உச்சியில் ஏறி உறைகின்றதே !
நாகம் என்னும் சொல்லை வைத்துக் கொண்டு புலவர்கள் தான் எத்துணைச் சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் – பாடல்களில் ! அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறந்திருக்கிறது ! பாருங்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
ஒருநாகம் விட்டுயர் நாகத்தின் மீதினில் ஒண்டொடியாள்
ஒருநாகம் வைத்தே யொருசுனையாட ஒருபுதுமை
ஒருநாகங் காட்ட வொருநாகம் பார்த்துடன் ஓடையிலே
ஒருநாக நாகத்தின் உச்சியிலேறி உறைகின்றதே !
------------------------------------------------------------------------------------------------------------
படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் ! படியுங்கள் !
------------------------------------------------------------------------------------------------------------
ஒருநாகம் விட்டு, உயர் நாகத்தின் மீதினில் ஒண்டொடியாள்
ஒருநாகம் வைத்தே ஒரு சுனை ஆட ஒரு புதுமை
ஒருநாகம் காட்ட ஒருநாகம் பார்த்து,
உடன் ஓடையிலே
ஒருநாக நாகத்தின் உச்சியில் ஏறி உறைகின்றதே
!
------------------------------------------------------------------------------------------------------------
சொற்பொருளுரை:
-------------------------------
ஒரு நாகம் விட்டு = தனது நாணத்தை விட்டு ; உயர் நாகத்தின் மீதினில் = உயர்ந்த புன்னை மரத்தின் மீது ஏறி ; ஒண்டொடியாள் = ஒளிமிகுந்த வளையல்களை அணிந்த பெண் ; ஒரு நாகம் வைத்தே = தன் சேலையை (புன்னை மரக் கிளையில் ) வைத்துவிட்டு ; ஒரு சுனை ஆட = அங்கிருந்த ஒரு நீர்ச் சுனையில் இறங்கி நீராடினாள் ;
ஒரு புதுமை ஒரு நாகம் காட்ட = அப்பொழுது ஒரு நல்லபாம்பு புன்னை மரத்தடியில் படமெடுத்து ஆட ;
ஒரு நாகம் பார்த்து உடன் ஓடையிலே = பாம்பு ஆடுவதைக் கண்டு பயந்த குரங்கு ஒன்று மரத்திலிருந்த சேலையை எடுத்துக் கொண்டு கீழே குதித்து ஓடியது ;
ஒரு நாகம் = அப்படி ஓடிய குரங்கு ; நாகத்தின் உச்சியில் = அருகிலிருந்த (மலைக்) குன்றின் உச்சிக்கு ; ஏறி உறைகின்றதே = ஏறி அங்கே அமர்ந்து கொண்டது.
------------------------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
--------------------
அழகிய வளையல்கள் அணிந்த பெண்ணொருத்தி நீராடுவதற்காகச் சுனைக்குச் செல்கிறாள். அங்கிருந்த புன்னை மரத்தில் அவள் ஏறி தன் சேலையை வைத்துவிட்டு இறங்கி வந்து சுனையில் நீராடுகிறாள். எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று, புன்னை மரத்தின் அடியில் படமெடுத்து ஆட, மரத்தின் மீதிருந்து அதைக் கண்ட குரங்கு ஒன்று அச்சமுற்று, அவளது சேலையை எடுத்துக் கொண்டு, கீழே குதித்து ஓடி அங்கிருந்த குன்றின் உச்சிக்குச் சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது !
நிறைந்த கற்பனை வளத்துடன் ’நாகம்’ என்னும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு அழகிய பாடலை நமக்கு அளித்துள்ள புலவரின் பெயர் நமக்குத் தெரியவில்லை. வரலாற்றில் அவர் பெயர் பதிவாகவில்லை. அவர் பெயர் பதிவாகாவிட்டாலும் அவர் பாடல் நம் நெஞ்சில் பதிவாகி, நினைக்குந்தோறும் இன்பம் தருகிறது !
-------------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஐப்பசி),05]
{21-10-2020}
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------