சினத்துக்கு இடம் தந்துச் செந்நெறியில் தவறாதே !
----------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகளைச் சொல்லி இருப்பதால் நான்மணிக் கடிகை என்று பெயர் பெற்றுள்ள இலக்கிய நூலை விளம்பி நாகனார் என்னும் பெரும் புலவர் படைத்துள்ளார் ! பதினெண் கீழ்க் கணக்கு நூல் வகையுள் இதுவும் ஒன்று ! இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: எண் (10).
------------------------------------------------------------------------------------------------------------
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்(று)
உற்றார்முன் தோன்றா
உறாமுதல் – தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா; எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
--------------
ஒரு பொருளை அல்லது உயிருக்குயிரான உற்றாரை இழந்துவிட்டால், அதற்காகத்
துன்பம் கொள்ளுதல் கற்றுத் தெளிந்தாரிடம் தோன்றுவதில்லை !
ஊக்கமுடன் ஒரு நன்முயற்சியில் ஈடுபட்டு உழைப்பவரிடம், உரிய
பலன் விரைந்து கிட்டவில்லையே என்னும் மனத்துன்பம், தோன்றுவதில்லை !
தெளிந்த முடிவுடன்
தீய செயல்களைச் செய்பவர்களிடம்,
அறம் செய்தலால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிய நல்லறிவும்
நல்லுணர்வும் தோன்றுவதில்லை !
அதுபோல், சினத்திற்கு
ஆட்பட்டு அறிவை இழப்பவர்களிடம் அவர்களுக்குக் கிட்டக் கூடிய அனைத்து நன்மைகளும் கிடைக்காமலேயே
கெட்டு ஒழிந்து போகும்
!
-----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------------------------
கழிவிரக்கம் = இழந்த பொருள்களுக்கு இரங்குதல்; காதலித்து = ஊக்கம் கொண்டு; ஒன்று உற்றார் முன் = ஒரு
நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர் பால் ; உறா முதல் = விரைவில்
பலன் கிட்டவில்லையே
என்னும் மனத் துன்பம்; தெற்றென
= தெளிவாக; அல்ல
புரிந்தார்க்கு = தீயவை செய்தார்க்கு ; அறம்
தோன்றா = நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் = எல்லா
நன்மைகளும்; வெகுண்டார் முன் = சினம்
கொள்வாரிடத்து.
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),20]
{04-03-2021}
-----------------------------------------------------------------------------------------------------------