எளியவர் என்று எந்த மனிதனையும் தாழ்வாக எண்ணலாகாது !
----------------------------------------------------------------------------------------------------------
நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ! கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியம். இதை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். 101 பாடல்களைக் கொண்ட இந் நூலிலிருந்து ஒரு பாடல் !
----------------------------------------------------------------------------------------------------------
பாடல் (03)
-----------------------------------------------------------------------------------------------------------
எள்ளற்க என்றும் எளியரென்று ! என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கை மேற்பட – உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை ! கூறற்க !
கூறல்ல வற்றை விரைந்து !
----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
எவரையும் எந்தச் சிறப்பும் இல்லாத எளிய மனிதர் என்று, தாழ்வாக எண்ணாதே !
மதிப்பில் உயர்ந்த பொருளாயினும் பண்பில்லாத மனிதர்களிடம் வாங்காதே !
தவறு செய்தாலுங்கூட ஏழை மக்களிடம் சினம் (கோபம்) கொள்ளாதே !
உள்ளம் பதை பதைப்பு அடைந்தாலும் கூட தகாத சொற்களைச் சொல்லி விடாதே !
----------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்:
--------------------------------------
எள்ளற்க = இகழ்ந்து பேசாதே; என்பெறினும்= மிகச் சிறந்த ஒன்றைப் பெறுவதானாலும் கூட; கொள்ளற்க = வாங்காதே ; கொள்ளார் கை = கொள்ளத் தகாதவருடைய கைகள் ; மேல ஆ= அவர் கை மேலேயும் உன் கை கீழேயும் ; உள் சுடினும் = ஏழையின் செய்கை உன் மனதை வருத்தினாலும்; சீறற்க = சினந்து பேசாதே ; சிற்றில் பிறந்தாரை = ஏழைகளை; கூறல்லவற்றை = சொல்லத் தகாத சொற்களை; விரைந்து = பதை பதைப்பு அடைந்து; கூறற்க = சொல்லிவிடாதே !
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை;
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),07]
{19-02-2021}
-------------------------------------------------------------------------------------------------------------------