகை . விகாரப்புணர்ச்சி.(பக்.118.நன்னூல்) (நூற்பா.153)


மலர்கணை = மலரும் கணையும் = உம்மைத் தொகை . இயல்புப் புணர்ச்சி(.பக்.118.நன்னூல்) (நூற்பா.153)

 

                         உயிரீற்றுப் புணரியல்

 

நூற்பா.154. (விகாரப்புணர்ச்சி) (பக்.118)

 

தோன்றல், திரிதல், கெடுதல், விகாரம்

மூன்று மொழி மூவிடத்தும் ஆகும்.  (நூற்பா.154)

 

விகாரம் மூன்று வகைப்படும். அவை தோன்றல் விகாரம் : பூ + கொடி = பூங்கொடி. வருமொழி முதலில் மெய் தோன்றிற்று. (நூற்பா.154)

 

திரிதல் விகாரம்: பல் + தாழிசை + பஃறாழிசை. வருமொழி முதலிலும் நிலைமொழி ஈற்றிலும் மெய்கள் திரிந்தன. (நூற்பா.154)

 

கெடுதல் விகாரம்: நிலம் + வலயம் + நிலவலயம். நிலைமொழி ஈற்று மெய் கெட்டது. (நூற்பா.154)

 

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------