name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, ஜனவரி 25, 2020

வரலாறு பேசுகிறது (20) முனைவர்.மு.வரதராசனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பேராசிரியர் மு.வரதராசனார் !


தோற்றம்:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் வரதராசன் பிறந்தார். தந்தையார் பெயர் முனுசாமி முதலியார். தாயார் அம்மாக்கண்ணு அம்மையார். வரதராசனுக்கு இளமையில் பெற்றோர் சூட்டிய பெயர் திருவேங்கடம்; எனினும் அவரது பாட்டனாரின் பெயராகிய வரதராசன் என்னும் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது !

பள்ளிக் கல்வி:

வரதராசனின் தொடக்கக் கல்வி வேலூர் மாவட்டம், வாலாசாபேட்டையை அடுத்த வேலம் என்னும் சிற்றூரில் தொடங்கி வளர்ந்தது. பின்பு உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் தொடர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்றார்  வரதராசன் !

தமிழ் கற்றல்:

பின்பு சிறிது காலம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்தார் ! இவ்வாறு அவர் பணியாற்றுகையில் அவருக்கு உடல் நலம் குன்றியது. ஆகையால் பணியை விட்டு விலகி, சிறிது ஓய்வுக்குப் பின் திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார் !

வித்வான் தேர்வு:

1931 ஆம் ஆண்டு தமிழில்வித்வான்முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 ஆம் ஆண்டில் தமது 23 -ஆம் அகவையில் வித்வான்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்வு பெற்றார் !

திருமணம்:

தனது மாமன் மகளான இராதா என்னும் மங்கையை 1935 –ஆம் ஆண்டு வரதராசன் மணந்துகொண்டார்..  இவ்விணையருக்குத்  திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண்மக்கள் பிறந்தனர் !

தமிழாசிரியர்:


திருப்பத்தூர் உயர்நிலைப் பள்ளியில் 1935 முதல் 1938 வரை மூன்று ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்பு 1939 –ஆம் ஆண்டு தனித் தேர்வராகத் கீழை மொழி வாலைத் (B.O.L) தேர்வெழுதி பட்டம் பெற்றார் !

விரிவுரையாளர்:

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1939 –ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பொறுப்பில் இணைந்தார்.. “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து 1944 ஆம் ஆண்டு கீழைமொழி மேதைப் (M.O.L) பட்டம் பெற்றார் !

பேராசிரியர்:

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து வருகையில், “சங்க இலக்கியத்தில் இயற்கைஎன்னும் தலைப்பில் 1948 ஆம் ஆண்டு ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில்முனைவர்பட்டம் பெற்றார். தனது பணியை பச்சையப்பன் கல்லூரியிலேயே தொடர்ந்த வரதராசனார், 1939 முதல் 1961 வரை 22 ஆண்டுகள் பேராசியராகவும், தமிழ்த் துறைத் தலவராகவும் பணியாற்றினார் !

துணைவேந்தர்:

1961 முதல் 1971 வரை பத்தாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். இவரது சீரிய பணிகள் அரசினரைக் கவர்ந்ததால், 1971 ஆம் ஆண்டு மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக அமர்வு செய்யப் பெற்றார் ! 1974 வரை இப்பொறுப்பில் இருந்தார் !

பிற பணிப் பொறுப்புகள்:

இவர், சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழு (SENATE) உறுப்பினராகவும், கேரள, மைசூர், உசுமானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அமெரிகாவின் உசுட்டர் பல்கலைக் கழகம் இவருக்குஇலக்கியப் பேரறிஞர்” (D.Lit) என்ற சிறப்புப் பட்டத்தை 1972 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்புச் செய்தது !

பன்மொழிப் புலமை:

வரதராசனார் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய் மொழிகளில் தேர்ச்சி பெற்று பன்மொழிப் புலமை பெற்றிருந்தார். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு, தேடிச் சென்று பண உதவிகளைச் செய்து வந்தார். இத்தகைய பண உதவியை அடுத்தவர் அறியா வண்ணம் கமுக்கமாகச் செய்வதையே அவர் விரும்பினார் !

படைப்புகள்:

புதினங்கள், சிறு கதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, மொழி பெயர்ப்பு, முன்னுரைகள், மேற்கோள்கள் என 91 நூல்களைத் தமிழுக்குத் தநதுள்ள பெருமகனார் முனைவர்.மு.வரதராசனார் !

புகழ் பெற்ற புதினங்கள்:

மு.. எழுதிய செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, தமிழ் நெஞ்சம், அந்த நாள், பாவை, மணல் வீடு, பெற்ற மனம், அல்லி, கரித் துண்டு, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு, வாடாமலர், மண்குடிசை, கி.பி. 2000, கயமை, ஆகிய நூல்கள் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த புதினங்கள் !  காலத்தால் கருகாத வாடாமலர்கள் !

இவரது திருக்குறள் தெளிவுரையை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. மு.. தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றைத் தனது சொந்த நிறுவனமான தாயகம்வழியாகவே வெளியிட்டார் !

திறமைகளின் கருவூலம்:

நல்லாசிரியர், சிறந்த பண்பாளர், சமுதாயச் சிற்பி, மாபெரும் சிந்தனையாளர், மொழி ஆய்வறிஞர் போன்ற பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் மு.வரதராசனார். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை நிலையாக ஏற்படுத்திக் கொண்டுள்ளார் !

மறைவு:

இத்தகைய மாமனிதர் 1974 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் தமது 62 ஆம் அகவையில் நம்மிடமிருந்து மறைந்தார். அவரது பூதவுடல் மறைந்தாலும், அவர்தம் புகழ் என்றென்றும் நம்மிடையே நிலைபெற்று இருக்கும் என்பதில் ஐயமில்லை !

முடிவுரை:

உழைப்பால் உயர் நிலையை அடைந்தவர்களுக்கு எடுத்துக்காட்டு முனைவர். மு. வரதராசனார். எத்துணையோ தமிழ்ச் சிற்பிகள் புதினங்களைப் படைத்து இருக்கிறார்கள். ஆனால் நூலகத்தைத் தேடிச் சென்று அமர்ந்து புதினம் படிக்கும் ஈர்ப்பை மக்களிடையே ஏற்படுத்திய எழுத்துக்குச் சொந்தக்காரர் வரதராசனார் என்றால்  அது மிகையில்லை !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)11]
{25-01-2020}

-----------------------------------------------------------------------------------------------------------
     
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------