“மாண்பு மிகு அமைச்சர்” என்பது சரியான கூற்று ! “மாண்புமிகு புகழேந்தி” என்பது தவறான கூற்று !
சட்டமன்றத்
தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று
1967 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போது திரு.சி.பா.ஆதித்தனார் சட்டமன்ற அவைத் தலைவராகத்
(SPEAKER) தேர்வு செய்யப் பெற்றார். சட்ட மன்ற
நடவடிக்கைகளில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் ஒன்று, அவை
தொடங்கும் முன்பாக அவைத்தலைவர் ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான
பொருளையும் விளக்குதல் !.
இரண்டாவது
சீர்திருத்தம் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களுக்கு முன்னதாகப் பயன்படுத்தி
வந்த
“கனம்” என்னும் அடைமொழியை மாற்றி “மாண்பு மிகு” என்னும் அடைமொழியை அறிமுகப் படுத்தியது
!
சட்ட
மன்றத்தில் எந்தவொரு உறுப்பினரும் அமைச்சர்களைப் பார்த்துப் பேசும்போது “மாண்பு மிகு அமைச்சர் அவர்களே” என்றுதான் விளிக்க வேண்டும். உரையாற்றும்
போது “மாண்பு மிகு அமைச்சர்” என்றுதான்
சொல்ல வேண்டும். அதேபோன்று அமைச்சரோ அல்லது அவைத்தலைவரோ அல்லது
இன்னொரு உறுப்பினரோ வேறொரு உறுப்பினரைப் பார்த்துப் பேசுகையில் “மாண்புமிகு உறுப்பினர் அவர்கள்” என்றுதான் குறிப்பிட
வேண்டும் !
ஆனால்
உறுப்பினர் ஒருவரைப் பார்த்து “மாண்பு மிகு” என்னும் அடைமொழி இல்லாமல் அமைச்சர்கள் பேசுவது இக்காலத்தில் இயல்பான ஒன்றாக
காணப்படுகிறது !
”மாண்பு” என்னும் சொல்லுக்குப் பெருமை என்று பொருள்.
நம் முன்னிலையில் அமர்ந்திருக்கும் இணை (சம) அகவை அல்லது உயர் அகவை
உடைய ஒருவரைப் பார்த்து ”நீ” என்று சொல்வதில்லை.
அது பண்புக் குறைவான செயல். அதற்கு மாற்றாக,
இணை (சம) அகவை உடையவரை “நீங்கள்” என்பதும்,
உயர் அகவை உடையவரைத் “தாங்கள்” என்பதும் நயத்தக்க நாகரிகமாகக் கருதப்படுகிறது !
அதுபோன்றே
நாம் ஒருவருடன் உரையாடும் போது, நம் அகவையை ஒத்த அல்லது நம்மை
விட மூப்பு நிலை உடைய மூன்றாமவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “திரு” என்னும் அடைமொழியை அவர் பெயருக்கு முன்னால் சேர்க்கிறோம்.
குறிப்பிடப் படுபவர் பெண்பாலினராக இருந்தால் “அவர்
பெயருக்கு முன்பாகத் ”திருமதி” என்னும்
அடைமொழியைச் சேர்க்கிறோம் !
நம்மைவிட
இளையவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அல்லது எழுதுகையில் “திரு”, “திருமதி”, “செல்வி”
போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்துவது மரபன்று ! பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆசிரியர்
வருகைப் பதிவு செய்கையில் “திரு.மணிமாறன்”,
“செல்வி.இளமதி” என்று பண்புறை
அடைமொழியுடன் மாணவ மாணவியரை விளிப்பதில்லை !
பிறருடன்
பேசுகையில் அல்லது ஒரு அவையில் உரையாற்றுகையில் அல்லது எழுதுகையில் பின்பற்ற வேண்டிய
பண்புறை அடைமொழிகள் பற்றிய கோட்பாடுகளைப் பெரும்பாலான மக்கள் அறிந்திராதவர்களாகவே இக்காலத்தில்
இருக்கிறார்கள் ! இக்காலக் கல்வி முறை அவற்றைப் பற்றிச் சொல்லித்
தராமையும், கேள்வியறிவு இல்லாமையுமே இத்தகைய தவறுகளுக்குக் காரணம்
!
அரசியல்
அரங்கில் இத்தகைய பண்புறை அடைமொழிகளை இக்காலத்தில் யாரும் பின்பற்றுவதே இல்லை. இந்திராகாந்தி, குல்சாரிலால் நந்தா, வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று அடைமொழியின்றிக்
குறிப்பிடும் வழக்கம் நிலைபெற்று விட்டது. திருமதி இந்திரா காந்தி,
திரு.குல்சாரிலால் நந்தா, திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று குறிப்பிடுவதுதான் முறையான பண்பாடாகும் !
”தந்தை பெரியார்” என்று குறிப்பிடலாம்; வெறுமனே “பெரியார்” என்றும் குறிப்பிடலாம்;
ஆனால் அவர் பெயரை மட்டும் குறிப்பிடும் போது திரு.ஈ.வெ.இராமசாமி என்று தான் குறிப்பிட
வேண்டும் ! ”தந்தை”, “பெரியார்”
என்னும் அடைமொழிகள், பண்புறை அடைமொழிகள் ஆகும்.
ஆகையால் திரு.பெரியார் என்று குறிப்பிட வேண்டியதில்லை.
”பெரியார்” என்று மட்டும் குறிப்பிடலாம்
!
ஒருவரது
பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் “முனைவர்”,
”மருத்துவர்”, ”அறவாணர் (நீதியரசர்)”, ”வழக்குரைஞர்”, “பாவலர்”,
”பாவேந்தர்”, “பேரறிஞர்”, ”மூதறிஞர்”, “கலைஞர்”, “நாவலர்”,
”சிலம்புச் செல்வர்”, “மகாத்மா”, “பண்டிதமணி”, ”சொல்லின் செல்வர்” போன்ற அடைமொழிகள் பண்புறை அடைமொழிகளே ! எனவே முனைவர்
இளங்கோவன் என்று மட்டும் குறிப்பிடுதல் சாலும் ! முனைவர் திரு.இளங்கோவன் என்று குறிப்பிட வேண்டியதில்லை ! ஆனால்,
“முனைவர்” என்னும் அடைமொழியைக் குறிப்பிடாவிட்டால்
“திரு.இளங்கோவன்” என்று குறிப்பிடுதல்
தான் முறை !
காந்தியாரை
நாம்
”மகாத்மா” காந்தி என்று குறிப்பிடுவதால்,
“மகாத்மா” திரு.காந்தி என்று
குறிப்பிட வேண்டியதில்லை. ஆனால் “மகாத்மா”
என்னும் அடைமொழியைச் சேர்க்காத போது திரு.காந்தி
என்று தான் குறிப்பிட வேண்டும். வெறுமையாக, ”காந்தி வந்தார்” என்று குறிப்பிடுதல் முறையன்று
!
இத்தகைய
அடைமொழிகளில் ஒன்று தான் ”மாண்புமிகு” என்பதும் ! இந்த அடைமொழி, “பதவி”ப் பெயருக்கு முன்பாகக் குறிப்பிடப்படும் ஒன்றேயன்றி தனிப்பட்டப் பெயருக்கு
முன்னால் குறிப்பிடப்படும் அடைமொழி அன்று ! “மாண்பு மிகு அமைச்சர்”
என்பது சரியான கூற்று ! “மாண்புமிகு புகழேந்தி”
என்பது தவறான கூற்று !
“மாண்பு மிகு” என்னும் அடைமொழியை எப்பொழுது பயன்படுத்த
வேண்டும் என்பது அரசியலில் இருக்கும் 90% மக்களுக்குத் தெரிவதில்லை.
அவர்கள் விருப்பம்போல்,
அமைச்சர்களைக் “காக்கை” பிடிக்கும் நோக்கத்தில், தேவையற்ற நிகழ்வுகளின் போதெல்லாம்
பயன்படுத்தி வருகின்றனர் !
சட்ட
மன்றத்திற்குள் அமைச்சர்கள் இருக்கையில், அவர்களைப் பற்றிக்
குறிப்பிடுகையில் “மாண்பு மிகு................துறை அமைச்சர்” என்று குறிப்பிட வேண்டும். அவர்கள் சட்டமன்றத்திற்குள் இல்லாத போது “.................துறை அமைச்சர்” என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்.
இந்த விளக்கம், அமைச்சர்கள், அவைத்தலைவர், உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருந்தும்
!
தமிழ்மணி
என்பவர் ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற அவைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர் அவைக்குள் இருக்கையில் ”மாண்புமிகு அவைத்தலைவர்”
என்றுதான் அவரைக் குறிப்பிட வேண்டும். அவைத்தலைவர்
சட்டமன்றம் தொடர்பான அரசு நிகழ்ச்சி ஒன்றில் வெளியூரில் கலந்து கொள்கிறார் என்றால்,
அங்கும் அவரை “மாண்பு மிகு அவைத்தலைவர்”
என்று தான் குறிப்பிட வேண்டும் !
ஆனால், அவர் தன் கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு
அவரை “திரு.தமிழ்மணி” அவர்கள் என்று தான் குறிப்பிட வேண்டுமே தவிர “மாண்பு
மிகு” என்ற அடைமொழியை அங்கு பயன்படுத்தக் கூடாது !
”அமைச்சர்” கண்ணன் என்பவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து
கொள்கிறார். அங்கு அவர்
பங்கேற்பது “அமைச்சர்” என்ற முறையில் அன்று.
தனிப்பட்ட கண்ணனாகவே அங்கு கலந்து கொள்கிறார். எனவே அந்நிகழ்ச்சியில் உரையாற்றுவோர் “மாண்பு மிகு அமைச்சர்
அவர்களே” என்று விளித்தல் மரபு மீறிய செயலாகும் !
”அமைச்சர்” கடமையை ஆற்றுகையில் அவர் அமைச்சர்;
அங்கு “மாண்புமிகு” என்னும்
அடைமொழி பொருத்தமானது. திருமணவீட்டிலும், நீத்தார் நினைவு நிகழ்ச்சியிலும், கட்சி சார்பு நிகழ்ச்சிகளிலும்
கலந்து கொள்ளும் போது அவர் அமைச்சர் அன்று ! அங்கு “மாண்பு மிகு” என்னும் அடைமொழி தேவையில்லை !
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பேச்சாளர்கள் “மாண்பு மிகு முதலமைச்சர்”
என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இது முற்றிலும் தவறு. முதலமைச்சராக அவர் நம் முன்னிலையில்
இருக்கும் போது (HIS PRESENCE IN
FRONT OF US AS CHIEF MINISTER), அவரை “மாண்பு
மிகு முதலமைச்சர்” என்று சொல்வதில் பிழையில்லை. ஆனால் அவர் நம் முன்னிலையில் இல்லாத போது (NOT PRESENT IN FRONT OF
US) “முதலமைச்சர்” என்பதற்கு ”மாண்பு மிகு” என்னும் அடைமொழியைச் சேர்ப்பது தவறு
!
எந்த
இடத்தில்
“மாண்பு மிகு” என்னும் அடைமொழியைச் சேர்க்க வேண்டும்
என்னும் அடிப்படை அறிவு இல்லாதவர்களால் “மாண்பு மிகு”
என்னும் அடைமொழி தன் மதிப்பை இழந்து வீழ்ந்து கிடக்கிறது !
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, கடகம் (ஆடி),04]
{19-07-2020}
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------