name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, ஜனவரி 24, 2021

நாலடியார் (40) மான அருங்கலம் நீக்கி !

பிச்சை எடுக்கும் ஈன வாழ்வையும் கூட ஏற்பேன் - எப்போது ?

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் திருக்குறளுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றப்படும்  அறநெறி நூல் ! சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்ட 400  வெண்பாப் பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல்  பல அறநெறிக் கருத்துகளை வலியுறுத்துகிறது !  இதிலிருந்து ஒரு பாடல் !

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் எண்: (40)

-----------------------------------------------------------------------------------------------------------

மான  அருங்கலம்  நீக்கி இரவென்னும்

ஈன  இளிவினால்  வாழ்வேன்மன்  -  ஈனத்தால்

ஊட்டியக்  கண்ணும்  உறுதிசேர்ந்  திவ்வுடம்பு

நீட்டித்து  நிற்கு  மெனின் !

-----------------------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------------------------

மான  அருங்கலம்   நீக்கி  இரவு  என்னும்

ஈன  இளிவினால்  வாழ்வேன்  மன்ஈனத்தால்

ஊட்டியக்  கண்ணும்  உறுதி  சேர்ந்து  இவ்வுடம்பு 

நீட்டித்து  நிற்கும் எனின் !

-----------------------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------

இந்த உடம்பானது அழிவே இல்லாமல்  நீடித்து  நிற்குமெனில் , மானமுடைமை என்னும் அரிய அணிகலனை நீக்கிவிட்டு பிச்சை எடுக்கும் ஈன வாழ்க்கையும் கூட வாழ்வேன்  !

[ அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும்  இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே ! பின் எதற்காக ஈனப் பிழைப்புப் பிழைக்க வேண்டும் ? அறம் செய்து நற்பேறு பெறலாமே ! என்பது உள்ளுறைக் கருத்து ]

-----------------------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

ஈனத்தால் = இழிவான செயல்களால்,; ஊட்டியக் கண்ணும் =  (சோறு முதலியவற்றை ஈட்டி ) துய்க்கச் செய்தும்; இவ்வுடம்பு = இந்த உடம்பானது ;  உறுதிசேர்ந்து =  உறுதிப்பட்டு; நீட்டித்து நிற்கும் எனின் = அழியாமல்  நீண்ட காலம் நிலைத்திருக்கும்  என்றால் ;  மான அருங் கலம் நீக்கி =  மானம்  என்னும் மதிப்பு மிக்க அணிகலனை  விலக்கிவிட்டு ;

இரவு என்னும் =  இரப்பது (பிச்சை எடுத்தல்)  என்று சொல்லுகிற; ஈன இளிவினால் =  தாழ்மையான  இழிசெயலைச் செய்தும் கூட  ; வாழ்வேன்மன்  =  உயிர் வாழ்வேன்.

[அப்படி ஈனப் பிழைப்புப் பிழைத்தாலும் இந்த உடம்பு நீடித்து இருப்பதில்லையே ! பின் எதற்காக ஈனப் பிழைப்புப் பிழைக்க வேண்டும் ?  அறச் செயல்களைச் செய்து நற்பேறு பெறலாமே !  என்பது உள்ளுறைக் கருத்து !]

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி:2052, சுறவம் (தை) 11]

(24-01-2021)

------------------------------------------------------------------------------------------------------------