name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், நவம்பர் 26, 2020

தனிப்பாடல் (635) குதிரைக் கனியை நாகம் !

குதிரைக் கனியை நாகம் பறித்துக் கொண்டு ஓடுகிறது !  இது என்ன புதிர் ?

ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும் உண்டு;  பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லும் உண்டு ! பெயர் தெரியாத ஒரு புலவர் இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார் ஒரு பாடல் மூலம் ! இதோ அந்தப் பாடல் :-

-------------------------------------------------------------------------------------------------------------

            குதிரைக்  கனியை  நாகம்  பறித்துக்கொண் டோடையிலே

            குதிரை வரக்கண்டு நாகத்தில்  ஏறிடக்   கூடவந்த

            குதிரை  யமட்டிட நாகம்  பயந்துபின் கூப்பிட்டதால்

            குதிரை பறந்து தடாகத்தில் ஆனையைக்  குத்தியதே !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------

குதிரை = மாமரம், கொக்கு

நாகம் = குரங்கு, புன்னைமரம், செந்நாய்

ஆனை = களிறு

-------------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது பாடலின் கருத்தைப் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு குரங்கு மாம்பழம் ஒன்றைப் பறித்துக் கொண்டு ஓடுகையில், அதைப் பார்த்துவிட்டுச் செந்நாய் ஒன்று அதைப் பறிக்க வர, குரங்கு பயந்து போய் அருகில் இருந்த புன்னை மரத்தில் ஏறிக் கொண்டது. ஏமாற்றமடைந்த செந்நாய், குரங்கைப் பார்த்து அச்சமூட்டும் வகையில் குரலெழுப்பியது.  செந்நாயின் குரலால் மீண்டும் பயந்து போன குரங்கு , மரக்கிளைகளில் அங்குமிங்கும் தாவித் தாவிக்  கூக்குரல் இட்டது.  குரங்கின் செயலால் வெருண்ட  கொக்கு ஒன்று புன்னை மரத்திலிருந்து விரைவாகப் பறந்து சென்றது. அவ்வாறு செல்கையில் அருகில் இருந்த குளத்தில் களிறு (களிற்று மீன்) ஒன்று நீந்துவதைப் பார்த்து, (மனதில் ஆசை கொண்டு ) ஈட்டி  போல் பாய்ந்து சென்று அம்மீனைக் கொத்திக் கொண்டு பறந்தது !

------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்  விரிவாக :-

-------------------------------------------

குதிரைக் கனியை = மாங்கனியை; நாகம் பறித்துக் கொண்டு ஓடையிலே =  குரங்கு ஒன்று மாமரத்தில் ஏறிப் பறித்துக் கொண்டு ஓடுகையில்;  குதிரை வரக் கண்டு = செந்நாய் ஒன்று அதைப் பிடுங்க வருவதைக் கண்டு ; நாகத்தில் ஏறிட = (குரங்கு) பயந்து போய் அருகில் இருந்த புன்னை மரத்தில் ஏறிக்கொள்ள;  கூடவந்த குதிரை அமட்டிட = ஏமாற்றமடைந்த செந்நாய்  குரங்கைப் பார்த்து அச்சமூட்டும் வகையில் குரல் எழுப்ப; நாகம் பயந்து பின் கூப்பிட்டதால் = குரங்கு பயந்து போய் கூக்குரலிட; குதிரை பறந்து = புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு, குரங்கின் கூக்குரலால் வெருண்டு பறந்திட; தடாகத்தில் = வழியில் இருந்த தடாகத்தில் ; ஆனையைக் குத்தியதே = களிற்று மீன் ஒன்று  நீரின் மேல் மட்டத்தில் நீந்துவதைப் பார்த்து, விரைந்து சென்று அதைக் கொத்திக் கொண்டு பறந்தது !

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களின் சொல் விளையாட்டைப் பார்த்தீர்களா ?

எப்படிப்பட்ட புலவர்கள் எல்லாம் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் ! இக்காலத்தில் எங்கெங்கும்  வறட்சி தான் -  தமிழ்ப் புலவர்களின் நா உள்பட !  இக்காலப் புலவர்களிடம், தமிழும் இல்லை; தமிழ் உணர்வும் இல்லை !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

தி.பி: 2051, நளி (கார்த்திகை),01]

{16-11-2020}

-----------------------------------------------------------------------------------------------------------

 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------