name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், ஜூன் 30, 2020

சிந்தனை செய் மனமே (59) ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி !

பற்களைப் பாதுகாப்போம் !


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, என்பது நம் முன்னோர் நமக்கு அளித்துச் சென்றிருக்கும் அறிவுரை !  ஆலம் விழுது, கருவேலங் குச்சி இரண்டும் பல் துலக்க நல்லவை !

(நாலும் இரண்டும்) நாலடியாரும், திருக்குறளும் படித்து அறிந்தோரை, வேறு எவரும் பேச்சில் வெல்ல முடியாது ! அவர் பேச்சை மறுத்துப் பேச முடியாது ! அந்த அளவுக்கு அவர் அறிவிற் சிறந்தவராக விளங்குவார் !

நமது முன்னோர்கள், பல் துலக்குவதற்கு ஆலங்குச்சி, அரசங்குச்சி, கருவேலங்குச்சி, வேப்பங்குச்சி, நொச்சிக்குச்சி, காட்டாமணிக் குச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள். இவை எல்லாமே மூலிகை வகையைச் சேர்ந்தவை !

இக்குச்சிகளில்  இருக்கும்  மருந்துச் சத்துகள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் வலிமை சேர்க்கக் கூடியவை !. வாயில் இயல்பாகவே காணப்படும் தீமை பயக்கும்  நுண்ணுயிரிகளை அழிக்கும் வல்லமை உடையவை !

இயற்கை அளித்த கொடையான, மூலிகைக் குணம் உடைய குச்சிகளை நம் முன்னோர்கள்  பல் துலக்கப் பயன் படுத்தியதால், அவர்களைப் பல் சார்ந்த நோய்கள் எதுவும் அண்ட வில்லை !

வேறு சில காரணங்களால், ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் சொத்தைப் பல் அக்காலத்தில் காணப்பட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன ?

பற்களுக்குப் பகையாக இருப்பவை நான்கு ! அவை (1) உண்ணப்படும் இனிப்புப் பொருள்கள் (2) அடிக்கடி வாய் கொப்பளித்து வாயைத் தூய்மைப் படுத்தாமை  (03) பற்பசையில் உள்ள வேதிப் பொருள்கள் (04) பல் துலக்கும் தூரிகை !

சரி ! இனிப்புப் பண்டங்கள் எப்படிப் பற்களுக்குப் பகையாகிப் போகின்றன ? காரம், துவர்ப்பு போன்ற மற்ற சுவையுள்ள பண்டங்களை விட இனிப்புச் சுவையுள்ள பண்டங்கள் விரைவாகக் கெட்டுப் போகும். தீமை விளைவிக்கும் நுண்ணியிரிகளின் பிறப்பிடமாக விளங்குபவை இனிப்புப் பண்டங்கள் !

பலகாரக் கடைகளில் விற்கப்படும் இனிப்புப் பண்டங்களை வாங்கி வந்து உண்கிறோம். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பது இல்லை. இதனால் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள இனிப்புப் பண்டங்களின் துணுக்குகள், விரைவாகக் கெட்டுப் போய் நுண்ணுயிரிகளின் வனைவு (தயாரிப்பு)க் கூடமாக மாறிவிடுகிறது !

இந்த நுண்ணுயிரிகள் பற்களின் குழிந்த பகுதிகளில் தங்கி ஒருவகைக் காடியை (அமிலத்தை)ச் சுரக்கச் செய்கிறது. இந்தக் காடி பற்களின் புறப்பகுதியை அரிக்கும் தன்மை கொண்டவை ! இத்தகைய அரிப்பு தான் சொத்தைப் பல்லின் தொடக்கம் !


முற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டில் இனிப்புப் பலகாரம் செய்வார்கள். திருமண நிகழ்வுகளின் போது இனிப்புகள் செய்வார்கள். அவ்வளவுதான் !  எனவே இனிப்புச் சாப்பிடுவது என்பது மிக அரிதாகவே இருந்தது !

இப்போது நாம் உண்ணும் இனிப்புக்கு / இனிப்புப் பொருள்களுக்கு அளவே இல்லை. பலகாரக் கடைகளில் வாங்கி வரும் தீங்குழல் (ஜாங்கிரி), தேம்பாகு (அல்வா), பாற்கிளரி (பால்கோவா) போன்றவை அல்லாமல், தேனீர், குளம்பி (காப்பி) வாயிலாகவும் நிரம்பவும் இனிப்பு உண்கிறோம் !

இவையன்றி, மாச்சில் (BISCUIT), கன்னற்கட்டி (CHOCOLATE) என நாம் உண்ணும் இனிப்புப் பண்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை ! ஒரு கன்னற்கட்டியைச் சுவைக்கிறோம். சுவைத்த பிறகு வாயைக் கொப்பளிப்பதில்லை. வாயில் தங்கி இருக்கும் கன்னற்கட்டியின் எச்சம், நுண்ணுயிரிகளுக்குத் தீனியாகிறது. அப்புறம் என்ன ? பற்களின் புறப்பகுதி அரிப்புக்கு இலக்காகிறது !

எந்த இல்லத்தில் இனிப்புப் பொருள்களின் புழக்கம் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இல்லத்தினர் பல் மருத்துவருக்கென இப்போதே உண்டியல் வைத்துப் பணம் சேர்த்து வாருங்கள் !

வாய் என்னும் சுரங்கத்திற்குள் என்னவெல்லாம் கொட்டப்பட்டு உள்ளே தள்ளப்படுகின்றன என்பதற்குக் கட்டுப்பாடும் கிடையாது; யாரும் கணக்கு வைத்துக் கொள்வதும் கிடையாது ! ஆனால்.. உரையாடும் நேரம் தவிர உண்டல், உறிஞ்சல், விழுங்கல், சுவைத்தல், கடித்தல், கொறித்தல், சப்பல், என பல செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை !

வீட்டில் இருக்கும் பொறியுரல் (WET GRINDER) போன்ற அரைவை எந்திரங்களைக் கூடத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் வாய் என்னும் அரைவை ஆலையை   தூய்மையாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை ! உணவு உண்கின்ற  மூன்று வேளைகளில் மட்டும் வாயைப் பெயரளவுக்கு  கொப்பளிக்கிறோம்; ஆமாம் பெயரளவுக்குத் தான் கொப்பளிக்கிறோம் ! உணவுத் துணுக்குகள் போகுமளவுக்கு முழுமையாகக் கொப்பளிப்பதில்லை ! நொறுவைத் தீனிக்குப் பிறகு கொப்பளிப்பதே இல்லை !

தேநீர், குளம்பி போன்ற குடியங்களை (DRINGS) அருந்திய பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். எந்த மனிதரும் இவ்வாறு செய்வதில்லை. குடியங்களின் (DRINKS) எச்சம் வாயில் இருக்கும் வரை நுண்ணியிரிகளுக்குக் கொண்டாட்டம் தானே !

எதை உண்டாலும், எதை அருந்தினாலும் அல்லது எதைக் கொறித்தாலும் உடனே நன்றாக வாய் கொப்பளித்துத் துப்பும் பழக்கம் இருக்குமாயின் பற்சொத்தை நம்மை ஏறிட்டும் பார்க்காது ! நம்மை அணுகவும் அச்சப்படும் !

நாகரிக வாழ்க்கை என்று சொல்லி, பல்துலக்கும் குச்சிகளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டோம். பற்பசையை வழக்கிற்குக் கொண்டு வந்து விட்டோம். பற்பசையில் ஆலங்குச்சி, அரசங்குச்சி போல் மூலிகை மருந்துச் சத்துகளா இருக்கின்றன ? அதில் இருப்பவை அத்துணையும் வேதிப் பொருள்கள் (CHEMICALS) ! இந்த வேதிப் பொருள்கள் பற்களை அரிமானத்திற்கு  இலக்காக்கி, ஈறுகளை இளக்கி, நம்மையெல்லாம் பல் மருத்துவர்களிடம் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன !

உண்மை தெரியாமல் நாம் பல்வலிக்கும் பற் சொத்தைக்கும் இடங்கொடுத்து வருகிறோம். இந்தப் பற்பசை தன்னை வனைந்து தரும் (தயாரித்து) நிறுவன முதலாளிகளையும், பல் மருத்துவர்களையும் மறைமுகமாகப் பணக்காரர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறது; நாம் பணத்தைச் செலவழித்துவிட்டு ஏழைகள் ஆகிக் கொண்டிருக்கிறோம் !

பற்பசையைப் பல் இடுக்குகள் முழுவதும் கொண்டு சேர்த்து, அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் உணவுத் துகள்களையும் நுண்ணுயிரிகளையும் அப்புறப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு  பல் தூரிகையை (TOOTH BRUSH) நாம் பயன் படுத்துகிறோம். பல் தூரிகை இப்பணிகளைச் செய்கிறதோ இல்லையோ,  பற்களின் புறப்பகுதி தேய்ந்து போவதில் பெரும் பங்கு வகிக்கிறது !

குடிமக்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு செய்து, மக்களை எச்சரிக்க வேண்டிய அரசுகள் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கின்றன ! நாமும் நோய்க்காகப் பெரும் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறோம் !

பல்நோய் வராமல் தடுக்கவும், போலி நாகரிகத்துக்கு இடம் தராமல் தவிர்க்கவும் உறுதியாக விரும்புவோர், பற்பசை கொண்டு தூரிகையால்  பல் துலக்கும் வழக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மூலிகைக் குச்சிகளுக்கு மாறுங்கள்; குறிப்பாக உங்கள் பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை இப்போதே பல் நோயிலிருந்து காப்பாற்ற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் !

நகர வாழ்வுக்குப் பழக்கப் பட்டுப்போன மக்கள் மூலிகைக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கத்திற்கு மாறுவது என்பது அவர்களைப் பொறுத்தவரைக் கடினமான செயலே ! என்ன செய்வது ? பற்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை எழாமலிருக்க வேண்டுமானால், மாறித் தான் ஆக வேண்டும் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, ஆடவை (ஆனி),15]
{29-06-2020}

----------------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------