name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், ஜூலை 21, 2020

சிந்தனை செய் மனமே (73) புகையும் காற்று மாசும் !

பூஞ்சுருட்டுப் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி அதை விடமுடியாமல் தவிப்போர்  ஏராளமாக இருக்கின்றனர் !


ஒரு பொருளை உயிர்வளியுடன் (OXYGEN) சேர்ந்து வெப்பமூட்டும் போது அது எரிகிறது ! எரிதல் நிகழ்கையில் புகை வெளியிடப்படுகிறது. புகை என்பது என்ன ? அது ஒரு வேதிப் பொருள் (CHEMICAL COMPOUND) – ஆவி வடிவில் இருக்கும் வேதிப் பொருள் !

இப்பூவுலகில் வாழும் நிலத் திணைகள் (தாவரங்கள்), புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதன் போன்ற அனைத்து உயிரினங்களுமே வேதிப் பொருள்களால் ஆனவை ! அவற்றின் உடல்களில் பிற வேதிப் பொருள்கள் குறைவாகவும் , கரிமம் (CARBON) மிகுதியாகவும் இருக்கும் !

ஒரு பட்டுப் போன மரம் இருக்கிறது. அதில் இருக்கும் கரிமம் (CARBON), காற்றில் கலந்திருக்கும் உயிர் வளியுடன் (OXYGEN) சேர்ந்து எரிகிறது. அந்த மரத்திற்கு உயிர்வளி (OXYGEN) கிடைப்பதைத் தடுத்து விட்டால், அது அணைந்து போகும் !

கரிமத்துடன் (CARBON) உயிர்வளி (OXYGEN) சேர்ந்து எரிகையில் குறைகரிமவளி (CARBON DIOXIDE) தோன்றுகிறது. கன்னெய் (PETROL), தீசல் (DISEL)  போன்ற கரிம நீரகை (HYDRP CARBON)ப் பொருள்களுடன் உயிர்வளி சேர்ந்து எரிகையில்  நிறைகரிமவளி (CARBON MONOXIDE) தோன்றுகிறது !

இந்த இருவகை கரிமவளிகளும் நம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை ! எனினும் மரம் போன்ற பொருள்கள் எரிகையில் தோன்றும் குறைகரிம வளியை (CARBON DIOXIDE) விட, நாம் இயக்கும் ஊர்திகள் (VEHICLES) வெளியிடும் நிறை கரிமவளி  (CARBON MONOXIDE) மிகு தீங்கு விளைவிப்பவை ! இவ்விரண்டையும் இனி நாம் கரிமவளி என்னும் ஒற்றைப் பெயரால் சுட்டுவோம் !

நாம் மூச்சினை உள்ளிழுக்கும் போது புகை வடிவில் இருக்கும் கரிமவளி நம் நுரையீரலுக்குள் சென்று அங்குள்ள நுண்ணறைகளில் படிகிறது. ஒரு காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள் ! விறகு அடுப்பைப் பயன்படுத்தும் ஒரு வீட்டின் அடுக்களை எப்படி இருக்கும் ? சுவரிலும், கூரையிலும் கரி படிந்து கன்னங் கரேல் என்று இருக்கும் அல்லவா ? விறகு அடுப்பில் ஏற்றி இறக்கும் பானையின் அடிப்புறம் கறுத்து இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா ?

புகை வடிவில் இருக்கும் கரிமவளியை நாம் தொடர்ந்து நுகர்ந்து வந்தால், நம் நுரையீரலும் அப்படித்தான் கறுத்துப் போகும் ! அப்புறம் என்ன ? நுரையீரலின் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படும். இளைப்பிருமல் (ASTHUMA) எலும்புருக்கி (T.B) போன்றவை இசைவின்றியே வந்து நம்மைப் பற்றிக் கொள்ளும் !

இரண்டு வகையான கரிம வளிகளைப் பற்றிப் பார்த்தோம். இவையல்லாமல் நமக்குத் தீங்கு விளைவிக்கும் இன்னொன்று பூஞ்சுருட்டு (CIGARETTE) , புகையிலைச் சுருட்டு (TOBACCO CHEROOT , பீடி (BEEDI) ஆகியவற்றைப் புகைப்பதால் உண்டாகும்நிகோடின்என்னும் நஞ்சு கலந்த கரிம வளி ! நாம் இவற்றைப் புகைத்தாலும் சரி, அல்லது பிறர் புகைக்கும் போது காற்றில் கலந்து நம் நுரையீரலுக்குள் சென்றாலும் சரி, தீமை நமக்குத் தான் !

இதில் ஒரு அவலம் என்னவென்றால், காரணமில்லாத ஒரு ஈர்ப்பின் (ATTRACTION) காரணமாகவோ அல்லது கவர்ச்சியான உடல்மொழிக்கு (STYLE) இணக்கப்பட்டோ, அல்லது சூழ்நிலையின் உந்துதலுக்கு (STIMULATION) ஆட்பட்டோ பூஞ்சுருட்டுப் புகைக்கும் பழக்கத்திற்கு ஆளாகி அதை விடமுடியாமல் தவிப்போர் தான் ஏராளமாக இருக்கின்றனர் !

பூஞ்சுருட்டுப் புகையில் கலந்திருக்கும்நிகோடின்என்னும் மெல்லிய நஞ்சு நம் குருதியில் கலந்துவிடுகிறது. அங்கிருந்து கொண்டு, “பூஞ்சுருட்டுப் பிடி! ஒன்றேயொன்று பிடி ! உன் உடலில் களைப்பு நீங்கும் ! புத்துணர்வு பிறக்கும் ! ” என்று நச்சரித்து, நமக்குள்  ஒரு ஏக்க உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இப்பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று நம் மனம் விரும்பினாலும், குருதியில் கலந்திருக்கும்நிகோடின்நம் மன உறுதியை உடைத்து எறிந்து, அலைபாயும் மனத்தைத் தன்வயப்படுத்திபூஞ்சுருட்டுப் புகைக்க வைத்து விடும் !

மனிதனின் வாணாளைக் (ஆயுள்) குறைக்க வல்ல புகையானது, அங்கிங்கெனாத படி எங்கும் பரவலாகத் தோன்றவே செய்கிறது. மனிதனின் பொறுப்பற்ற தன்மையும், அறியாமையும், தன்னல உணர்வும் தான், புகை உருவாகக் காரணமாக அமைகிறது !

வீட்டில் சேரும் குப்பைகளை மக்க வைத்து எருவாக்கினால், செடி கொடிகளுக்கு அவை நல்ல எருவாக அமையும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? நம் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைக்க வேண்டி, அவற்றை எரித்துக் காற்றினை மாசு படுத்தி விடுகிறோம். இதை அறியாமை என்பதா ? அல்லது தன்னலம் என்பதா ?

போகிப் பொங்கல் என்பது வீட்டில் இருக்கும் பயன்படாப் பொருள்களை அப்புறப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட திருநாள்.  அதன்  பொருளைப் புரிந்து கொள்ளாமால், அப்புறப்படுத்திய பொருள்களை எரித்து வருகிறோம். வீட்டையும் தூய்மைப் படுத்துகிறோம்; அத்துடன் நில்லாமல்  காற்றையும் மாசு படுத்தி விடுகிறோம் ! இதை அறியாமை என்பதா ? அல்லது தன்னலம் என்பதா ?

காடுகளிலும்  மலைகளிலும்  வளர்ந்திருக்கும் பட்ட மரத்தின் கிளைகள், உராய்வதால் தீப்பொறிகள் உண்டாகிக் காட்டுத் தீ ஏற்படுகிறது. இது இயற்கையாக நிகழ்வது. ஆனால், சில மனிதர்கள் செயற்கையாகத் தீவைக்கும் நிகழ்வுகளும் காடுகளிலும் மலைகளிலும்  நடக்கவே செய்கின்றன !

காட்டுக்குச்  சென்று சருகுகளில் தீவைத்து, எரியச் செய்து அதில் பல மரங்களும் எரிந்து போகச் செய்கின்றனர். தீயினால் வெந்து தணிந்த மரங்களிலிருந்து   கரித் துண்டுகளைத் திரட்டி வந்து விற்பனை செய்யும் தீய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றர். காட்டுத் தீயினால், காற்று எத்துணை அளவுக்கு மாசு படுகிறது என்பது இந்தத் தன்னல மனிதர்களின் சிந்தையில் ஏன் உறைப்பதில்லை ?

எப்பொழுது கன்னெய் (PETROL), தீசல் (DISEL) போன்ற எரிபொருள்களைக் கொண்டு ஊர்திகளை இயக்கத் தொடங்கினோமோ அப்பொழுதிலிருந்தே காற்று மாசுபடத் தொடங்கி விட்டது. இதற்கு மாற்றாக எரிபொருள் இன்றி மின்விசையில் இயங்கும் ஊர்திகள் பெருமளவில் வந்தால் தான், காற்றின் மாசு அளவைக் கட்டுப்படுத்த முடியும் !

பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு கோதுமைத் தாள்களை தீவைத்து எரிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், அறுவடைக்குப் பிறகு வைக்கோலினை மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமைத் தாள்களை வடபுலத்தார் எரித்து, காற்றினை மிக மோசமாக மாசுபடுத்தி விடுகின்றனர். கோதுமை வைக்கோலைக் கூழாக்கித் தாள் (PAPER) வனையலாமே ! இதைப் பற்றிச் சிந்திக்க அம்மாநில அரசுகளுக்கு நேரம் இல்லை போலும் !

அனல் மின் நிலையங்கள் வெளியிடும் நிலக்கரிப் புகையைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான தொழில்நுட்பம் இருக்கிறது; ஆனால் அதைச் செயல் படுத்துவதில்லை ! சுற்றுச் சூழலைப் பற்றி அக்கறையற்ற அரசுகள் இருக்கும்வரை, அனல்மின் நிலையங்களில் புகை வந்துகொண்டுதான் இருக்கப்போகிறது.

இன்னும் எத்துணையோ நேர்வுகளில் புகை வெளியாகி காற்று மண்டலத்தை மிக மோசமாகப் பாழ்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்பட எந்த நாடும் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை ! அறிவுள்ள மனிதன் தான் அழிவுக்கான வழிகளைத் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறான் !

அறியாமையால் தவறு செய்வதை மன்னிக்கலாம்; மனித குலம் அறிந்தே தவறு செய்வதை மன்னிக்கவே முடியாது ! தன்முனைப்பின் உச்சத்தில் நின்று கொண்டு இறுமாப்புடன் எக்காளமிடும் அரசுகளை , இயற்கை ஆர்வலர்கள் மன்னிக்கலாம்; ஆனால் இயற்கை மன்னிக்காது !

இயற்கை விதிக்கும் ஒறுப்பாக (தண்டனையாக) கொரோனா போன்று இன்னும் எத்தனைப் பேரழிவுகள் வரப்போகிறதோ, யார் கண்டது ! ஒருமுறை ஒறுப்புக்கு ஆளான பிறகாவது மனித குலம் திருந்த வேண்டும் ! திருந்துமா ?

-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),06]
{21-07-2020}
--------------------------------------------------------------------------------------------------------
        தமிழ்ப் பணி மன்றம் முகநூற்  குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------