name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், ஜூலை 23, 2020

சிந்தனை செய் மனமே (74) பழக்க வழக்கங்கள் !

வாழும் சூழலுக்கு ஏற்ப, மக்கள் தம் பழக்க வழக்கங்களை  மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் !


        
மனிதனின் வாழ்விடங்கள் அனைத்தும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, பண்டைத் தமிழர்கள் அவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்  என நான்காகப் பகுத்திருந்தனர் !

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி;  காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல்; குறிஞ்சியும் முல்லையும் தம் நிலையிலிருந்து திரியும் போது  பாலை என்று அழைக்கப்பட்டது ! 

இந்த நால்வகை நிலங்களும் புவி  அமைப்பினால் வெவ்வேறு தன்மை உடையவை ! இதனால் இந்த நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களும் வெவ்வேறு பண்பாடுகளும், உணவு முறைகளும், ஒழுகலாறும் உடையவர்களாக இருக்கிறார்கள் !

பண்டைக்காலத்தில்  குறிஞ்சி நில மக்களின் உணவில் தேனும் தினைமாவும், கனிகளும் முதன்மை இடம் பெற்றிருந்தன. ஆனால் இக்காலத்தில்  குறிஞ்சி நில மக்களின் உணவு முறையில் கோதுமைதான்  முதன்மை இடம் வகிக்கிறது. மலைவாழிடங்களில் பொதுவாக, குளிர் அதிகமாக இருக்கும். எனவே இங்கு வாழும் மக்கள் கம்பளி ஆடைகளை அதிகம் பயன் படுத்துகிறார்கள். இந்தக் கம்பளி ஆடைகள் மருத நில மக்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் ஒத்து வரா !

நெய்தல் நில மக்களின் உணவில் மீன் முதன்மை இடம் பெற்றிருக்கும்; ஆனால் மருத நில மக்களின் உணவில் காய்கறிகள் பெரும் பங்கு வகிக்கும். அரிசிச் சோறு முதன்மை உணவாக மருத நிலமக்களிடையே திகழ்கிறது. முல்லை நில மக்களின் உணவில் விலங்கு அல்லது பறவைகளின் இறைச்சி கட்டாயம் இடம் பெற்றிருக்கும் !

பாலை உள்பட ஐவகை நிலங்களிலும் வாழும் மக்களின் உணவு, உடை, பண்பாடு, இறைவழிபாடு, திருவிழாக்கள், திருமண முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஒருமைத் தன்மை (UNIFORMITY) இருக்காது !  நிலத்துக்கு நிலம் சற்றே வேறுபட்டுக் காணப்படும் !  வாழும் சூழலுக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொன்றையும், தமக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் !

மனிதனின் வாழ்க்கை முறையில், நில அமைப்புக்கு ஒரு முகாமையான  இடம் இருப்பது போல், வானிலை (WEATHER)  அமைப்புக்கும் முதன்மை இடம் உண்டு ! நீரின் உறை நிலையை விட மிக மிகக் குறைவாக வெப்ப நிலை காணப்படும் பூமியின் வடமுனை (NORTH POLE), தென்முனைகளை (SOUTH POLE) ஒட்டிய  நாடுகளிலும்  மக்கள் வாழவே செய்கின்றனர் ! அதே போல் வெப்பம்  மிகுதியாக உள்ள நில நடுக்கோட்டுப் பகுதி (EQUATOR) நாடுகளிலும் வாழ்கின்றனர் ! இவ்விரு வகையினரின் உணவு முறைகளும், ஆடை அமைப்புகளும், பழக்க வழக்கங்களும் வெவ்வேறானவை; அவற்றில் ஒருமைத் தன்மையைக் (UNIFORMITY)  காண முடியாது !

அவரவர் வாழும் நிலத்திற்கு ஏற்பவும், அங்கு நிலவும் வானிலைச் சூழலுக்கு ஏற்பவும் அப்பகுதி மக்கள் அனைத்தையும் மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். இதுதான் இயல்பானது ! இதற்கு மாறாக ஒருநிலத்தைச் சார்ந்த  மக்கள் இன்னொரு நிலத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையையைப் பின்பற்ற முனைந்தால் அஃது அவர்களுக்குத் தீங்காகவே முடியும் !

நம் நாட்டின் இயல்பான நில அமைப்புக்கு ஏற்பவும், இங்கு  நிலவும் வானிலைச் சூழலுக்கு ஏற்பவும்  நம் முன்னோர்கள் தமது உணவு முறைகளையும், ஆடை அணிமணிகளையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர் !

ஆனால் இதற்கு முரணாக மேல் நாட்டினரின் வாழ்க்கை முறையைப் பின் பற்றும் போக்கு நம்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து விரைவாகப் பரவத் தொடங்கியது. அவர்களின் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், ஒழுகலாறு மற்றும் களியாட்டங்களை இம்மி வழுவாமல் பின்பற்றுவதில் நம் நாட்டினர் ஆர்வம் காட்டலாயினர் !

இதற்கு வழிகாட்டியாகவும் தூண்டுகோலாவும்  அமைந்தது திரைப்படத் துறை. பணம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திரைப்படத் தொழிலில் இறங்கிய அறநெறியை மதிக்காத   கூட்டம், நம் நாட்டுப் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் படம் எடுக்காமல், ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், ஆடை அணிமணிகளையும், களியாட்டங்களையும் மிகைப்படுத்திப் படமெடுத்து அவற்றை நம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அவர்கள் மனதில் நச்சு விதைகளைத் தூவத் தொடங்கியது !

ஆங்கிலப் படங்களின் கதாநாயகன் மேல் நாட்டு வழக்கப்படிப் பூஞ்சுருட்டுப் (CIGARETTE) பிடிப்பதை நமது திரைப்படங்கள் மிகைப்படுத்திப் பளிச்சென்றுப் படம் பிடித்து காட்டலாயின. அவர்கள் செய்து காட்டாத - ஆனால் நம் கதாநாயகர்கள் மிகக் கவர்ச்சியாகச் செய்து காட்டும் - சுருள் சுருளாகப் புகை விடுதல், பூஞ்சுருட்டைத் தூக்கிப் போட்டு வாயால் கௌவிப் பிடித்து உடல்மொழி (STYLE) காட்டுதல் ஆகியவற்றால் பெரிதும் கவரப்பெற்ற நம் இளைஞர்கள் அவற்றைப் பின்பற்றலாயினர். புதிதாக ஒன்றைக் கண்டால், மனம் ஈர்ப்பு அடைவது தானே மனிதர்கள்  இயல்பு !

குளிர்ப் பகுதிகளில் வாழும் வெள்ளையர்களும்  பிறரும் குளிரிலிருந்து விடுபடும் பொருட்டுப் பூஞ்சுருட்டுப் பிடிப்பது இயல்பானது. அதைப் பார்த்து வெப்பப் பகுதியில்  வாழும் நாமும் பூஞ்சுருட்டை அளவின்றிப்  புகைத்து உடல் நலத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் ! பூஞ்சுருட்டு வனைவுத் தொழிலகங்களை இழுத்து மூட மனவலிவு இல்லாத நம் அரசுகள், பூஞ்சுருட்டுப் பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று, அட்டைப் பெட்டிகள் மீது அச்சிட்டு விற்பனை செய்யச்  சொல்கின்றனர் !

திரைப்படங்கள் நமக்குக் கற்றுத் தந்த இன்னொரு தீய பழக்கம் மது அருந்துதல் !  ஆங்கிலேயர்கள் மது அருந்துவதைப் பார்த்திருக்கிறீர்களா ? சிறு கோப்பையில் 100 அல்லது 150 மி.லி அளவுக்கு ஊற்றி வைத்துகொண்டு, உரையாடலுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக, துளித் துளியாக அருந்துவார்கள். அவர்கள் வாழும் குளிர் நிறைந்த சூழலுக்கு அது தேவையாக இருக்கிறது !

ஆனால் நம் திரைப்படங்கள் இதை மிகைப்படுத்தி நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. மதுப்புட்டியை எடுத்து மொத்தமாக அப்படியே வாயில் கவிழ்த்து விட்டு வெறும் புட்டியைக் கவர்ச்சியாக  உடல்மொழி (STYLE) காட்டித்  தூக்கிப் போட்டு உடைப்பதை  ஒவ்வொரு படமும் நமக்குப் பள்ளிப் பாடமாகச்  சொல்லித் தருகின்றன ! அவர்கள் துளித் துளியாக அருந்துகிறர்கள்; நாம் முழுப் புட்டியையும் ஒரே மூச்சில் வெறுமை ஆக்குகிறோம் ! மேல் நாட்டாரின் மதுப் பழக்கம் வெப்பப் பகுதியில் வாழும் நமக்கு எப்படி ஒத்து வரும் ?

மேனாட்டார் ஏன் பூஞ்சுருட்டுப் பிடிக்கிறார்கள், ஏன் மது அருந்துகிறார்கள், என்பதைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கத் துப்பில்லாத நம் மக்கள், பூஞ்சுருட்டுக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் ! அளவின்றிக் குடித்துவிட்டு அலம்பல் செய்யும் ஒரு வெள்ளைக்காரனை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? இங்கு தான் புட்டி புட்டியாகக் குடித்து விட்டுச் சாய்க்கடை ஓரத்தில் சாய்ந்து கிடக்கும் சடாதாரிகளைப் பார்க்கமுடிகிறது !

புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொள்ள முடியுமா ?  மேனாட்டாரைப் பார்த்து நாம் பூஞ்சுருட்டுக்கும், மதுவுக்கும் இடம் கொடுத்து, நம் வாணாளை (வாழ் நாளை) அல்லவா வலிந்து இழந்துகொண்டு இருக்கிறோம் !

குளிர்ப் பகுதியில் வாழும் அவர்கள் குளிர் தாக்காத  உரப்புத் துணியினாலான இறுக்கமான ஆடைகளை அணிகிறார்கள். அவர்களைப் பார்த்து நாமும் வெயில் காலத்திலும் கூட அதே போல மேலங்கி (OVERCOAT), கழுத்துப் பட்டி (TIE) என்று அணிந்துஇது தான் நாகரிகம் என்றி பறைசாற்றி -  வேர்வையில் குளித்து உடல் வெந்து கொண்டிருக்கிறோம். என்னே அறியாமை ! என்னே நாகரிகம் !

அவர்கள் குளிரை விரட்டுவதற்காக, விடுதிகளில் கூடி, மென்மையாக உடலை அசைத்து, நாட்டியமாடுகிறார்கள். அவர்கள் செயலில் என்ன உள்ளுறை நோக்கம் இருக்கிறது என்பதைச் சிந்திக்காமல், நாமும் விடுதிகளுக்குச் சென்று, நாட்டியம் என்ற பெயரில் வலிப்புக்காரனைப் போல கைகால்களை வெட்டி வெட்டி இழுத்துக் கூத்தடித்துக் கும்மாளம் போடுகிறோம் !

மேனாட்டுக் காரர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பெண்களை மென்மையாக அணைத்து முத்தமிடுகிறார்கள். கமலகாசனைப் போன்ற நம் திரைப்பட முதலாளிகள் இந்தக் காட்சியை எத்துணைக் கேவலப் படுத்த முடியுமோ அத்துணைக் கேவலப் படுத்தி, நம் நாட்டின் பண்பாட்டையே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் !

ஒரு நாட்டின் பண்பாடும், பழக்க வழக்கங்களும் அந்த நாட்டின் நில அமைப்பு மற்றும் வானிலையப் பொறுத்து அமைகிறது என்பதைச் சிந்திக்காமல் மூளையற்ற மூடர்களைப் போல்  நம் நாட்டு மக்கள், மேனாட்டாரை அடியொற்றி நடந்து தம் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்டக் கும்பல்களாக மாறிவிட்ட திரைப்படத் துறை, மக்களை அழிவின் விளிம்பை நோக்கி நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறது !

அரசு என்ற பதாகையைத் தாங்கிக் கொண்டு இயங்கும் தன்னல மாந்தர்கள் கூட்டம் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு,  யார் எப்படிக் கெட்டுப் போனால் என்ன, நாம் வாழ்ந்தால் போதும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் ஒய்யாரமாக வாழ்க்கையை சுவைத்துக் களித்துக் கொண்டிருக்கிறது !

--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),08]
{23-07-2020}
-------------------------------------------------------------------------------------------------------
       தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------