நீரின்றி அமையாது உலகம் !
மழைநீர்
போன்று தூய்மையான நீர் இயற்கையில் வேறு எதுவும் கிடையாது ! இந்தத் தூய்மையான நீரை நமக்கு அளிப்பது சூரியன் ! உவர்ப்பு
நிறைந்த கடல் நீர், கலங்கலான ஆற்று நீர், நோய்மிகளும் நுண்ணுயிரிகளும் நிறைந்த கழிவு நீர், எதுவானாலும்
சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேகமாகத் திரள்கின்றன !
கரிய
மேகங்கள் குளிர்ச்சி அடையும் போது, மழையாகப் பொழிகிறது
! மேகம் குளிர்ச்சி அடைவதற்குக் காடுகளும் மலைகளும் நிரம்பத் தேவை
! இங்கு தான் குளிர்ச்சியான சூழ்நிலை எப்போதும் நிலவும். எந்த நாட்டில் காடுகளும் மலைகளும் அழிக்கப்படுகின்றனவோ, அங்கு மழைப் பொழிவும் குறைந்து போகிறது !
இயற்கை
நமக்குக் கொடுத்திருக்கும் அருட்கொடை தான்
தண்ணீர் ! தண்ணீர் இல்லையையேல் இந்த நிலவுலகில் புல்,
பூண்டு, மரம், செடி,
கொடிகள் கிடையாது. விசும்பின் துளிவீழின் அல்லால்
மற்றாங்கே பசும்புல் தலை காண்பு அரிது ! (குறள்.16)
ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன,
விலங்குகள், மனிதன் என எந்த உயிரினமும் நீரின்றி
வாழமுடியாது !
மனிதன்
உயிர் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களை, (தானியங்களை) விளைவிக்கச் செய்வதுடன், பருகப்படும் தன்மையால் தானே ஒரு உணவாகவும் இலங்குவது மழைநீர். இதைத்தான், “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்று நமது செவிப் புலனுக்கு எட்டுகிறாற்போல் செப்புகிறார் பொய்யா மொழிப்புலவர்
!
இத்தகைய
அரும் பெரும் கருவூலமான தண்ணீரை நாம் அறிவார்ந்த முறையில் பயன் படுத்துகிறோமா ? அதன் தூய்மையைப் போற்றிப் பாதுகாக்கிறோமா ? நீர் வீணாவதைத்
தவிர்க்கிறோமா ? விரயமாகாமல் சேமிக்கிறோமா ?
மலைகளிலும்
காடுகளிலும் பெய்யும் மழை, பள்ளம் நோக்கிப் பாய்கிறது;
சிற்றோடைகள் உருவாகின்றன; ஓடைகள் பல சேர்ந்து ஆறாக
உருவெடுக்கிறது. ஆற்று நீரை அணைகள் கட்டித் தேக்கி வைத்து,
தேவைப்படும் போது சிறுகச் சிறுகத் திறந்துவிட்டு வேளாண்மைக்கும் குடிநீருக்கும்
பயன்படுத்த வேண்டும் !
ஆட்சியில்
இருக்கும் அரசைப் பொறுத்து ஆற்று நீரைப் பயன்படுத்தும் திட்டங்கள் உருவாகின்றன. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக, வெள்ளைக் காரர்களால்
உருவாக்கப்பட்டது மேட்டூர் அணை. விடுதலைக்குப் பிறகு வைகை அணை ஒன்று
தான் தமிழ்நாட்டில் உருவாக்கப்பெற்ற பெரிய அணையாகும். அதன் பிறகு
சிற்றணைகள் ஆங்காங்கே சில இடங்களில் கட்டப்பட்டன !
மழைக்காலத்தில்
காவிரியில் வருகின்ற வெள்ளநீரைத் தேக்கி வைத்துக் கோடைக்காலத்தில் அதைப் பயன் படுத்துவதற்கான அணைக்கட்டுத் திட்டங்கள்
ஒன்று கூட இன்னும் உருவாக்கப் படவில்லை ! இதனால் வெள்ளக் காலங்களில்
காவிரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது !
காவிரி
மட்டுமல்ல, தமிழ் நாட்டில் பாய்கின்ற தென்பெண்னை,
பாலாறு, வைகை, பொருணை
(தாமிரவருணி) போன்ற எந்த ஆற்றிலும் வெள்ளநீர்ச்
சேமிப்புத் திட்டங்கள் துப்புரவாக இல்லை. இயற்கை அளிக்கும் அருட்கொடையான
நீரைச் சேமித்து வைக்கும் திறனற்ற அரசுகள் தான் பல்லாண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன
!
தொலைநோக்குச்
சிந்தனையில்லாத இந்த அரசுகளின் செயலற்ற தன்மையால், கோடைக்
காலங்களில் தமிழ் நாடெங்கும் குடிநீர்ப் பற்றாக்குறை, கடுமையாக
மக்களை வாட்டி எடுக்கிறது !. நீர்மேலாண்மையில் தமிழ்நாடு முற்றிலும்
தோல்வி அடைந்துவிட்டது ! இலவயங்களில் பணத்தை வாரி இறைத்து வீணாக்கும் தமிழக அரசு, நீர்ச் சேமிப்புத் திட்டங்களில் போதிய கவனம் செலுத்தாமல், பொறுப்பற்ற அரசாகத் திகழ்ந்து வருகிறது !
பெருநகரங்களில், தூய்மைப் படுத்தப்பெற்ற குடிநீர், குழாய் இணைப்புகள்
மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தெருவிலும் பொதுக்
குடிநீர்க் குழாய் இணைப்புகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு குழாய் இனைப்புகள் மூலம் வழங்கப்படும் குடிநீர், பல இடங்களில் குடிநீர் அல்லாத தேவைகளுக்கும் திருப்பி விடப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலுமாக இழந்து
நிற்கின்றன ! அரசியலும் இதற்கு ஒரு காரணம் !
சீறூர்களில் (கிராமங்களில்) மேனிலை நீர்த் தொட்டிகளை ஆங்காங்கே அமைத்து
குடிநீர்க் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்தக் குடிநீரைத்
தோட்டத்திற்கும், மாடுகள் குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்துவதை
இன்றும் கூடக் காணலாம் !
பொறுப்பின்மையும், பேராசையும் ஆட்கொண்டிருக்கும் மக்களிடம், உள்ளாட்சி அமைப்புகளும்
அரசும் தோற்றுக் கொண்டிருக்கின்றன. பயன்படுத்தும் நீருக்குக்
கட்டணம் பெறும் முறை வரவேண்டும். உரிய கருவிகளை ஒவ்வொரு வீட்டின்
குழாய் இணைப்பிலும் பொருத்தி, பயபடுத்தப்பட்ட நீரின் அளவைக் கணித்து
அதற்குரிய கட்டணத்தைப் பெற்றிட வேண்டும். இல்லையேல், விலைமதிக்க முடியாத குடிநீர், தோட்டங்களுக்கும்,
பூச்செடிகளுக்கும், தென்னந் தோப்புகளுக்கும் பாய்ச்சப்படுவதைக் கட்டுப்படுத்த முடியாது
!
நீர்
வீணாகும் இன்னொரு இடம் உணவு விடுதிகள் ! உண்பதற்கு முன்பும்,
உண்ட பின்பும் ஒவ்வொரு மனிதனும் கைகழுவுவதற்குச் செலவிடும் நீரின் அளவு
மிக அதிகம். உணவு உண்ணும் போது, மேல் நாட்டாரைப்
போலப் பொட்டுக் கரண்டியும் (SPOON), கத்தியும்
(KNIFE) முள்கரண்டியும் (FORK) பயன்படுத்தும் பண்பாடு நம்நாட்டிலும்
வரவேண்டும். இதன்மூலம் நீர்ச் சேமிப்பை மிகுதிப்படுத்தலாம்
!
அளவு
கடந்து நீர் வீணாகும் இன்னொரு இடம் குளியலறை. ஒரு ஆளுக்கு 20 இலிட்டர் தண்ணீர் குளிப்பதற்குப் போதுமானது. இதை உறுதிப்
படுத்தும் வகையில் உரிய தானியங்குக் கருவிகளைக் குளியலறைகளில் பொருத்த வேண்டும்.
குறிப்பாகத் தங்கும் விடுதிகள் (LODGES), மாணவர்
விடுதிகள் (STUDENTS HOSTELS), நகராட்சிப் பொதுக் குளியலறைகள்
(PUBLIC BATH ROOMS) போன்றவை அல்லாமல் தனி மனிதர்களின் இல்லங்களிலும்
இவை பொருத்தப்பட வேண்டும். நீர் விரயத்தை இதன்மூலம் பெருமளவு
தடுக்க முடியும் !
உணவு
விடுதிகள், தங்கும் விடுதிகள், மாணவர்
விடுதிகள், தனி மனிதர்களின் இல்லங்களில் பெருமளவு விரயமாகும்
நீர், கழிவுநீர்க் கால்வாய்களை உருவாக்குகிறது. இந்தக் கால்வாய்களெல்லாம் ஆறுகளை அடைந்து ஆற்று நீரை மாசு படுத்திவருகிறது
! நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், கழிவு நீர்க் கால்வாய்கள் உருவாவதைக்
தவிர்க்கலாம் !
எந்தவொரு
தொழிற்சாலையில் இருந்தும் கழிவு நீர் வெளியேறாத படி, அங்கேயே
மறு சுழற்சி செய்யும் ஏற்பாடுகளைக் கட்டாயமாக்க வேண்டும். கழிவு
நீரை வெளியேற்றி ஆற்றில் கலக்கச் செய்யும் தொழிற்சாலைகளை நிலையாக (நிரந்தரமாக) மூடிவிட வேண்டும் ! நீதிமன்றங்கள் இதில் தலையிடாதபடிச் சட்டப்பாதுகாப்புச் செய்திட வேண்டும்
!
நிலத்திற்கு
அடியில் இருக்கும் எதுவும் அரசுக்குச் சொந்தம் என்று சட்டம் சொல்கிறது. இந்த அடிப்படையில் தான், யாராவது புதையல் எடுத்தாலோ,
கடவுள் சிலைகளைக் கண்டெடுத்தாலோ அரசு அவற்றைப் பறித்துக் கொள்கிறது.
அப்படி இருக்கையில் நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரை மட்டும் வரைமுறை
இன்றித் உமிழிகள் (PUMPS) மூலம் மக்கள் உறிஞ்சி எடுப்பதை அரசு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் ?
கோடைக்காலங்களில்
கிணறு,
குளம், குட்டை, ஏரி போன்ற
நீர் நிலைகள் வற்றிப் போவதற்கு இந்த ஆழ்குழாய்க் கிணறுகள் தான் காரணம் என்பதை உசாவல்
ஆனையம் (ENQUIRY COMMISSION) அமைத்துதான் கண்டுபிடிக்க வேண்டுமா
? 1967 –ஆம் ஆண்டில் சென்னையில் திருவல்லிக் கேணிப் பகுதியில் இருந்த
“முரளி கபே” என்னும் உணவகத்தில் அருமையான,
சுவையான நீர் கைகழுவக் கிடைத்தது. பிற்காலத்தில்
திருவல்லிக் கேணி பகுதி மட்டுமல்ல தியாகராய நகர்ப் பகுதிகளில் கூட உணவகங்களில் கைகழுவ உப்புச் சுவையுள்ள
நீர் தான் கிடைக்கிறது. சென்னையில் பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே
புகுந்துவிட்டது !
புதிதாக
ஆழ்குழாய்க் கிணறுகள் அமைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும். இப்போது இயங்கிவரும் ஆழ்குழாய்க் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் நீரைக் கணிப்பதற்குக்
கருவிகள் பொருத்திட வேண்டும். எவ்வளவு நிலத்தடிநீர் ஆழ்குழாய்க்
கிணறு மூலம் எடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்குத் தக்கபடிக் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்க
வேண்டும். இதைச் செய்யாவிட்டால் கடலோரத்திலிருந்து பத்து கி.மீ தொலைவு வரை உள்ள ஊர்களில் எல்லாம்
நிலத்தடி நீர், உவர் நீராவதைத் தடுக்கவே முடியாது !
அதிக
நீர் தேவைப்படும் சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும். இயற்கை அளிக்கின்ற தூய்மையான
நீரை மாசு படுத்துவதற்கு எந்த மனிதனுக்கும் உரிமை கிடையாது !
சிந்தனை
செய் மனமே ! சிந்தனை செய் ! சிந்திப்பவர்கள்
தான் சாக்ரடீசு போன்ற அறிஞர்களாக உருவெடுக்கிறார்கள் ! ஆயிரக்
கணக்கான சாக்ரடீசுகள் நம் நாட்டிலும் தோன்றினால், நாட்டில் நிலவும்
குளறுபடிகள் எல்லாம் சீராகாதோ ?
---------------------------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),29]
{13-07-2020}
--------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
--------------------------------------------------------------------------------------------------------