name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், ஜனவரி 29, 2020

பெயரியல் ஆய்வு (04) - மீனாட்சி !

கயற்கண்ணி என்னும் பெயரை மீனாட்சி ஆக்கி மகிழ்கிறோம் !



பண்டைத் தமிழர்களின் கடவுட் கொள்கை அறிவியல் அடிப்படையிலானது. ஒளியை உமிழ்வது சூரியன்; சூரியன் இல்லாவிட்டால் ஒளியுமில்லை; வெப்பமும் இல்லை; ஒளியும் வெப்பமும் (தீ) இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை !


இந்த அடிப்படையில் கதிரவனை வணங்கினர்; கதிரவனின் ஒளியையும் வெப்பத்தையும் விளக்கின் சுடரில் கண்டனர். இதிலிருந்து சுடர் வழிபாடு (தீப வழிபாடு) தோன்றியது. இதைத்தான், “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சோதியாகிஎன்று தாயுமானவரும், “அருட்பெரும் சோதி !” என்று வள்ளலாரும் போற்றினர் !


நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்என்றார் சிவவாக்கியர். இறையாற்றலுக்கு  உருவமில்லை; கற்சிலைகளில் அஃது இருப்பதில்லை; உன் மனதிற்குள் இறையாற்றல் இருக்கையில், அதைத் தேடி நீ எங்கெங்கோ அலைகிறாயேஎன்றார் மானிடனைப் பார்த்து !


ஆரியரின் கடவுட் கொள்கை நம்பிக்கை அடிப்படையில் ஆனது. ”எல்லாம் வல்லவன் இறைவன்; அவனை வழிபட உருவம் தேவை; அவன் கோயிலில் மட்டுமே குடிகொண்டிருப்பவன்; அவனுக்கு ஆயிரமாயிரம் உருவங்கள் உண்டு; அவனுக்கு மனைவி மக்கள், விருப்பு, வெறுப்பு எல்லாம் உண்டுஎன்பது ஆரியர்களின் கொள்கை !


கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்திற்குள் நுழைந்த ஆரியர்கள் மெல்ல மெல்ல தமிழர்களிடம் அவர்களது கடவுட் கொள்கையைப் புகுத்தினர். அதன் பல்படி வளர்ச்சியே ஊருக்கு ஒன்பது கோயிலும், விதம் விதமான கடவுள் உருவங்களும் இலங்கும் இன்றைய நிலை !


கடவுள்களைப் பற்றிக் கணக்கிட முடியாத அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி மக்கள் மனதில் ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டனர் கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற ஆரியர்களும், அவர்களுக்கு அடிமையாகிப் போன பல தமிழர்களும். அவர்கள் உருவாக்கிய சடங்குகளில் ஒன்று தான் மீனாட்சித் திருக்கல்யாணம் !


மீனாட்சிசொக்கநாதர் படிமைகள் இருக்கும் கோயில்களில் ஆண்டு தோறும் மீனாட்சித் திருக்கல்யாணம் என்று ஒரு சடங்கினை நடத்துகின்றனர். வேள்வித் தீ வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஒரு ஐயர் மீனாட்சி அம்மனின் படிமைக்குத் தாலி கட்டுகிறார். ஒரு மனிதன், அவன் வணங்கும் தெய்வத்திற்குத் தாலி கட்டுவதா ? தாய்க்கு ஒரு தனயன் தாலி கட்டுவது போறதல்லவா இச்செயல் ? தாலிகட்டும் ஐயர் மீனாட்சி அளவுக்குத் தெய்வமாக உயர்ந்து விட்டாரா அல்லது தெய்வம் மனிதன் அளவுக்குத் தாழ்ந்து விட்டதா ?


ஆரியர்கள் உருவாக்கிய கதைகளும், சடங்குகளும், மனிதப் பண்புகளுக்கு அப்பாற்பட்டவை ! அது போகட்டும் ! மீனாட்சி என்பது அழகிய தமிழ்ப் பெயர் போன்றல்லவா தோற்றமளிக்கிறது ! அஃது உண்மை தானா ?  மீன் + ஆட்சி = மீனாட்சி. வடமொழியில்அக்க்ஷம்என்பது தமிழில்அக்கம்என வழங்கப்படுகிறது. “அக்க்ஷம்என்ற சொல்லுக்குக்கண்என்று பொருள். உருத்திரன் + அக்க்ஷம் = உருத்திராக்க்ஷம் என்பதை நோக்குக !


அக்க்ஷம்உடையவள்அக்க்ஷி”; மீன் + அக்க்ஷி = மீனக்க்ஷி = மீனாக்க்ஷி. வடமொழியில் உள்ள மீனாக்க்ஷி என்ற பெயர் நமது அக்காலப் புலவர்களால்மீனாட்சிஎன்று தமிழ்ப் படுத்தப் பட்டுவிட்டது. மீன் = கயல்; அக்க்ஷி = கண்ணி (கண் உடையவள்) எனவே மீனாட்சி = கயற் கண்ணி !



------------------------------------------------------------------------------------------------------------


                     மீனாட்சி.......................= கயற்கண்ணி, கயல்விழி
                     மீனாட்சி.......................=அங்கயற்கண்ணி (அழகிய மீன் 
                                                                   போன்ற கண் உடையவள்)
                     மீனாட்சி.......................= கண்ணம்மை
                     மீனாட்சியம்மை.......= கயற்கண்ணியம்மை
                     மீனா...............................= கயல்
                     மீனு.................................= கயல்விழி
                     மீனாட்சி சுந்தரன்.....= அழகிய நம்பி


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)15]
{29-01-2020}

------------------------------------------------------------------------------------------------------------

     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------