மெய்யது புரவலர் இன்மையிற் பசியே !
சோழவள நாட்டில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன். ஒருநாள் ஆலத்தூர் கிழார் என்னும் பெரும்புலவர் அவனைக் காணச் சென்றார். வந்திருப்பவர் புலவர் என்று தெரிந்தவுடன் வாயிற்காவலன் எவ்விதத் தடையும் சொல்லாது அவரை அரண்மனைக்குள் அனுப்பி வைத்தான் !
மன்னனைக் கண்டார்;
மனதில் பெருமகிழ்வு கொண்டார்.
மன்னன் புலவரை அன்புடன் வரவேற்று அவரது நலன் பற்றிக் கேட்டறிந்தான். தன்னுடன்
சில காலம் தங்கிச் செல்ல வேண்டும் என்று அன்புக்
கட்டளை இட்டான் !
அரண்மனையில் தங்கியிருக்கும் காலை, மன்னனது
படைச் சிறப்பையும், மன்னன்
போருக்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் பாங்கினையும், மன்னனது
வேற்படையின் வலிமையையும் நேரிற் காணும் பேறு பெற்றார்; மன்னனின்
வலிமை கண்டு உளம் உவகை கொண்டார்
!
சிறிது காலம் சென்றபின்,
புலவர் தன் இல்லம் செல்ல விரும்பினார். அவருக்குப்
நிரம்பப் பொன்னும் பொருளும் தேரும் கொடுத்து பிரியா விடை தந்து அனுப்பி வைத்தான் கிள்ளி
வளவன் !
புலவர் ஊர் திரும்பும் வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்படுகிறான். அவனிடம்
கிள்ளிவளவனின் பெருவளத்தை எடுத்துரைத்து, மன்னனிடம் செல்லுமாறு
அவனை ஆற்றுப் படுத்தி அனுப்பி வைக்கிறார். அவரது ஆற்றுப்படுத்தல் ஒரு பாடல் வழியாக வெளிப்படுகிறது. இதோ
அந்தப் பாடல் !
-------------------------------------------------------------------------------------------------------------
கையது கடனிறை யாழே மெய்யது
புரவல ரின்மையிற் பசியே யரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி யுடுத்த வுயவற் பாண !
பூட்கை யில்லோன் யாக்கை போலப்
பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
வையக முழுதுடன்
வளைஇப் பையென
என்னை வினவுதி யாயின் மன்னர்
அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக்
குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களஞ் செய்த கலாஅத்த தானையன்
பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்
பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்
ஒள்ளெரி விரையு முருகெழு பசும்பூட்
கிள்ளி வளவற் படர்குவை யாயின்
நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்
தேர்வீ சிருக்கை யார நோக்கி
நீயவற் கண்ட பின்றைப் பூவின்
ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினு மிலையே !
------------------------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------------------------
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண !
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன்,
ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்;
தகைத் தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே;
கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே
!
-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
--------------
நின் கையில் யாழ்
வைத்திருக்கிறாய்; பசித்த
வயிற்றால் உன் மேனி இளைத்திருக்கிறது; இடையில் நைந்து கிழிந்த
உடையைக் காண்கிறேன் ! துன்பத்தில் துவண்டிருக்கும் பாணனே ! பெருமை ஏதுமற்ற மிகப் பெரும் சுற்றத்தார்களை உடையவனே ! நாடெங்கும் சுற்றிவிட்டு இறுதியில் இங்கு வந்திருக்கிறாய் !
இப்பொழுது என் வளமையைப் பார்த்து, நின் வறுமையைத் தீர்க்க வல்லார் யார் என என்னைக் கேட்பாயாகில், உனக்குச் சொல்வேன்; கேட்பாயாக !
பகைவர்களின் பெரும் படையையும் அழித்தொழிக்க வல்லவனும், உயர்ந்த மாடமாளிகைகள் நிறைந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருப்பவனும், பொன்னாலாகிய பூண் பொருந்திய செங்கோலைக் கையில் பிடித்து நல்லாட்சி புரிபவனுமாகிய சோழன் கிள்ளி வளவனிடம் செல்வாயாக !
அவனது அரண்மனை வாயிற்புறத்தில் , கிள்ளிவளவன் பரிசிலர்க்கு வழங்கிய தேர்களின் அணிவகுப்புக் காட்சியைக் நின் கண்ணாரக் காண்பாய் ! அரண்மனை வாயிலில் மன்னனின் இசைவுக்காக நீ காத்திருக்க வேண்டியதில்லை. நீ நேராகச் சென்று மன்னனைக் கண்டு நின் யாழிசையை வழங்கலாம் !
மன்னனைக் கண்டபின்பு, நீ உன் முடியில் வண்டுகள் மொய்க்கும் தாமரைப் பூவினைச் சூடியிருக்க மாட்டாய்; மன்னன் தந்த ஒளி மிக்க பொற்றாமரை மலரைச் சூடிக் கொண்டிருப்பாய் ! செல்வாயாக ! மன்னனைக் காண்பாயாக !
------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
----------------------------
கையது = நின் கைகளில்; கடன் நிறை யாழ் = இசைக்கருவிக்குரிய இலக்கணப்படிச் செய்யப் பெற்ற யாழ் ; மெய்யது = நின் உடம்பின்கண் ; புரவலர் இன்மையால் பசி = பொருளுதவி செய்து காப்போர் இன்மையால் ஏற்பட்ட வயிற்றுப் பசி ; அரையது = இடுப்பில் ; வேற்றிழை நுழைந்த = கிழிசலை வேற்று நூல்கொண்டு தைத்து ; வேர் நனை சிதாஅர் = வேர்வையால் நனைந்த சீரையை (துணி); ஓம்பி உடுத்த உயவற் பாண = அரையை மறைத்து உடுத்தி இருக்கும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் பாணனே ! ;
பூட்கையில்லா யாக்கை போல
= மடிமைக்கு (சோம்பலுக்கு) இடம்
தந்து மேன்மை இழந்துவிட்ட உடம்பைப் போல ; பெரும் புல்லென்ற இரும்
பேர் ஒக்கலை =
பெருமையற்ற மிகப் பெரிய சுற்றத்தை யுடையாய்; வையக முழுதும் வளைஇ
= நாடெங்கும் சுற்றி வந்து ;
என்னைப் பையென
வினவுதியாயின்
= நின் வறுமையைத்
தீர்ப்பார் யாரென என்னைக் கேட்பாயாகில் (சொல்கிறேன் கேளாய்
!);
மன்னர் அடு களிறு உயவும் = மன்னரது
வேல் பட்டு வீழ்ந்த யானைகள் புண்பட்டு
வருந்தவும் ; கொடி கொள் பாசறை = அரசனது
கொடி ஓங்கி உயர்ந்து பறக்கும் பாசறையில் ;
குருதிப் பரப்பில் கோட்டு மா தொலைச்சி = எதிரிகளின்
யானைகளைக் கொன்று குருதி வழிந்தோடும் ; புலால்களஞ் செய்த
கலாஅத் தானையன் = புலால்
நெடி வீசும் போர்க்களத்தை உண்டாக்கிய பெரும் படையை உடையவன் ;
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் = உயர்ந்த
மாட மாளிகைகள் நிறைந்த உறையூரில் இருப்பவன் ; பொருநர்க்
கோக்கிய வேலன் = பகைவர்களை வெற்றி கொள்ள உயர்த்திய வேல்
பிடித்த கையன் ; ஒரு நிலைப் பகைப்புலம் படர்தலும் உரியன்
= ஒரு நிலையில் பார்த்தால் பகைவர் நாட்டின் மேல் படை எடுத்துச் செல்ல அஞ்சாத
குணம் உடையவன் ;
தகைத்தார் = சுற்றப்பட்ட மாலையையும் ; ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் = ஒளிமிக்க
பசும்பொன்னால் செய்யப் பெற்ற பூணினையும் உடைய செங்கோல் பிடித்த கையன் ஆகிய ;
கிள்ளி வளவற் படர்குவையாயின் = கிள்ளிவளவனிடம்
சென்றாயானால்; நெடுங்
கடை நிற்றலும் இலை = அவனது அரண்மனை வாயிலிலருகில் இசைவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை ; கடும் பகல் = பகற் பொழுதின் வெளிச்சத்தில் ;
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி = அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கியிருக்கும் இருப்பை நின் கண்ணாரப் பார்த்து ; நீ அவற் கண்ட பின்றை = நீ அவனைக் கண்ட பின்பு ; பூவி னாடும் வண்டு இமிராத் தாமரை சூடாயாதல் = வண்டு மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடிக் கொண்டிருப்பாய் !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
& இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.பி:2052, சுறவம் (தை) 09]
(22-01-2021)
------------------------------------------------------------------------------------------------------------