name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, ஜூலை 31, 2020

சிந்தனை செய் மனமே (76) இயற்கை வளங்களை அழிக்காதீர் - முல்லை நிலம் !

விலங்குகளின் வாழ்விடமாகப் படைக்கப் பெற்றது முல்லை நிலம் !

தமிழனின் வகைப்படுத்தலின் படி காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்படும். உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களும், அவற்றைப் பற்றிப் படர்கின்ற பசுங் கொடிகளும், பல்லாயிரக் கணக்கில் மண்டிக் கிடக்கும் புதர்களும், குறுஞ்செடிகளும், காட்டுக்குள்ளேயே அமைந்திருக்கின்ற சின்னஞ்சிறு புல்வெளிகளும் காடு என்னும் இலக்கணத்திற்கு அணி சேர்ப்பவை !

மனிதனின் வாழ்விடம் மருதமும், நெய்தலும் என்றால் விலங்குகளின் வாழ்விடம் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்  ஆகும். விலங்குகளுக்குத் தேவையான உணவும், பாதுகாப்பும் இங்குதான் அவைகளுக்குக் கிடைக்கின்றன. கொன்றுண்ணிகளாக (CORNIVORUS) இருந்தாலும் சரி, பயிருண்ணிகளாக (HERBIVORUS) இருந்தாலும் சரி அவை வாழ்வதற்கேற்ற சூழல் காடுகளிலும் மலைகளிலும் தான் அமைந்திருக்கின்றன !

அரிமா (சிங்கம்), வரிமா (புலி), உளிமா (கரடி), கயமா (யானை), கடமா (காட்டுப்பசு), கான்மா (காட்டுப்பன்றி), முண்மா (முள்ளம்பன்றி), மைம்மா (காட்டெருமை), நரிமா (காட்டுநரி), பரிமா (காட்டுக் குதிரை) போன்ற விலங்குகளும் பறவைகளும், புழு பூச்சிகளும் வாழ்வதற்காகப் படைக்கப் பட்டவை காடுகள் ! இயற்கையின் படைப்பின் படி மனிதன் தன்னை மருதம், நெய்தல் நிலங்களுடன் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் ! முல்லை நிலத்திற்குள் நுழைய மனிதனுக்கு உரிமை இல்லை !

மழைப் பொழிவுக்கு மலைகளும் மலை சார்ந்த இடங்களும் எத்துணை அளவுக்கு உதவுகின்றனவோ, அத்துணை அளவுக்குக் காடுகளும் காடு சார்ந்த இடங்களும் உதவுகின்றன. காடுகளின் குளிர்ந்த சூழல், சூல்கொண்ட மேகங்களைக் குளிர்வித்து மழைப் பொழிவைத் தூண்டி மழையை வருவிக்கிறது ! எந்த நாட்டில் கானகப் பரப்பு மிகுதியோ அங்கு மழைப் பொழிவும் மிகுதி என்பது மறுக்க முடியாத உண்மை !

பகலில் சூரியக் கதிர்களின் உதவி கொண்டு கானக நிலத்திணைகள் (தாவரங்கள்) தமது இலைகளின் மூலம் தமக்கு வேண்டிய உணவை உருவாக்குகையில், காற்று மண்டலத்தில் உள்ள கரிம வளியை (CARBON DIOXIDE) உள்ளிழுத்துக் கொண்டு உயிர் வளியை (OXYGEN) வெளியேற்றுகின்றன. மனிதனும், விலங்குகளும், புழு பூச்சிகளும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர்வளியை (OXYGEN) முல்லை நிலம் தான் உருவாக்கித் தருகிறது !

ஆனால் தன்முனைப்பின் உச்சியில் நின்று கொண்டு தறிகெட்டு அலையும் மனிதனுக்கு இந்த உண்மைகள் தெரிந்தும், பேராசை மற்றும் தன்னல உணர்வின் முனைப்புக் காரணமாகக் காடுகளையும் காடு சார்ந்த பகுதிகளையும் கட்டுப்பாடின்றி அழித்துக் கொண்டிருக்கிறான் !

குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளக் காடும் சார்ந்த நிலங்களும் அழிக்கப்படுகின்றன. அறைகலன்கள் (FURNITURES)  உருவாக்கம்,  கட்டுமானத் தேவைகள் (CONSTRUCTION NEEDS), சாலைகள் அமைத்தல், மின் தடங்கள் அமைத்தல், சுற்றுலாத் தலங்கள் உருவாக்கம், அணைகள் கட்டுதல், வேளாண் பண்ணைகள் அமைத்தல் மற்றும் இன்ன பிற பயன்பாடுகளுக்காகக்  கானகங்கள் (FORESTS) பெருவாரியாக அழிக்கப்படுகின்றன !

மனிதனின் தன்முனைப்பின் வெளிப்பாடே கானக அழிப்பு. இருக்கின்ற கானகப் பரப்பு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக மழைப் பொழிவும் குறைகிறது. மழைப் பொழிவுக் குறைகையில் கானக நீர்நிலைகள் நிரம்புவதில்லை. சலசலக்கும் நீரோடைகள் விரைந்து வற்றிப் போகின்றன !

நீர்ப் பற்றாக் குறையால், காடுகளில் நிலத்திணை (தாவரங்கள்) வளர்ச்சி குன்றிப் போகிறது. கோடைக் காலங்களில் கானகத்தில் வளர்ந்துள்ள புல் பூண்டுகளும் புதர்களும் கருகிப் போகின்றன. மலைவாழ் நிலத் திணைகளும் இதே இடையூறுகளைச் சந்திக்கின்றன !

பேராசை பிடித்த மாந்தன் காடுகளுக்குத் தீ வைத்து  மரக்கரியைத் திரட்டி சந்தைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு வருகிறான்.  இயற்கைத் தீ, செயற்கைத் தீ இரண்டினாலும் காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. கோடைக்காலத்தில் புதர்களின் அழிவினாலும், நீர்நிலைகள் வற்றிப் போவதாலும், யானை, சிறுத்தை காட்டெருமை, மான்  போன்ற  விலங்குகள் உணவையும் குடிநீரையும் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன !

ஊருக்குள் இத்தகைய வன விலங்குகளின் வருகையால்,  வேளாண் பெருமக்கள் பயிரிட்டுள்ள வாழை, தென்னை, கரும்பு, சோளம் போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவை எதிர்கொள்கின்றன. மனிதனுக்குரிய இருப்பிடமான மருத நிலத்தை விட்டு, முல்லை நிலத்துக்குள் அவன் ஊருறுவும் போது, விலங்குகள் என்ன செய்யும் ? காட்டுக்குள் உணவும் குடிநீரும் இல்லாமற் போகும்போது, அவை ஊருக்குள் வருவதில் வியப்பில்லையே !

சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொன்றுண்ணிகளுக்கு உணவாகும் மான், முயல், காட்டுப் பன்றி போன்ற விலங்குகளையும் பறவைகளையும் மனிதன் வேட்டையாடித் தனக்கு உணவாக்கிக் கொண்டால், கொன்றுண்ணிகள் உணவுக்கு எங்கே போகும் ? உணவை நாடி ஊருக்குள் அவை வரத்தானே செய்யும் !

நாட்டில் இயங்கி வரும் மர அறுவை ஆலைகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டால், காடுகளின் அழிவைப் பெருமளவில் தவிர்க்க முடியும். தனது தேவைகளுக்கான மரப்பொருள்களுக்கு மாற்றாக வேறு ஆதாரங்களை மனிதன் தேடிக் கொள்ள முடியும் !

சுற்றுலா என்ற பெயரில் வனப்பகுதிக்குள் மனிதன் ஊடுறுவுவதை நிறுத்த வேண்டும். முதுமலை போன்ற வனப்பகுதிகளுக்குள் இருக்கும் கட்டடங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் !

சுற்றுலா என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு, காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் மனிதன் புகுவதைத் தடை செய்துவிட்டால், அடுத்த பத்தாண்டுகளில் வனப்பகுதி அதன் இழந்த பொலிவை மீண்டும் பெறும். காடுகள் வளர்ச்சி அடையும். மழைப் பொழிவு மிகுதியாகும். வனவிலங்குகள் ஊருக்குள் வருவது நின்று போகும் !

இதற்குத் தேவை அமைச்சர் பதவியில் அமர்வோர் அனைவரும் வல்லுநர்களாக இருக்க வேண்டும். வல்லுநர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் வனவளம் பெருகும்; மழைப் பொழிவு மிகும்; விளைச்சல் பெருகும்; குடிநீர்த் தட்டுப்பாடு நீங்கும்; நாடு செழிக்கும் !

இயற்கை வளங்களை அழிக்கும் அல்லது அதற்குத் துணை போகும்  எந்த மனிதன் கையிலும் ஆட்சி அதிகாரம் இருத்தலாகாது !

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),14]
{29-07-2020}
--------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------